தத்தரிகிட தத்தரிகிடபயண அனுபவம்

பயணிப்பது அனைவருக்கும் பிடித்தமானதுதான்....ஆனால், பிடித்த பயணம் எத்தனை பேருக்கு அமைகிறது.....?

தீராத பாதையின் முன் ஒரு நீண்ட கனவாய் ஊர்கிறது ஆழ் மன பயணம். பின்னோக்கி பயணிக்கத் தொடங்கிய அதே மரங்களை ஒரு போதும் முன்னால் காணச் செய்வதில்லை எந்த பயணமும்.

திசையறியா பறவையின் வானமெங்கும் பாதைகளே...இலக்கில்லா பயணத்தில் பாதையெங்கும் போதிகளே....

போதி கொண்ட போதைகளை உணருவது மீண்டும் சித்தார்த்தன் ஆவது. காடு மலை தவம் தாண்டியது பயணம். தேகம், தாகம் வேகம் கடந்தது தவம்....

கடக்க கடக்க ஒன்றுமில்லை பாதையில். மையில் கல்லாய் மந்திரித்து விட்ட மாயம் ஒன்று முகம் திருப்பி அமர்ந்திருப்பதை, இளைப்பாறுதல் பெரு மூச்சு விடுகிறது....சாலையின் தூரத்தில் கானல் நீரில் மிதந்து வரும் எதிர் நோக்கும் வாகனம் ஒன்று கப்பலாக வரம் வாங்கிய கணம், கண்களில் கவிதை பிழை... பிழைகளின் புன்னகை, புருவம் கட்டிக் கொண்டு, பின் உருண்டு தற்கொலை செய்யும் வியர்வைத் துளியாய் கூடு பாய்கிறது.....

தேகம் முழுக்க, வாகன அதிர்வு. யோகம், அதற்கும் பயண சிந்தனை....செவ்வக வெள்ளைச் சுவடுகள், பயணங்களின் பாதங்களாய் கடவுளை விதைத்து செல்கிறது. சாலையோர மரங்களில் சரித்திரம், அனல் காற்றை வீசுகிறது. சாலையோர உணவகங்களில், பசி சாத்திரம் தூற்றுகிறது....மொழி, மதம்,இனம் எதுவுமில்லை. பயணம் என்றொரு ஒற்றைச் சொல் எல்லாம் கடக்கச் செய்கிறது. நிஜமாகவே ஒரு புது விடியலில், தொடுவானம், 'தொட்டுக்கோ' என்று தன் விரல் நீட்டியது. மறைவேனா என்றது, நிலவானவள். மறையாதே என்றது, பகலவன்.

போக போக, போகவேயில்லை தூரம். போன பின்பும் தீரவேயில்லை வானம். பேய் பிடித்த சாலையில் ஜோடி நிலவுகள். கடந்து போகும் கண்களில் மிஞ்சிக் கிடந்தது நிலவுகளின் நீட்சி. அப்படியே நித்திரையின் ஆட்சி. இருநூறு பாட்டுக்களை கடந்த மனநிலையில், மனம் உடைந்து கத்தியது. குரலெங்கும் சுதந்திரம். ஜன்னலில் காட்டிய முகத்தில் தாளமிடும் காற்றின் வந்தனம். அது பயணங்ங்களின் நந்தவனம்....

முறுக்கிய மீசையும், சுருட்டிய தாடியும், பரட்டை தலைமுடியும், ஏற்றிவிட்ட அரைக்கை சட்டையில், ஏற்றிக் கட்டிய லுங்கியில், சில நேரம் நண்பனைத் தள்ளி உட்காரச் சொல்லி, அத்தனை பெரிய லாரியை நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றது, நெருடாவின் ஹைக்கூவில் ஒளிந்து விளையாடுவது போன்றது..... காப்ரியெலின் வரிகளில் மீனாய் நீந்துவது போன்றது. பாரதியின் தீக்குள் விரலை விட்டால், நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா, என்பது போன்றது.....

தத்தரிகிட தத்தரிகிட, என்று கத்திக் கொண்டே, காற்றைக் கிழித்த பயணம், சட்டென சிறகு முளைத்து வானம் நோக்கி பறப்பதாக தோன்றியது... கட்டவிழ்ந்த காட்டாற்றின் கைகளில் சிறு இலையின் பாடு, பரவசம்... துளி விசமாய் அவளின் நினைவுகள், பயணமெங்கும் ஆப்பிள் விதைத்தது கவிதைகளின் உச்சம்....

நன்றாக விடிந்த பின், மெல்ல எழுப்பினான் நண்பன்..... கன்னியாகுமரி, இடம் மாறி எனைச் சேர்ந்திருந்தது...... கையில் தட்டுப் பட்ட மது பாட்டிலை அனிச்சையாய் நகர்த்தி விட்டு மெல்ல எழுந்தேன்....

பயணங்கள் முடிவதில்லை.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (30-May-14, 6:01 pm)
பார்வை : 166

மேலே