தேடல்

மயான அரவம்
கிழிக்கும்
ரௌத்ரச் செஞ்சுடலையெரி
பிளம்புகளினூடே
மயிர் கருகி
சதை உருகும்
பிணவாடை
நெடிசகித்து
மீளாக் கால
வழி நெடுகிலும்
இரைந்து கிடக்கும்
தொலைந்த சோகங்களில்
மனம் -
ஸ்திரமற்ற கேவல்களுடன்
போதிமர தோட்டம்
தேடி
நெஞ்சக் கொல்லையில்
கொன்று புதைத்த
மனசாட்சி பிரேதங்களின்
துர்நாற்றம் துடைத்து
கைத்தலம் பற்றும் !
பரஸ்பர பித்ருநவிலலுடன்
பாவக் கணக்குகளின்
சிலாகிப்பில்
வழி நெடுகிலும்
திராட்சைத் தோட்டங்களின்
உதிர்ந்த பழங்களின்
அழுகிப் புளித்த
இச்சை சூலுறளில் -
மன நரி
தந்திரம் மிகக்கொண்டு
வஞ்சக ஏணி செய்து
மீண்டும்
மனசாட்சி கொல்லும்.