காதல் துறவியின் புனிதப் பயணம்

காதல் துறவியின் புனிதப் பயணம் !

என் காதல் படிவுகள்
பாலை மண்ணில் படிந்து கொண்டிருந்தன !

நெஞ்சீரப்பதம் அனைத்தும் உறிஞ்சிய நிலையில்
அவளின் புன்னகை மட்டும்
மலர்ந்தது கள்ளிப்பூக்களாய் மனதில் !

இரவு இருட்டுப்போர்வை போர்த்திக்கொண்டது !
வானம் கருநீலம் கரைத்த தொட்டியாய் அடர்ந்து கொண்டிருந்தது !

நிலா அவளின் நினைவால் கலங்கரை விளக்கமாக.
பிணம் தின்னிக் கழுகுகள் துணைக்கு வர ...
என் பாதச் செதில்களை வெப்பம் உரிக்க ..
மணல் கிழிக்கும் துடுப்பாய் என் கால்கள் ...

ஒளிந்து கொள்ள ஒரு இடம் தேடினேன் ...
எங்கும் திறந்த வெளி ....
வெறுமையாகிப் போன போதும்
அவள் நினைவு மட்டும் முழுமையாய் என் மனதில் !

பஞ்சுரப் பண்ணாய் அவளின் பேச்சு என் காதில் ரீங்காரமிட...
தரிசாய்ப் போன மலட்டு மண்ணில்
அவள் நினைவை விதைத்துக்கொண்டு ...
தொடர்கிறது என் புனிதப் பயணம் !

எழுதியவர் : கவிஞர் சி. அருள்மதி (19-Jun-14, 12:33 pm)
பார்வை : 121

மேலே