புழுதி காட்டில் பொழப்பை நடத்தும்

புழுதி காட்டில் பொழப்பை
நடத்தும் நான் வயதில் கிழவன்
தான்

பிடரியில் தாக்கும் வெய்யிலில்
கோடாலி தூக்கும் என்னை
தாக்குது இந்த முதுமை தான்

வெட்டி சாய்த்திடும் மரங்கள்
விழுந்தது சட, சடவென்று
மண்ணில் தான்

அதனை துண்டுகளாக்க வேண்டும்
எந்தன் முதலாளி வந்து சேரும்
முன்னர் தான்

தள்ளாடும் கால்கள் அமர சொல்லி
கெஞ்சுது என்னை தான்

தடுமாறும் கரங்கள் ஓய்ந்திட துடிக்குது
சில நிமிடங்கள் தான்

பள்ளங்கள், மேடுகள் எல்லாம்
என் வாழ்வில் சகஜம் தான்

பஞ்சமும், பட்டினி, பசி
மூன்றும் எந்தன் உறவினர்
தான்

கால் வயிறு சோற்றுக்கு, நான்
படும் பாட்டை கண்டு கருணை
கொள்ள யாருமில்லை

நாய் படாத பாடு பட்டு வாழ்க்கை
நடத்திடும் என்னை தாங்கி கொள்ள
ஒரு தூணுமில்லை

கல்லறை என்னை அழைக்கும்
வரை, கடந்திட வேண்டும் எந்தன்
வாழ்வினை

புழுதி காட்டில் பொழப்பை நடத்தும்
கிழவர்களின் கண்ணீர் கதைகளில்
ஒருவன் நான்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (18-Jun-14, 8:21 am)
பார்வை : 81

மேலே