குச்சிக்காலன் - 1

பலராமனுக்கு பல பட்டப்பெயர்கள். பனைமரத்தான், பட்டயத்தான், குச்சிக்காலன். எங்கள் பாரி நகரில் வசிக்கும் பலரில் அவனைப் பிடிக்காதவர்கள் அவனுக்குச் சூட்டிய திருநாமங்கள். பலராமனின் பல பட்டப்பெயர்களில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பெயர் குச்சிக்காலன். கார்ட்டூன் நெட்வொர்கில் வெளியான பப்பாய் ஷோவில் வரும் ஆலிவ் ஆயில் என்ற பெயர் கொண்ட குச்சிக்கால் பெண்ணின் கால்களை வரைந்த உயிரோட்ட ஓவியர் பலராமனின் கால்களைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார். இல்லையென்றால் ஆலிவ் ஆயிலின் குச்சிக்கால்களை அவ்வளவு நேர்த்தியக வரைந்திருக்க முடியாது.

பாலிடெக்னிக்கில் படித்து பலமுறை உருண்டு புரண்டு தேர்ச்சி பெற்றிருந்தாலும். தான் ஜி.டி. நாயுடு, விஸ்வேஷ்வரய்யா போன்ற தொழில் நுட்ப மேதை என்ற எண்ணம் கொண்டவன் நம் பட்டயத்தான். (டிப்ளமாவின் தமிழாக்கம் பட்டயந்தானே). அவன் எங்கு தன் பெயரை எழுதினாலௌம் தன்னுடைய பட்டயச் சுருக்கம் பளிச்சென்று தெரியும்படி டி.சி.எம் என்று போட்டுக் கொள்ளத் தவறுவதே இல்லை. அவனது பெயர் பலகையில் அவனது பெயரைவிட அவனது பட்டயச் சுருக்கம் தன் பளிச்சென்று தெரியும்.
பலராமன் குடியிருக்கும் வாடகை வீடு சின்ன வீடு தான் என்றாலும் பெருமைக்காக ஒரு கிழவியை வீட்டு வேலைக்கு வைத்திருக்கிறான. பெயர்ப் பலகையில் தொழில் நுட்ப அதிகாரி என்ற அந்தஸ்து வேறு பொறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவன் எதிர் வீட்டில் குடியிருக்கும் பஞ்சாலைக் காவலாளி கருப்பையா, அவன் வீட்டிற்குப் பின்புறம் உள்ள வீட்டில் குடியிருக்கும் ஏட்டையா அங்குசாமி மற்றும் எங்கள் தெருவைச் சுத்தம் செய்யவரும் மாநகராட்சித் துப்பரவுப் பணியாளார்கள், தபால்காரர் ஆண்டியப்பன் போன்றோர்க்கெல்லாம் குச்சிக்காலன் மீது தனி மரியாதை. அதிகாரி, பெரிய படிப்பு படித்தவர் என்ற அந்தஸ்து பெற்றவனல்லவா?
குச்சிக்காலனின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் பேராசிரியர் காசிலிங்கம். பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பணி புரிபவர். அமெரிக்காவில் பிஎச்.டி முடித்த பின்பு அங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டி.எஸ்ஸி முடித்தவர்.. இது மிகப்பெரிய படிப்பு என்பது குச்சிக்காலன் போன்ற மாமேதைகளுக்குத் தெரியாது. படித்தவர், படிக்காதவர் பிச்சைக்காரர் பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்காமல் எலோரிடமும் கனிவாகப் பழகக் கூடியவர் பேராசிரியர் காசிலிங்கம். காந்தியவாதிகளின் எளிமையைக் கடைபிடிப்பவர். இவரது முன்னாள் மாணவர் ஒருவர் “டாக்டர் கு. காசிலிங்கம், டி.எஸ்ஸி” என்று ஒரு பெயர்ப் பலகையைத் தயாரித்து வந்து, பேராசிரியரைக் கட்டாயப்படுத்தி அவரின் ஒப்புதல் பெற்று அவரது வீட்டு வாசல் கதவருகே சுவற்றில் மாட்டிவிட்டார்.
அந்தப் பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன் குச்சிக்காலன் அதிர்ச்சி அடைந்ததுடன் குழப்பமும் அடைந்தான்.

எழுதியவர் : மலர் (6-Jun-14, 10:27 am)
பார்வை : 210

மேலே