ஹைக்கூ எழுதலாம் வாங்க – 16

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி

கிராமத்துப் பாட்டி என்று எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது? சரி… ஏன் அந்தப் பாட்டி கை எடுத்து கும்பிடுகிறார்? எங்கு நின்று கும்பிடுகிறார்? யாரைப் பார்த்துக் கும்பிடுகிறார்? விலாசம் எதாவது தவறியிருக்குமோ? கையெடுத்துக் கும்பிட்டு பிச்சைகிச்சை எடுத்துக்கொண்டு இருக்குமோ? பெற்ற பிள்ளைகளிடமே எதற்காகவாவது கெஞ்சிக்கொண்டு இருக்குமோ? என்று எவ்வளவோ பொருள் இருக்கலாம் அந்தப் பாட்டியின் கை எடுத்து கும்பிடுதலுக்கு. எல்லாரும் ஏதோ ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். பாட்டி எதற்காகவோ இரந்து நின்றால் அது சென்ரியூ. எந்த உதவியும் கேட்காமலிருந்தால் அது ஹைக்கூ. சரி மூன்றாவது அடிக்கு வருவோம்.

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
மங்கிய சூரிய ஒளி

அப்பாடா… மங்கிய சூரிய ஒளி தானா? ஓகோ… அந்தப் பாட்டி சூரியனை வணங்கி இருக்கிறார். மங்கிய சூரிய ஒளி என்ற மூன்றாவது அடிக்கு வருவோம். ஏன் மங்கலாகத் தெரிகிறது. பாட்டி வயதாகிவிட்டதன் காரணமா? கண் குறைபாட்டின் காரணமா? அல்லது சூரியனே மங்கலாகத் தெரிந்தானா?

சரி… ஹைக்கூவை இன்னும் சுருக்கலாம் இப்படி:

இரண்டாவது அடியில் கிராமத்துப் பாட்டி என்று இருப்பதை பாட்டி என்று சுருக்கிக்கொள்கிறேன். காரணம் கிராமம் என்ற சொல் இடம் பெற்றதால் அது நகரத்துப் பாட்டிகளை தவிர்த்துவிடுகிறது. முதல் அடியில் இருக்கும் கும்பிடும் என்பதை இரண்டாவது அடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.

கையெடுத்து
கும்பிடும் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
© -கவியருவி ம.ரமேஷ்
(என் பாட்டி இறக்கும் வரையில் சூரியனை வணங்கியதைக் காலைப் பொழுதில் கண்டிருக்கிறேன். அதை நினைத்து எழுதிய கவிதை இது. நீங்களும் உங்கள் பாட்டியை நினைத்து ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதி பகிருங்களேன்.)

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (23-Jun-14, 6:35 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 70

மேலே