காதல் கசக்குதய்யா

--------------------"காதல் கசக்குதய்யா!!"--------------------

கன்னி இதழ் குறிக்கும்
சின்னமாக மாறிவிட்ட
வண்ணரோஜாக்களில்
காணப்படுவதில்லை
நட்ட தோட்டக்காரனின்
ஒட்டிய வயிறு.

அலை கூந்தல்
மழை மேகமென
வருணிக்கும் வரிகளில்லை-
ஒரு துளி நீருக்காய்
உழலுகின்ற
உழவனின் தாகங்கள்.

தெளிநுதல்தான் பிறைநிலவாம்.
தெரியுமா அதில்? -
வடைதட்டு கையோடு
மகன் வரும்
வழிநோக்கி நிற்கும்,
முதியோர் இல்ல சோகங்கள்.

தூதனுப்பும் தென்றல்தனில்
நுகர்ந்ததுண்டோ
குடிசைகளை மட்டும்
குறிவைத்துக் கருக்கும்
சாதிப்பேயின் பிணவாடை.

தேய்நிலா வேளைகளில்,
தேநீர்ச்சாலை குவளைகளுள்
ஆறும் நீரீல் தெரிவதுண்டோ
தேயிலைத்தோட்டங்களில்
கைப்பிடி சோறுக்காய்
கைரேகை தேய்ந்தவரின்
கண்ணீர் ஓடை.

வயதின் பாங்கை
வடித்த பேனாக்கள் - உண்ணா
வயிற்றின் பாட்டை
வரையாதோ?

காதல் கனவினில்
கனிந்த சொற்கள் - உழைத்தே
களைத்தவன் கண்ணீரில்
கரையாதோ?

வலுத்தவன் சிரித்திட
வறியவன் அழுகையில்
பெருவலிகொண்டு
உள்ளம்
கனக்குதய்யா..

வறுமையின் பிடியினில்
உழைப்பவன் இருக்கையில்,
அடப்போய்யா
எனக்குங்கள்
காதல் கசக்குதய்யா.

எழுதியவர் : ஈ.ரா. (14-Jun-14, 10:19 pm)
பார்வை : 156

மேலே