முதன் முதலாய் அப்பாவிற்கு
குமரியின்[குமரி மாவட்டம் ] குமரனே
விமரிசையே
என்னை எழுதிய தூரிகையே
எந்தன் வாழ்வின் பேருவகையே
எந்தாய்
உந்தன் வித்து
என்னை வித்திட
உம் வியர்வைத் துளிகளால்
இன்று விளைந்து நிற்கிறேன்
வெள்ளம் நீர்
அதில் வாழும் மலர் நான்
கடல் நீர்
அதில் கயல் நான்
நீர் இருப்பதால் நான் இருக்கிறேன்
நீர் இல்லையென்றால்
என்ன கதியாகியிருப்பேன்?
என் விதியை எப்படி அறிந்திருப்பேன்?
நான் உயரவே நீர் உயர்ந்தீர்
நான் ஏறவே நீர் வளர்ந்தீர்
என்னை தாலாட்டிய ஆண் இசையே
என்னை கொஞ்சிய காளைத் தமிழே
என்னை நடத்திய இரு கால் வாகனமே
என்னை வளர்த்த ஆண் வனமே
என்னை நனைக்க
தன்னை கருத்த மேகமே
என்னை கவியாய் கோர்த்த அசையே
என்னை நிறுத்திய விசையே
என்னைத் தாங்கவே
தன்னை அகழ்ந்த ஆண் அதிசயமே
இகழ்ந்தோரையும் என்னிடம்
புகழ்ந்த புதுமையே
என் விழிகளுக்கு
விடியலை திறந்த இமையே
மனிதக் கலையை என்னிடம்
செதுக்கிய மானுட சிற்பியே
என் கர்வம் நீர்
என் சாயும் காலத்திலும்
ஓயாத சூரியனே
என் போர்க் காலத்தில்
பதுங்கு குழியே
நான் உறங்கிய கூரையே
சோதிக்கும் ஆண்டவனும்
சோர்ந்தது நம்மிடம் தான்
ஆதிக்கம் சாதித்ததும் உங்களிடம் தான்
எந்தன் வழிகளின் தடங்கள்
உந்தன் விழிகளின் தவங்கள்
திசைகளை எனக்கு
திறந்த திறவுகோலே
மங்கி எரியும் நேரங்களில்
பொங்கி வந்து
என்னை ஏற்றிய பாசத் தீயே
அப்பா என நான் அழைத்தது
தப்பாமல் இன்றும் வாழ்பவரே
உந்தன் இளமையை இறகுகளாக்கி
வானில் எனை பறக்கச் செய்து
மனதிற்குள் பறந்தவரே
அவையத்தில் எனை முந்தியிருக்கச் செய்ய
அவனியில் அவதாரமான என் அப்பா
இதயம் இடைஞ்சல் செய்த போதும்
எனை இடம் மாற்றாமல்
உடலால் சுமக்க முடியவில்லை என்றே
உழைப்பால் சுமந்தவரே
என் உச்சி முத்தமிட்டு
உம்மை மெச்சிக் கொண்டவரே
என் வாய் சிரிக்க கண்டு
மெய் சிலிர்த்தவரே
ஒழுக்கத்தை எனக்கு பழக்கமாக்கி
அதன் விளக்கமாய் இருப்பவரே
மிதிவண்டிப் பயணங்களில்
மதி உண்ட காலங்கள்
என் விதி கொண்டது கோலங்கள்
உங்கள் வார்த்தை ஊஞ்சல்களில்
அயர்ந்து அடங்கிய காலங்கள்
தோகையாய் உங்கள் தோள்மேல்
ஆடிய காலங்கள்
தேராய் என்னைத் தாங்கிய
ஊர்வலங்கள்
மீண்டும் வாய்க்காதா இந்த வரங்கள் ..!