கண்ணதாசனுக்கு கவின் சாரலனின் கவிதாஞ்சலி 2

மனித கூட்டங்கள்
மாதவன் புகழை
ஒருவேளை
பாடாமல் போய்விடுமோ என்று
மரக் கூட்டங்களையும்
மலர் தோட்டங்களையும்
பாடச் சொன்னாயோ
புல்லாங்குழல் எடுத்து
மூங்கிலையும்
புருஷோத்தமன் புகழ்
பாடச் சொனாயோ

"அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் "
என்று கண்ணனின் ஆலய வாசலை
அகலத் திறந்து காட்டிய நீ தானே
உலகில் உண்மையான கண்ணதாசன்

மரணத்தை எண்ணி கலங்கிநின்ற
பார்த்தனுக்கு கண்ணன்
பதினெட்டு அத்தியாயத்தில் சொன்ன
அறிவுரையை பத்துவரி கவிதையில் சொல்லி
கீதையில் ஒரு வாமன அவதாரம் எடுத்த
நீதானே கீதை நாயகனின் கண்ணதாசன்

மனவாசம் வேண்டாம் வனவாசம் வேண்டாம்
மது வேண்டாம் மங்கை வேண்டாம்
காதல் வேண்டாம் கவிதை வேண்டாம்
மனிதனாய் கண்ண மாமுனிவனாய்
நீ மீண்டும் ஒருமுறை வரவேண்டும்
அர்த்தமுள்ள இந்துமதம் இன்னுமொருமுறை
உன் வாயால் கேட்க வேண்டும்

ஒரு முறை வா கவிதை மன்னனே
உன்னை நான் அறிவேன்
உன் கவிதையும் நான் அறிவேன்
உன் மனமும் நான் அறிவேன்
நான் உன் சீடனாவேன்

----கவின் சாரலன்

கவிக் குறிப்பு : மறு பதிவு

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jun-14, 9:56 pm)
பார்வை : 96

மேலே