அவள் தான் செல்லம்மா
முதிர்ச்சியின் ரேகைகள் முளைத்து விட்டிருந்தன அவள் நெற்றியில்.. அறுபதை நெருங்கி அசை போட்டு கொண்டிருந்தது செல்லம்மா பாட்டியின் வயது மட்டுமே.. குறும்புகளுக்கு ஒரு போதும் குறைவில்லாது வீட்டை சுற்றி வருவாள் பேர குழந்தைகளை கொஞ்சி கொண்டே.. ஒளி மங்காத அவள் விழிகளின் சுவற்றில் ஏதோ ஒரு தேடல் இத்தனை வருடம் கழித்தும் விடையற்று மின்னி கொண்டிருப்பதை எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.. ஆனால் வெளிறிய புன்னகை ஒன்றை பதிலாய் சிந்தி போகும் அவள் மௌனத்தை, கேள்வி கணைகளால் தொந்தரவு செய்ய யாரும் முன்வந்ததில்லை..
"செல்லம்மா நானும் தம்பியும் விளையாட போறோம்.. நீங்களும் வர்றீங்களா..??" செல்லமாய் தன் பாட்டியை அழைத்து கொண்டிருந்தாள் நிலா.
துள்ளி குதித்து தான் வந்திருப்பாள்.. ஆனால் வயதின் முதுமை நினைவிற்கு வரவே நிதானமாய் படி இறங்கி பூங்காவை நோக்கி நடை போட்டனர் செல்லமாவும் அவள் சிநேகித பட்டாளமும்..
நிலாவிற்கும் அமுதனுக்கும் தங்கள் பாட்டியோடு பூங்கா செல்வதில் அப்படி ஒரு மகிழ்ச்சி.. இன்னும் தெளிவாய் சொல்ல வேண்டுமானால் அது ஒரு பெருமை.. ஆம்.. மற்ற வீட்டு பாட்டிகள் எல்லாம் எப்போதும் திட்டி கொண்டு ஒரு மூலையில் முடங்கி விட, செல்லம்மா மட்டும் குட்டி பிள்ளைகளை மடியில் அமர்த்தி கொண்டு கதை சொல்ல ஆரம்பிப்பாள்.. அதுவும் பாட்டி வடை சுட்ட பழங்கால கதைகள் இல்லை.. பார்பியும் அமுதனும், ஜாக்கி சானும் நிலாவும் தான் செல்லம்மா கதையின் கதாபாத்திரங்கள்.. இன்னமுமா சொல்ல வேண்டும் அவர்கள் பெருமை பட காரணம் என்னவென்று..
அன்றும் அது போல் ஒரு குதிரை கதையின் அற்புத உலகிற்கு வாண்டுகளை அழைத்து சென்று கொண்டே இருந்தாள் செல்லம்மா.. திடீரென ஏதோ தோன்றியவளாய் மீதி கதை நாளைக்கு என்று சொல்லி விட்டு விலக முற்பட்டாள் அவள்.. ஆர்வமாய் கதை கேட்டு கொண்டிருந்த பொடிசுகளின் முகம் வாடி தான் போனது.. ஆனால் இதுவே அவள் இயல்பென்று தெரிந்து வைத்திருந்த சிநேகித பட்டாளம் விளையாட சென்று விட்டது..
அமுதனுக்கு மட்டும் நிலைமை புரியவில்லை.. செல்லம்மாவின் முகத்தை உற்று நோக்கினான்.. அவள் கண்கள் பனித்து இருந்தன.. தன் மழலை விரல் கொண்டு அவள் சேலை முந்தியை எடுத்து முகத்தை மறைத்து கொண்டான் அமுதன்..
"செல்லம்மா.. நான் எங்க இருக்கேன் சொல்லு.. சொல்லு செல்லம்மா.." விடாமல் வருடினான் அவள் கைகளை.. பதில் தான் வந்த பாடில்லை.. அடுத்த நொடியே பெருகி ஊற்றியது அவள் தேக்கி வைத்திருந்த கண்ணீர் அனைத்தும்..
திகைத்து போன அமுதன் தன் அக்காவை அதட்டினான்.. "நீ தான் பாட்டியை திட்டின.. நில்லு உன்னை அம்மா கிட்ட மாட்டி விடுறேன்.." என்று சொல்லி கொண்டிருந்த போதே வீட்டை நோக்கி ஓடினான்..
நிலா சற்று விவரம் அறிந்தவள்.. காரணமின்றி செல்லம்மா அழ தொடங்கினால் அதன் காரணம் கேட்டு அவளை தொந்தரவு செய்ய கூடாது என நன்கு உணர்ந்தவளாய் அமைதி காத்தாள்..
வீட்டிற்கு சென்ற செல்லம்மா நேராய் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.. கட்டிலின் அடியில் இருந்த ஒரு பழைய மரப்பெட்டியை எடுத்தாள்.. சிதிலமடைந்து இருந்த பெட்டியின் முப்பது வருட கால பழமை நிரம்பிய வாசனை ஒன்று போதும் அவள் முகம் பொலிவடைய.. சுற்றும் முற்றும் அலை பாய்ந்தன அவள் கண்கள்.. அருகில் யாரும் இல்லையென்பது உறுதியானதும் தலை கவிழ்ந்து தன் நினைவுகளோடு மூழ்கி போனாள்..
அவள் கண்களில் புறப்பட்ட ஒரு துளி, கவலை தோய்ந்த கன்னத்து சுவர்களின் வழியே, பெட்டியில் பட்டு தெறித்தது.. நரம்பு படர்ந்திருந்த அவள் விரல்கள் மெதுவாய் பெட்டியை திறந்தது.. அடியில் இருந்த ஒரு சிறு துண்டு காகிதத்தின் மேல் அவள் பார்வை நிலை கொண்டது.. தாளின் நடுவே எழுதப்பட்டு, மங்கி போயிருந்த அந்த ஒற்றை வார்த்தை, செல்லம்மாவின் கண்களுக்கு மட்டும் வசீகரமாய் ஒளிர்ந்தது..
அங்கே இருந்தது அவன் பெயர் தான்.. ஆம்.. தன் உயிரினும் மேலாய் செல்லம்மா நேசித்த அவனுடைய பெயர் தான்.. மனம் முழுதும் பரவ தொடங்கிய காதலோடு, அந்த சிறு துண்டு காகிதத்தை தன் ஈரம் வற்றி போன இதழ்களின் அருகே கொண்டு வந்தாள்.. தன் உயிர் மூச்சில் ஊறி போயிருக்கும் அவன் நினைவுகளோடு மென்மையாய் ஒரு முத்தம் வைத்தாள்..
தத்து பிள்ளையான அன்பு மகன் கண்ணனுக்கோ, பாசம் காட்டி பார்த்து கொள்ளும் அவன் மனைவிக்கோ, சுற்றி சுற்றி செல்லம் கொஞ்சும் அமுதனுக்கோ நிலாவுக்கோ.. யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை செல்லம்மா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லையென்று.. இனி தெரிய போவதும் இல்லை..
கண்களை துடைத்து கொண்டு வெளியே வந்த செல்லம்மா வழக்கமான தன் புன்னகையோடு நிலாவை அழைத்தாள்..
"காட்டு வழியா போன நிலா ராணி ஒரு குகையை பார்த்தாளாம்.. அங்க நிறைய மிட்டாயும் கேக்கும் இருந்துச்சாம்.." தன் கதையை தொடங்கினாள் அவள்..
அவள் தான் செல்லம்மா..