மீண்டும் அகரம்மார்ச் 2014 - ஒரு பார்வை

மீண்டும் அகரம்...... மீண்டும்......

மூச்சு முட்டியும், சிரிக்கத் தோன்றியது.......... இனிப்பு கடைக்குள் இலவசமாய் நுழைந்து விட்ட சிறுவனைப் போல.... அந்த பக்கம் இந்த பக்கம் என்று எந்த பக்கம் திரும்பினும் பக்கம் பக்கமாய் விரிகிறது இனிப்பு....... இனிப்பில் கசப்பும் இருக்கிறது.. அது மருந்து.... விருந்து செரிக்க....

தலையங்கத்திலேயே....அணுகுண்டு வெடிக்கிறது..... நிஜம் அப்படித்தான் வெடிக்கும் என்பது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு தெரியாது ....

நம்மாழ்வாரின் தாடிக்குள் புதைந்து கிடந்த ரகசியத்தை கிருங்கை சேதுபதி.... மெல்ல அவிழ்த்து, ஆகாயம்..... சரியான நேரத்தில் மழை தரும் வித்தையை நாம் கலைத்து கொண்டிருப்பதை பொட்டில் அடித்தாற்போல் உடைத்தார்..

"அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல...."- நாம் எல்லாவற்றையும் மாற்றித்தானே வைத்திருக்கிறோம்... மாற்றி யோசி என்பதையும் மாற்றி யோசித்து.....

இயற்கையின் ஜன்னலை அடைத்தால் அது மானுடத்தின் கதவை சாத்தும் என்பது விதி.... விதி வலியதை...விழிகள் காணத் துவங்கி விட்டது.. இனியும் விழியில் விழுந்த உலகமயமாக்கலின் திரையை விலக்கவில்லை என்றால்...?------------இனி நம்மாழ்வாரும் இல்லை.....

உடைந்த ரகசியம்....உண்மையின் கசாயம்.....

கவிதை எழுதுவது தான் நான் அனுபவிக்கும் முதல் பேரின்பம்- என்கிறார்.... மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன்.... கேட்கவே.... பேரின்பமாக இருக்கிறது..... கவிதை எழுதும் போதும் உயிர் விடுதல் எனக்கு மறு பிறப்பு..... மறு பிறப்பிலும் எழுத வேண்டும் என்பது போன ஜென்ம வரம்.... எழுதி தீர்தலின் இன்பம்.... அதை எழுதவே முடியாது......

இந்திய இலக்கியம் வாழ்ந்து செழிக்கிறது என்கிறார் தீர்க்கமாக......
அதிநவீன படைப்புகளை விரும்புவதாக கூறுகிறார்...கவிஞர்.
நவீனம்...... என்பது எதிர்காலம்.... எதிர்காலமே நம்பிக்கை.... நம்பிக்கை என்பது நாளைய தேடல்.. தேடலின் கயிறுகள் படைப்புகளின் முடிச்சுகளில் இருந்தே தொடங்குவதாக எழுதிச் செல்லும் பறவையின் படைப்பாய்......எனது பார்வை அவரின் அனுபவத்தை மேய்கிறது....நிஜமாக கூறினால்., இப்படி ஒரு கவிஞர் இருக்கிறார் என்றே நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.... வாய்ப்பை 'மீண்டும் அகரம்' வாசலில் வைத்திருக்கிறது ..... எத்தனை நன்றியைக் கூறினாலும் நமது அகன் அய்யா அவர்களுக்கு, அது குறைவுதான்....கவிதை, வாசகனை..... சிந்திக்க வைத்து.... அவனை ஒரு அதிசய உணர்வுக்குள் கொண்டு செல்கிறது. மாயங்கள் இல்லாத காட்சிகள் எங்கும் இல்லை..... அதைத் தொலைத்துக் கொண்டு இருக்கும் மனிதனை.... உணர்வுபூர்வமாய்.... உயிர் பெற செய்கிறது.....என்கிறார்.

படித்து முடித்து விட்டு கண் மூடி யோசிக்கையில்..... ஆம்..... நாம் மூன்றாம் உலகப் போருக்கான வேலையை மட்டும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.... என்று நொந்து கொண்டேன்....உயிரை எப்படி புரிந்து கொள்ள முடியாதோ அப்படி கவிதையையும் புரிய முற்படுவதே எழுதும் கவிதைகள் அனைத்தும்..... அது தன்னை கால சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று முடிக்கிறார்......

ஆம்.... கவிதை......க்குள் இருக்கும் விதையை ஒரு போதும் பார்க்கவே முடிவதில்லை.... இல்லையா....!

என்ன வேலை இருக்கிறது வேறாக...? உலகாளும் உத்தமனை கொன்று விட சொல்லும்.... வரிகளில் நிழலாய் மிதந்து கொண்டு இருக்கும் நீரில், குமிழ்கள் கண்ணுக்கு தெரியாத தோட்டாக்கள்... பச்சிப்பன் அவர்கள், அமைக்காத உலகை... உலக்கை கொண்டு தட்டுகிறார்.......

தட்டுங்கள் திறக்கப் படும் என்பது நம்பிக்கை....உடைத்தால் தான் திறக்கும் என்பது தன்னம்பிக்கையாக மாறும் சூழலை....உலகே சொல்லித் தருகிறது......

உலகம் அப்படித்தான்...

இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம் என்று தலைப்போடு சுப்ரபாரதிமணியன் அவர்கள் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நூலை நமக்கு அறிமுகப் படுத்துகிறார்....... நூலின் ஆசிரியர் காப்ரியேல் கார்சியா மார்க்ஸ்..... இந்த பெயரிலேயே ஒரு மாயமும் மாய தோற்றமும் இருப்பதை காண முடிகிறது எனக்கு....

கற்பனையின் உச்சமும் எதார்த்தமும் கலந்து உருவாகும் புனைகதை காவியத் தன்மை பெறுகிறது என்கிறார் சுப்ரபாரதிமணியன் அவர்கள்...மாய யதார்த்தம், பேய் பிடித்து தலை ஆட்டிக் கொண்டிருக்கும் மனங்களை சாந்த படுத்தும் யுக்தியாக எனக்கு தோன்றுகிறது.....மனிதன் நினைவிழந்து போவது, எத்தகைய மனநிலையை தோற்றுவிக்கும் என்பதை கற்பனை செய்து அதனூடாக ஒரு பார்வை விரிந்தால், அதில் நம் விருப்பம், ஒரு கதாபாத்திரமானால், அந்த கதாபாத்திரம், வண்ணங்கள் சுமக்கும் பறவையானால்..... அதில் ஒரு நினைவு பிறக்கும்தானே....! அது ஒரு நாவலுக்கான கதையாகிறது...அந்த கதையின் முதல் பக்கத்தில் காப்ரியேல் சிரித்துக் கொண்டு இருப்பார்.... மாயங்களின் சாயலை அமெரிக்க ஏகாதிபத்திய கண்களில் மிளகாய் பொடியை தூவுவதாக விரியும் கற்பனையில் தங்க மீன்கள் துள்ளி விளையாடுவதை..... காப்ரியேல் காண்கிறார்..... மானுடம் தோன்றிய காலம் தொட்டு.... ஒரு சூழல்... ஆள்கிறது.. ஒரு சூழல் ஆளப் படுகிறது...தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வேலையை மட்டும் சரியாகவே செய்து கொண்டு இருக்கிறது..... ஒரு சூழல்.... அது கனவுகளின் கூடாரமாய் தன்னை காட்டிக் கொள்வதே கால மாற்றம் என்றொரு மாய தோற்றம்....தனிமையின் நூறு ஆண்டுகள்....லத்தின் அமெரிக்காவிற்கு மட்டும் பொருந்தக் கூடியதாக எனக்கு படவில்லை..... ஏகாதிபத்தியத்தின் முதல் புள்ளியின் வேர் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு தனிமை இருப்பதாகவேதான் படுகிறது...

இறந்தவர்கள் பற்றிய கற்பனை எப்போதுமே எனக்குள் ஒரு வித சாரலைத் தூவிக்கொண்டே இருக்கிறது...இறந்தவர் அருகினில் படுத்து கிடக்கும் அந்த பிணம் காக்கும் நிஜ இரவு, போதிகளை வெட்டி வீழ்த்தும் அனுபவமாய் எனக்குள் ஒரு பள்ளத்தாக்கை எப்போதுமே வெட்டிக் கொண்டே தான் இருந்திருக்கிறது,.....கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடைவெளியே இல்லை என்பதாக விரியும் எனது நிஜத்தையும் கற்பனையாக்கும் கற்பனை நிஜமாகவே நிஜம் பேசுவதாக, காப்ரியேல் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளை எனக்குள் தனிமைப் படுத்துகிறார்...


கடல்....... பிரமாண்டத்தின் குறியீடு....

"நான் பைத்தியகார ஆஸ்பத்திரியில் இருந்தபோது அந்த மெயில் வந்தது......"- இப்படி ஆரம்பிக்கிறது இந்த கடல் என்ற சிறுகதை.... கடலுக்குள் இருக்கும் சிறு கதைகள்... பெருங்கதைகள்...நாம் சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா...?. வாழ்வதற்காக வாழ்கிறோமா....?-இங்கே வாழ்க்கை என்பதே அனுபவம்தான் என்பது அனுபவத்தில்தான் வரும். பிறப்பில் இருந்தா வாழ்க்கை தொடர்கிறது ? இல்லவேயில்லை..... பிறந்ததில் இருந்து தான் வாழ்கையை தெரிகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.... அது இறப்புக்கு பின்னும் தொடர்வது; உணரப்படாமலே போவது, கடல் கொண்ட ரகசிய ஆழம்........ என்பதை ரகசியமாக எனக்குள் புதைய வைக்கிறது ரமணஜீவி அவர்களின் மூலத்தில் இருந்து ஆழம் விதைத்த பத்மநாபன் அவர்களின் கடல்.....

"கடல்"-சிறுகதை, தேடலின் பெருங்காடு...


பா செயப்பிரகாசம் அவர்களின் ஐயப்பனின் மரணம்.... ஜனிக்கிறது வாழ்கையின் கோணல் மானல் நேர்கோட்டை...."புத்தகம்னா தனியா வாசிக்கணும்.
சினிமானா சேர்ந்து பாக்கணும்..."- இந்த வரிகள் ஏதோ சொல்லிக் கொண்டே இருப்பது எனக்குள் இருக்கும் வாசிப்பின் புத்தக சினிமாவை திருப்புகிறது....... ஐயப்பனின் மரணமும் ஒரு ஜெருசலேம் தான்....மரணத்தின் அர்த்தம்.. பிணமாவதில் இல்லை....

தமிழ்..... இது வெறும் சொல் இல்லை.... இது ஒரு நீட்சி.... இது பொதிந்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள்... நட்சத்திரங்களைப் போல.... சில போது உடைந்து சிதறலாம்.... ஆனால் மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே இருக்கும்...அப்படிப்பட்ட தமிழை ஆய்வு செய்த எல்லீசன் என்றொரு சக்தி.... தமிழை ஆய்வு செய்த மூலவிசை ஆசான் என்று முனைவர் தெ. வெற்றிச்செல்வன் கூறுகிறார்....திராவிடத்தின் மூலம் இவரிடமிருந்தே ஆரம்பித்தது என்பதை ஆசிரியர் கூறும் போது எல்லீசன் மீது வரும் மரியாதையை அடக்க முடியவில்லை....(இன்று திராவிடம் எங்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே...) தமிழ் சார்ந்து என் பார்வை இன்னும் ஆழமாய், அகலமாய் விரிவதை உணர முடிகிறது.....

எல்லீசன் தமிழ் நேசன்.....

ஆக்கமும் பெண்ணாலே.....நூலின் ஆசிரியர் ஏ. ராஜலக்ஷ்மி அவர்கள். மதிப்புரைப்பது கே. சிவக்குமார் அவர்கள்...

கல்யாணத்துக்கும், கற்புக்கும் மட்டுமே காலம் காலமாய் உபயோகப் படுத்த பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள்... அதற்கானவர்கள் மட்டும் அல்ல...அவர்கள்.... சக்தி வாய்ந்தவர்கள்... ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே முன்னேறும் என்பது நல்வாக்கு...வலிகளை சுமந்து வழிகள் காட்டுபவர்கள் அவர்கள்...

ஒரு நாள் மாமனாரின் வீட்டில் இயல்பாக இருந்து விட முடிவதில்லை ஆண்களால்.... ஆனால் பெண்கள்...? அவர்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்ட செடி....இருப்பினும் கனி தருகிறார்கள்.... கல்லடி படாமல் பார்த்துக் கொள்வது வேலிகளின் வேலை... வேலியே பயிரை மேய்வது பரிணாமத்தின் சாபம்... சங்க இலக்கிய காலத்திற்கு பின், நவீன இலக்கிய கால ஆரம்பம் வரை பெண் கவிஞர்களே இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார்....ஆணாதிக்கத்தின் உச்சம்.... உணர முடிகிறது.... இனி ஆதிக்கம் வேண்டாம்.... அறிவு சுடரே தேவை.. தமிழ் வளர...

உணர செய்கிறது ஆக்கமும் பெண்ணாலே...
அழிவதும் பெண்ணாலே என்பது வக்கிரம்....

நம்பிக்கைகளால் கட்டமைக்கப் பட்ட சமூகம் தமிழ் சமூகம்.... அதிலும் நிமித்தங்கள் சுவாரஷ்யமானவை.... அவைகளில் ஒன்று பல்லியின் சத்தம்...
சி. சிவராஜ் அவர்களின் ஆய்வுக் கட்டுரையில், பல்லியின் சுவரில் பிராய்டின் மனது கிளை விரிக்கிறது, ஆழமாய்.... அங்கே மனங்களின் கொம்புகள் நிறங்களின் நிறமற்றலாய் மனித வாழ்வை வரைகிறது.... பல்லியின் ஒலி ஒரு பதிலி என்பது பகீர்..... யோசிக்க யோசிக்க, யாருமற்ற அறையில் பல்லியின் துணை.... மிகப் பெரிய ஜன்னலை திறந்து விடுவதாக ஒரு கற்பனை பதிலி.... பதிலாய் ஊர்வது நிஜம்....இடிப்பஸ் உணர்ச்சி.....மனோதத்துவ கிளர்ச்சி.... தோண்ட தோண்ட தீண்டும் மெய்ப் பொருளின் தூர தேசம்.. அது......

சரளா தாசின் மகாபாரதம்.....அதே கதையின் வேறு திரைக்கதை.... துரியோதன் தன் இறந்த மகன் மீது கால் வைத்து (அவன் என்று தெரியாமல்) தப்பிக்கும் ஒரு காட்சி.... திரைக்கதையின் உச்சம் எனலாம்.... மகாகாகாகாகா....... பாரதம் இது.... போர்க்களம் புகுத்தியிருக்கிறார் ஆசிரியர்....என்றே கீர்ச்சிடுகிறது பக்கங்களின் வரிகள்...


ஆத்மார்த்தியின் ' சேராக் காதலில் சேர வந்தவன்' தொகுப்பை முன் வைத்து மனுஷி அவர்களின் எண்ணங்கள் இங்கே ஒரு மாய உலகத்தை விரிக்கிறது.... படிக்க படிக்க குழந்தையை போல ஆகி விடுகிறேன் என்று கூறுகிறார்...ஆம் அனைவருமே குழந்தை ஆகத்தானே முயற்சிக்கிறோம்..... மரணிப்பது மீண்டும் குழந்தை ஆவது தானே....!

பச்சை மழை....கண்ணாடி புத்தகம்.... மரநாய், மஞ்சள் நிறம் வழியும் சாலை.... என்று மாயங்களின் பின்னல்கள் இந்த தொகுப்பு என்கிறார் மனுஷி... உடனே ஆத்மார்த்தியின் உலகத்துக்குள் நுழைந்து விடத் தோன்றுகிறது.....எனக்கு ஒரு கேள்வி தோன்றியது.... மாயலோக கதைகள் ஏன் தேவையில்லை என்று....? எத்தனையோ இசங்கள் இருக்கும் போது... இதுவும் இருக்கட்டுமே.... குழந்தையாக முடிகிறது வரம் தானே... வரம் தரும் மாயலோக கதைகள்... சுகம் தானே...! எதிகாலம் என்பது நம்பிக்கை என்பதை மீண்டும் ஒரு முறை ஆத்மார்த்தியால் உணர முடிகிறது.... நம்பிக்கை.... சிறகும் தரும்...

க. கைலாசபதியின் செவ்விலக்கிய ஒப்பியல் ஆய்வுப் போக்கு குறித்து முனைவர் மோ. செந்தில்குமார்.....ஒரு ஆய்வே நடத்துகிறார்....ஒப்பாய்வுக்களம், கருதுகோள் உருவாக்கம்,வீரயுக கோட்பாட்டாக்கம், வீரயுகப் பாடல்கள், பாண்பாட்டாக்கம்,புலவன் பற்றிய ஒப்பீட்டு நிலை குறித்து, புலவர்களும் புலமை மரபுகளும் குறித்து, கலைஞர்களின் பாகுபாடு குறித்து, வாய்மொழிப் பாடலாக்கக் கலைநுட்பம் குறித்து, வீரநிலை காலத்திய வீரர்கள் குறித்தும்.... நீளும் தகவல்கள்..... காட்டாற்றின் வெள்ளம்....காண காண கோடி கண்கள் கேட்கும். தமிழர்களின் ஆட்சி முறை, வீரர்களின் மனநிலை, சங்ககாலத்தின் சிந்தனைகள், உலக இலக்கியங்களுடனான ஒற்றுமை, கலைஞர்களின் கலைத் திறன்...என்று விரிந்து கொண்டே செல்லும் ஆய்வு.... தமிழர்களின் பாரம்பரியத்தை, பண்பாட்டை, பறை சாட்டுகிறது...அறிவுடைவரே புலவர்.... என்பதை மீண்டும் ஒரு முறை உணர செய்கிறது ஆய்வு...

பாலுமகேந்திரா...... மூடாத விழிகள்....

சிற்பி அவர்களின் வரிகளில் ஒரு மரத்தின் விதை துளிர் விடுகிறது....

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை..... அது விடாது......... விடாது கருப்பு......

மீண்டும் அகரம்..... அக்னி குஞ்சின் சிறகு உதிர்த்த காட்டுத்தீ....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (5-Jun-14, 9:58 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 193

சிறந்த கட்டுரைகள்

மேலே