காக்கையெச்சமடா

(நவயுக பாரதி வைரமுத்துவின் 'சிகரங்களை நோக்கி' நூலைப் படிக்க படிக்க என் பேனா முணையில் வழிந்த / விழுந்த 'காக்கையெச்சமடா!')


எனக்கு நிழல் தந்து
வெப்பம் தணிக்கும் வேப்பமே!

நன்றி, முதலில் உன் வேருக்கு
பின்பு சொல்வேன் வான் நீருக்கு.

என் தனிமைகளுக்கு, தோள் கொடுத்தாய்...
என் வெறுமைகளுக்கு, பூ வுதிர்தாய்...
என் உறக்கங்களுக்கு, கிளைத் தொட்டில் கட்டினாய்...
என் சுவாசப்பைகளுக்கு, நிரம்ப உயிர் கொடுத்தாய்!

உண்மைதான்,

உங்களின் நிழலில்

இந்த மனிதனும் சமம் காக்கைக்கு,
அந்த புத்தனும் சமம் மனிதனுக்கு.

ஓ மரமே!

உன் மீது சாய்ந்தபடி,
நான் என் அகம் பார்க்கிறேன்,
அதில் தனி சுகம் காண்கிறேன்!

ஏகாந்தத்தில்தான் ஏராளம்,
வாழ்க்கைப் பற்றிய
சிந்தனைகளும்,
நிந்தனைகளும்!

முடித்தாகிவிட்டது பள்ளிப்படிப்பு,
கிடைத்தாகிவிட்டது பணம் தரும் பணி!

இனி அடுத்தடுத்த ஐந்தாண்டுகளில்,

... பெறவேண்டும் மனை,
... நல்லதோர் மனைவி,
... அவள்தரும் செல்வம்,
... பின் அவர்கட்கு செல்வம்,
... வங்கியில் சிறிது சேமிப்பு,
... குழந்தைகள் பராமரிப்பு,
... பெற்றோர் நலன்,
... குழந்தைகள் படிப்பு,
என ஏராளம் ஏராளம்
எண்ணும் முன்னே
கரைத்தது காகம்
என் மேல் உமிழ்ந்தது தன் எச்சம்!

அந்த சிறுத்த யாக்கைக் கொண்ட
கறுத்தக் காக்கைத் தன் கனத்தத் தொனியில்
என் மேலிருந்த கிளையில் அமர்ந்து சொல்லலாயிற்று...


"ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கும் மட மனிதா!

உன் அக வொலி கேட்டு சிரிக்க லானேன்!!

நான் கூடு கட்டுவது சிறுக் கிளையில்தான்
இருந்தும், வாழ்ந்துத் திரிவது விரிந்த வானிலடா!

நீயோ வானம் பார்த்தால், உன் கூரை மறைக்கும்
என் கூட்டைக் காட்டிலும், மிகச் சிறியது உன் வீடு!!

நீ பார்க்கக் கடவது பெருவானவில்லின் ஒற்றைப் பாதிதான்
பார்த்ததுண்டா சூரியன் பூமிக்கிடும் ஏழு வர்ண வளையல்களை?

உன்னை மலைக்க வைக்கும் மலை உச்சிகளில்தான்,
என் சிறு கூடுக்கட்டக் குச்சிகள் சேர்த்தேன்...

நீ திரவியம் தேடக் கடக்கும் திரைகடல் முழுதிலும்
நான் தினம் தினம் என் கால் நனைப்பேன்!


கேட்டதுண்டா?
கேட்டிருப்பாயே!

'பாரதியும், குருவியும் எங்கள் ஜாதி,
நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்'

உன் மனது, வானில் பறந்து கிடக்க,
உன் கால்கள் மட்டும் மண்ணில் ஊன்றி கிடக்கும்,

உங்கள் கால்களில் நீங்களே இட்டுக்கொண்ட விளங்குகள்மட்டும்
எங்களுக்கு விளங்கவில்லை...

உங்கள் வாழ்க்கை ஓட்டப்பந்தையதிற்கு, நீங்கள்
பூமியில் கிழித்துக்கொண்ட கோடுகளை
வானிலிருந்து பார்க்க பார்க்க வேடிக்கை மேல் வேடிக்கை
எங்களுக்கு அலுப்பதேயில்லை!

கூடிவாழ்வது... எங்களிடம் கற்றாய்...

சமபந்திபோஜனம்... எங்களிடம் கற்றாய்...

ஏகபத்தினி துணை... எங்களிடம் கற்றாய்...

கற்றாய் கற்றாய் அனைத்தையும் கற்றாய்
விற்றாய் விற்றாய் செல்லாகாசென விற்றாய்!

நிழல் தரும் மரத்தின் வேர் போற்றினாய்
வேருக்கு உயிர் தந்த விதை போற்று!

தன்னையே மண்ணுள் தள்ளி,
பின்பு மண்ணையே தள்ளி,
விருட்சமாய் விஸ்வரூப மெடுக்கும்
விதை போற்று!

சிறு விதையாக புதைந்துவிட்டால்,
மண்ணுக்கு மரம் ஆதாயம்,
விண்ணுக்கு மழை ஆதாயம்,
உனக்கு காடு ஆதாயம்,
எனக்கு கூடு ஆதாயம்!

ஆறறிவு படைத்தோனே,

ஓரறிவா? வளர விடு!
ஈரறிவா? இடம் கொடு!
மூன்றறிவா? ரசித்துப் பார்!
நான்கறிவா? நன்கு பழகு!
ஐந்தறிவா? ஆதரித்து வாழ்!
ஆறறிவா? அன்பு காட்டு!

இந்த மண்ணில், நுண்ணுயிரும் பொன்னுயிர்தான்!"

என
உரத்துக் கரைத்தபடி
மனதில் அறைந்தபடி
உணவு தேடி பறந்துப்போனது
அந்த ஏழறிவு ரிஷி-பக்ஷி!

தோளில் விழுந்த காக்கை யெச்சத்தை
ஊர் பார்க்காத படி துடைத்தெரிந்தென்..

எச்சத்தால் மனதில் விழுந்த வடுவை
மறைப்பதெப்படி?!
மறப்பதெப்படி?!
மறுப்பதெப்படி?!

எழுதியவர் : வைரன் (15-Jun-14, 10:30 am)
சேர்த்தது : வைரன்
பார்வை : 280

மேலே