திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 6
ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.
ஏகம் – ஒன்று, பாதம் – அடி.
முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி. பாடல் எண்: 6
குறிப்புரை :
பூமியிலுள்ளாரையும் தேவகணங்களாய் உள்ளாரையும் தனது நாபிக் கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிரமா விஷ்ணுவினது போதத்திலே கண்ணாடியும் நிழலும் போலப் பிரதிபிம்பியாய் நின்றவன்.
ஆடி என்பது அடி எனக் குறுகி நின்றது.
மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தம் செய்தருள்பவன்.
சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய சிவஞானிகளும், புண்ணிய பாவக்கட்டையரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பை உடையருமாயிரா நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன்.
உந்தராய் என்பது, ஊந்தராயென நீண்டது.
மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை என்னை ஆண்டிடுவதாக. பூந்தராய் என்பது சீகாழி.
உத்தூளனம் – உத்தூளம், உத்தூளிதம் - besmearing the whole body with dry sacred ashes, powdered sandalwood etc.