நீ எந்தன் வாழ்க்கை

(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....


குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...


உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட்ட....

பாரழகை நீ கொஞ்சம் பார்ப்பாயடா..இடையில்
நாம் படும் பாட்டை கொஞ்சம் கேட்பாயாடா..
மூடியுள்ள உள்ளத்தின் முன்னே-மூடாத
பள்ளங்கள் பல உண்டு கண்ணே......

உயிருள்ள போதே
கல்லோடும் மண்ணோடும்
உறவாடும் என் தேகம்...
என்னோடு போகட்டும்..
எல்லையில்லா இச்சோகம்....

விட்டு சென்ற உன்தந்தை
வீடு திரும்பவில்லை ..அதனால்
விரட்டி வரும் வேதனைக்கோ
வேலிகளேஇல்லை..

மதுதாகமே அவன் முதல் தாரமாய்...
அந்த அவலத்திற்கு நாமே உதாரணமாய்....

அருகில் இருந்தவரை
அவன் தந்த தொல்லை...
இரவென்று வந்தாலே
நீயெந்தன் சொந்தமில்லை...
கடினச்சொல் சிலவற்றை
சொல்ல மனமில்லையது
காமனவன் உன்தந்தை வகுத்த
கொள்கையின் எல்லை...

நல்லவேளை எனதருகில்
அவனில்லை இருந்தால்
இவ்விடமும் உனக்கில்லையதில் பங்குபோட..
படைத்திருப்பான் பலநூறு பிள்ளை.....

அந்நிலையெனும் போது
அவன் தேவையில்லை..
அத்தோடு ஒப்பிடுகையில்
இதுயெனக்கு சுமையில்லை....

கல்வியெனும் சோலை
நான் காணவில்லையதன்...
சாலை வரை சென்றதே..
நான் கண்ட எல்லை....

கவலையோடு உரையாடி
கரைந்து போன என்வாழ்க்கை
கல்வி துணையோடு தொடரட்டும்
கனவுகளுடன் உன் வாழ்க்கை.....

தலையில் தட்டேந்தி
உனை காப்பேனடா..
நான் தளரும் போது
தட்டேந்தவிடாமல்..
காப்பாயடா....

நீமாலை சூடும் நாளை
நான் காணும் முன்னே..
நீயெனக்கு நீர்மாலை சுமக்கும்
நிலை வேண்டாம் கண்ணே....

ஏற்றமிகு வாழ்வை நீயடையும் நேரம்..
எனைக்கொஞ்சம் நினைத்தாலே போதும்..
என்மனச்சுமையெல்லாம் எழுந்தோடிப்போகும்.!!!!!

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (6-Jun-14, 7:58 pm)
பார்வை : 234

மேலே