என்னமோ போங்க

24 மணிநேரத்தில்
விரும்பிய நாடுசென்று
திரும்பியும் விடலாம்...
போக்குவரத்து வளர்ந்துவிட்டது..!

சென்றுவர நேரமில்லையா...?
வீட்டில் இருந்தபடியே
வெளிநாட்டவருடன்
முகம்பார்த்து உரையாடலாம்...
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது...!

மசக்கை இல்லை...
மாங்காய் சாம்பல் தேவையில்லை...
பத்துமாதம் சுமக்காமலேயே
குழந்தைகள் பெறலாம்...
மருத்துவம் வளர்ந்துவிட்டது...!

விண்வெளியில் தங்கியிருந்து
விந்தைகள் புரியலாம்...
விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது...!

வங்கக் கடலை
விற்பதாகச் சொன்னால்
வாங்க முனைவோர் பட்டியல்
சிலமணி நேரத்தில்
தயாராகிவிடும்....

இந்துமகா சமுத்திரத்தை
சேர்த்துக்கேட்டாலும்
வியப்பதற்கில்லை...
பொருளாதாரம் வளர்ந்துவிட்டது...!

"தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்"
இளைய பாரதிகள் மீது
பயமோ என்னவோ
வேளாண்மையும் வளர்ந்துவிட்டது...!

இன்னும் இன்னும்
எவ்வளவோ வளர்ந்துவிட்டது...!

வள்ளுவம் வரையப்பட்ட
இந்தப் பூமியில்
எல்லாமே வளர்ந்தாலும்
பெருமைப்பட முடியவில்லை...

என்ன செய்ய..?
எல்லாமே வளரும்போது...
மனசு மட்டும்
சுருங்கிவிட்டதே...!

- இராசகோபால் சுப்புலட்சுமி

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (2-Jun-14, 5:39 pm)
Tanglish : ennamo ponga
பார்வை : 113

மேலே