இந்திய அரசியலின் விவேகானந்தர்
மோடி – ஈரெழுத்து மந்திரச் சொல். மோடி அலை- கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியலில் ஏற்பட்ட பருவமாற்றத்தால் பா.ஜ. கடலில் எழுந்த அலை. இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலின் ஆழ்ந்த அமைதியாய் குஜராத்தில் தம் பணியின் கர்மாவில் கரைந்து கொண்டிருந்த திரு. மோடி அவர்களை இந்தியாவுக்காக பணிபுரிய ஒரு பேரலையாய் உருவெடுக்க வைத்தது காலத்தின் கர்மா.
அப்படி எழுந்த ஒரு பேரலை வாரணாசி வேட்புமனு தாக்கலில் ஒரு ஆழிப்பேரலையாய் உருவெடுத்து தேர்தல் தீர்ப்பில் விஸ்வரூப தரிசனமாய் உலக அரங்கில் திரு. மோடி அவர்களை உயர்த்திப் பிடித்தது.
இந்திய நிலப்பகுதியில் உயர எழுந்து சுழற்றி அடித்த சுனாமியில் காணாமல் போனவர்கள் பலர். அவர்கள் வேறு யாருமில்லை. பணம் என்னும் பேய் பிடித்து ஊழல் வாதிகளானவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் , அதிகார ஆணவத்தில் பதவி போதையில் அற்ப சுகம் கண்டவர்கள். “பாரதத்தில் கௌரவர்கள் போல் நம் பாரதத்தில் இவர்கள்”.
நம் பாரத நாட்டில் நடந்து முடிந்தது வெறுமனே தேர்தல் மட்டுமல்ல. கத்தியின்றி இரத்தமின்றி ஜனநாயக வழியில் நடைபெற்ற மீண்டும் ஒரு குருஷேத்திர போர். நாட்கள் தான் பதினெட்டை தாண்டிவிட்டது.
பலரது கொட்டங்கள் அடக்கப்பட்டுவிட்டன. மெகா ஊழல் வாதிகளெல்லாம் மெகா தோல்வி அடைந்து விட்டனர். மதப்பெயரின் கட்சிகளுடனேயே கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற கட்சி என்ற முகமூடிகளெல்லாம் கிழித்தெறியப்பட்டுவிட்டன.
திரு.மோடி அவர்களின் நேர்மைக்கு முன் இவர்களின் வாதங்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. திரு.மோடி அவர்களின் உணர்ச்சிமிகு, அர்த்தம்மிகு ,ஆழ்ந்த கருத்துமிகு வாசகங்களுக்கு முன்னால் தீயவர்களின் சுவாசம் மூச்சிறைத்து போய்விட்டது.
வரலாற்றுமிகு வெற்றிக்குப் பின்னும் திரு.மோடி அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் வெற்றிப்போதையின் தொனி சிறிதும் புலப்படவில்லை. மாறாக இந்திய நாடு, இந்தியநாட்டு மக்கள் , இந்திய நாட்டின் வளர்ச்சி இவையே அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அரசியலில் மூத்தோர்க்கு, தன் குருவிற்கு தகுந்த மரியாதை செலுத்துவதிலும் ; அரசியல் அறிவில் அவர்களைவிட மிகுந்த ஞானம் இருந்தும் அதை ஒருபோதும் தலைக்கனமாக ஏற்றாது; இந்தியாவில் இளைஞர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருப்பது வரை….
மாண்புமிகு பாரதப்பிரதமர் உயர்திரு. நரேந்திரதாஸ் மோடி அவர்கள் மேற்கூறிய அத்துணை குணங்களையும் தன் ஆன்மீக வாழ்க்கையில் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தரை நம் கண்முன் கொண்டுவருகிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் நம் பாரதத்தாய் பெற்றெடுத்த அந்த நரேந்திரன்( விவேகானந்தருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர்) இந்தியாவின் ஆன்மீகத்துக்கு தன்னை அர்ப்பணித்த விவேகானந்தர்.
இருபத்தோறாம் நூற்றாண்டில் நம் பாரதத்தாய் பெற்றெடுத்த இந்த நரேந்திரன் இந்தியாவின் அரசியலுக்கு தன்னை அர்ப்பணித்த விவேகானந்தர் என்பதில் எள் அளவும் ஐயமில்லை . டாக்டர். அப்துல்கலாம் தன் விஞ்ஞானக் கண்களால் கண்ட கனவும் விரைவில் நனவாகும் என்பதிலும் சிறிதும் ஐயமில்லை. வாழ்க பாரதம். “ஜெய்ஹிந்த்”.
-- மலைமன்னன்