இளமை ஊஞ்சலிலே

இளமைப் பருவத்தின்
இனிய ஊஞ்சலிலே
குழந்தையாய் நான் அமர்ந்த போது-
கூட வந்து அமர்ந்தவனே!

நாம் இருவரும் இணைந்தல்லவா
இளமை ஊஞ்சலிலே இளைப்பாறினோம்!

அந்த இளைப்பாறலிலும்
எத்தனை ஏக்கங்கள்
பின்னிக் கிடந்தது...

பூக்களின் மகரந்தத்தைப்
பொட்டாய் அணிந்தோம்,

அதன் இடுப்பினில் கை வைத்து
இதழ்களை உதிர்த்தோம்,

ஒவ்வொரு இதழ்களையும்
கவிதையாக்கி ரசித்தோம்,

காம்புகளை மட்டும்
கண்டு கொள்ளாமல் போனோம்!

நிலவை ரசித்தோம்...
நிலவைச் சூழ்ந்த மேகங்களை
நீண்ட நேரம் பார்த்தோம்!

நட்சத்திரங்களை,
மின்னல் கீற்றுக்களை,
முன்னிரவு வானத்தின்
வண்ண விளிம்புகளை,
எப்போதோ தோன்றும் வானவில்லை,

இன்னும் எத்தனையோ...

வார்த்தைகளால் வருணிக்க முடியாத
ஓவியமாய்க் கூட வரைய முடியாத
ஒயிலான படைப்புகளை
ஒவ்வொரு நாளும் கண்டு
உள்ளம் நிறைந்தோம்!

ஆனால்-
அத்தனை எழில்களையும்
தாங்கி நின்ற நீலவானை
தரிசிக்காமல் போனோம்!

கவிதைகளை ரசித்தோம்,
கவிஞனைப் புகழ்ந்தோம்,
பேனாவை மட்டும் மறந்தோம்!

ஓவியத்தை ரசித்தோம்,
ஓவியனைப் புகழ்ந்தோம்,
தூரிகையை மட்டும் மறந்தோம்!

தொட்டாஞ் சினுங்கிகளைத்
தொட்டுப் பார்த்து ரசித்தோம்,

கொட்டாங் குச்சிகளைக்
கீழே போட்டு உடைத்தோம்,

பட்டாம் பூச்சிகளாய்க்
காடுகளில் அலைந்தோம்,

பறக்கும் சிட்டுக்களைப்
பார்க்குமிடமெல்லாம் சிரித்தோம்!

சாலையோரம் சங்கமித்தோம்-
சுக துக்கம் பகிர்ந்து கொண்டோம்!

நிறைவேறாத கனவுகளை
நீண்ட நேரம் விவாதித்தோம்!

நம் பொன்னான நேரங்கள்
பொய்யாகிப் போனதை
உணராமல் போனோம்!

இளமை ஊஞ்சலிலே
என்னோடு இளைப்பாறியவனே!

நமது ஊஞ்சலின் கயிறுகளால்
எத்தனை சூர்யோதயங்களை
சந்தித்துவிட முடியும்?

காலம் செல்லச் செல்ல
கயிறு அறுந்தது...

சரிந்து விழுந்தோம்-

நீயொரு பள்ளத்தில்...
நானொரு பள்ளத்தாக்கில்...

****
நம் நட்பு
இன்னொரு ஊஞ்சல் கட்ட
எண்ணுகிறது!

காலமோ
தன் சிறகுகளை
விரிக்க மறுக்கிறது!

காத்திருப்போம்!
காலம் வாய்க்கும்...

நம் இளமை வேர்கள்
இற்றுப் போகும் முன்
இன்னொரு ஊஞ்சல் அமைப்போம்...

இதயத்தை பறக்க விடுவோம்...
இளமையை அனுபவிப்போம்!

16.06.1994

எழுதியவர் : மனோ & மனோ (18-Jun-14, 3:28 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 157

மேலே