மகனே எழுந்து விடு

மகனே எழுந்து விடு.

எழுதிடும் வசமே எழுத்து வரும்.
தொழுதிடும் இடமே துணையும் வரும்.
உழுதிடும் நிலமே உணவு இடும்
அழுதிடும் மகனே எழுந்து விடு.

பழகிடத் தானே பாதை வரும்.
உலவிடத் தானே ஊரு வரும்.
வழிவிடத் தானே வரவு இடும்.
கலங்கிடும் மகனே கவலை விடு.

அறிந்திடும் மனமே அறிவு வரும்.
புரிந்திடும் குணமே .புலமை வரும்.
தெளிந்திடும் அறிவே தீர்வு இடும்.
குழம்பிடும் மகனே கலக்கம் விடு.

தேடிடும் பொழுதே கூடி வரும்.
நாடிடும் பொருளே தேடி வரும்.
முயன்றால் முடிவு முந்தி இடும்
அயர்ந்திடும் மகனே அவலம் விடு.

வண்ணம் பலவும் வரைய வரும்.
வரைய வரைய வடிவம் வரும்.
எண்ணம் அழகினை எழுதி இடும்.
திண்ணம் மகனே தேர்ந்து விடு.

இடிந்த கோவிலும் எழுந்து வரும்.
முடிந்த முன்வினை தொடர்ந்து வரும்.
படிந்து எழுவது பண்பு இடும்.
படிக்கும் மகனே பழகிவிடு.

தீயோர் கூட்டம் ஓடி வரும்.
நேயம் பாடி கூட வரும்.
வாயில் திறந்தால் வரிசை இடும்.
நோயது மகனே தள்ளி விடு.

பாவ வினைகள் பக்கம் வரும்.
கூவம் போலவே சீக்கும் வரும்.
பாவியர் இரக்கம் பாவம் இடும்.
படட்டும் மகனே பாவம் விடு.

கொ.பெ.பி.அய்யா

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (6-Jun-14, 9:47 am)
பார்வை : 133

மேலே