முதல் காதல்

ஓடிக்களைத்து
இளைத்திருந்த ஒரு
சனிக்கிழமை முற்பகல்களில்
முகம் தூக்கி
சிரிக்கத் தவிர்த்து
வெளிர்வண்ணக் கண்ணாடிக்
குடுவை குளிர்பான
தேவைக்காய்
அடம் பிடித்திருந்த பொழுதுகள்..

எதிர்வீட்டுத் தோழனின்
அதிகாலை அதிர்ச்சிக்காய்
அவனுக்கு முன் எழுந்து
பனம்பழம்
கவர்ந்துவந்து விட்டிருந்த
புலர்காலைப் பொழுதுகள்....!!!

மருதமலை மாமணிகளின்
ஆறரை சினிமா
அழைப்புகள் கேட்டு
அம்மாவின் பின்னிடுப்புகட்டி
சிரித்துக் குழைந்து
விண்ணப்பமிட்ட பொழுதுகள்..

ஒவ்வொன்றாய்
பொத்திப் பிடித்தடைத்து
மொத்தமாய் பறக்கவிட்டு
வண்ணத்துப்பூச்சிகள்
ரசித்திருந்த
முன்பனிக்காலங்கள்....

எல்லாம் மறைத்து
விட்டு...

தொடக்கப்பள்ளி கழிந்த
உயர்நிலைகளின்
ஏதோவொரு
விடலை நாளில்
எனக்கும் மீசை விட்டிருந்ததாய்
மூக்கினடி பூனை ரோமம்
பிடித்திழுத்து
எதிர்வரிசைத் தோழியிடம்...

மடித்த காகிதங்களில்
மொழிந்திருக்கிறேன் இதுதான்
முதல்காதலெனப்
பொய் சொல்லி....!!

எழுதியவர் : சரவணா (7-Jun-14, 3:45 pm)
பார்வை : 140

மேலே