அறிந்தும் அறிவிலிகளாய் - வினோதன்

விதை சட்டையுறித்து
தாள் நீட்டும் நாளில்
துள்ளிக் குதிப்பதில்லை
மாறாக - வேரூன்றி
அசைவதே கடனென
சுவாசிக்கத் துவங்குகிறன
தாவரக் குழந்தைகள் !

கரித்துகள் காடாக
நாட்டை ஆக்கிய நாம்
தூசிகண்டால் - நாசி
மறைக்கவோ - தள்ளி
நிற்கவோ விழைகிறோம் !
அவைதம் நிரந்தரக் காலை
தரைக்குத் தரைவார்த்தபின்
மாற்றுவழிக்கு எங்குபோகும் ?

திருடர்களுக்கு எண்
ஒதுக்கும் நாம் - சாலையோரம்
ஒதிங்கி நிற்கும் அவைகளுக்கு
அவற்றின் மேலேயே - எண்
செதுக்குகிறோம் - திருடப்
படாமலிருக்க - வலிக்காதா ?
நாதமற்றது என்பதலாயே
அது நாதியற்றதாகிவிடுமா ?

உட்கார படுக்க பாதுகாக்கவென
காரணங்களை கைகாட்டி
நீர் குடித்து கொழுத்த மரங்களை
வேரோடு கொய்கிறோம் !
நாம் குடிக்க நீர்தருவது
அவையேனும் - ஆபத்தை
அறிந்தும் அறிவிலிகளாய் !

மரங்களின் மரணிப்பின்போது
அவையொன்றுகூடி அழுவதில்லை !
மாறாக அவை - மேகங்களின்
அழுகையை நிறுத்துகின்றன !

ஒவ்வொரு மரம்
வெட்டப்படும் போதும்,
நம் மரணம் நடப்படுகிறது
என்றவுண்மை எப்போது
நம் காதுகளில் கிளைவிடும் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (1-Jun-14, 7:10 pm)
பார்வை : 122

மேலே