காட்டேரிகளின் உள்ளாடை வேட்டை
என்ன செய்தால் சரியாகும் அல்லது எந்த சரி தவறை மீட்கும்...? வன்முறை, கொடிய நோய்... அதுவும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை, கொடியதிலும் கொடிது. இன்னும் ஒரு அடி முன்னால் சென்று எட்டிப் பார்க்கப் படும் சிறுமிகளுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வக்கிரம், கண்களில் உருண்டு திரண்டு விழும் கண்ணீர்த் துளிகளை, குருதியாய் மாற்றி விடும் உயிர் உருவுதல்.
எத்தனை ஆசை இந்த பிறவி. அதில் எத்தனை பிறவி, இந்த வாழ்க்கை. எல்லாம் கலைந்த உள்ளாடையில் ஒரு குடும்பமே கிழிந்து தொங்குவது எந்த சாத்தானின் திட்டமிட்ட நாடகம்? யார் தந்தார்கள் இத்தனை பெரிய அத்துமீறலின் தத்துவத்தை படைக்கும் தைரியத்தை?-வெறும் கேள்விகளால் பதில் சொல்லி விட முடியாது. வெந்து தணியுமா..... தேக நடுக்கம்..... நொந்து பணிந்திடும் வேக ஒடுக்கம் , எங்கே என் மானுட ஒழுக்கம்?
சரியான புரிதல் எப்போது தான் வரும்..... ஒரு சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கக் கூடாது என்பதையெல்லாமா சொல்லித் தர வேண்டும்.....?!!!! அது ஒரு மனித பரிணாமத்தின் உட் கட்டமைப்பு அல்லவா.... "ஓ கடவுளே, நீயும் சிறுமியாய் பிறப்பெடுத்துப் பார்.... உன்னையும் பலாத்காரம் செய்து ஏதாவது ஒரு மரத்தில் தொங்க விட்டு விடுவார்கள் ஆறாம் அறிவு படைத்த மாபெரும் துரோகிகள்.." என்று எழுதிவிட மட்டுமே என்னால் முடிகிறது......எதுவுமே செய்ய முடியாத சுய கோபத்தில் தோன்றுவது, ஓட்டு போட்ட என் விரலை வெட்டிப் போட வேண்டும் அல்லது விதி மாற்றிய வேதாளங்களின் உடலைத் துண்டித்திட வேண்டும்..... அடங்க மறுக்கும் ஆற்றாமை அய்யோ வென அழத் தூண்டுகிறது.
ஓ..... காமுகர்களே...... காமம் எத்தகைய புனிதம் தெரியுமா....? நீங்கள் செய்வது காமம் அல்ல...... வக்கிரம். சிறுநீர் கழிக்கும் உறுப்பில் கற்பை விதைக்கத் தெரிந்த என் மனித சம்பிரதாயத்துக்கு காமத்தின் பொருளை, விளங்கச் செய்ய தெரியவில்லை. வெற்றுப் புலம்பல்கள் என் மூளையெங்கும் ரத்தம் தெளிக்கும் காட்டேரிகளிடம் கைகட்டி மண்டியிடுகின்றன....மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்..... இதில் என்ன சுகம் இருந்து விட முடியும்... வன்முறையில் கசிவது ரத்தம் மட்டுமே....வரையறுக்காத வாழ்வுமுறைதான்....ஆனால், வாழும் வரை வரைமுறை வேண்டும் நண்பர்களே.... சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்.... இல்லையெனில் பாதுகாப்பாக பாலியல் தொழிலாளிகளின் கதவுகளைத் தட்டுங்கள்...அல்லது சிறுமிகள் தான் வேண்டும் என்றால், உங்கள் அம்மாக்களிடம் இது பற்றி வினவுங்கள்.... உணவில் விஷம் வைத்துக் கொல்லுவார்கள்... செத்துப் போங்கள்....
இனியும், என்ன எழுதுவது, நடுங்கும் விரல்களில் பேயொன்று தலை விரித்து ஆடுகிறது ....பேய் கூட நடுநடுங்கி சொல்லும் கதைகளில் ஒரு சிறுமியின் இயலாமையின் கதறல் உடல் விரிக்கிறது.. உயிர் தெறிக்கிறது....அடங்காத கோபம், அடங்க வேண்டாத கோபம், மௌனம் உடைத்து மயானம் எழுப்பி வேட்டையாடும் பிணங்களில் உன்னை துளித் துளியாய் வெட்டிப் போட்டு வேக வைத்து உண்ணும் ஒரு ஆறடி குழி தீயோடு எரிந்திருக்கிறது மனமெங்கும்.....மனதை எரித்துக் கொண்டு மானுடம் நம்பும் அந்த சிறுமிகளின் குடும்பம்.... எப்போதும் இல்லாத தீயை அணைக்கவே போராடிக் கொண்டிருக்கிறது....எத்தனை முறை தான் மறு கன்னம் காட்டுவது..... இனி மயானம் காட்டுவோம்....
கவிஜி