அவனும் அவளும் ஒரு சிறுகதை
அவனும் அவளும் .. ஒரு சிறுகதை
ஒருவரை ஒருவர் அறியா இருவர் .. அவனும் அவளும் ..
அவன் ஒருநாள் அவளை வேளாசேரி பேருந்து நிலையத்தில் நிற்கக் கண்டான் . அவன் இளைஞன். அவள் இளைஞி. அவனுக்கு இருபத்தெட்டு வயது. அவளுக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று வயது இருக்கும். அவளைக் கண்டதும் அவளிடம் ஏதோ சொல்ல நினைத்தான். முன்பின் தெரியாத அவளிடம் எப்படி சொல்லுவது .. ஒருவேளை அவள் அவனை தவறாக மதிப்பிட்டு கூக்குரல் கொடுத்து விட்டால் .. கூடியிருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்தால் அவமானப் பட வேண்டியிருக்குமே என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டான். வேளாச்சேரியிலிருந்து அம்பத்தூர் செல்லும் பேருந்தில் அவள் ஏறிக்கொண்டதும், அவனும் ஏறிக்கொண்டான். வடபழனியில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் அவனுக்கு வேலை.
வடபழனி பேருந்து நிறுத்தம் வந்ததும் அவன் இறங்கினான். கூடவே அவளும் இறங்குவதைக் கண்டு, அவளுக்கும் அலுவலகம் அங்கு எங்கோ தான் இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு பின்னால் அவனும் நடந்து சென்றான். என்ன ஆச்சரியம் அவன் வேலை செய்யும் அதே கட்டிடத்திற்குள் அவள் நுழைந்தாள். எப்படியாவது இன்று மாலைக்குள் அவள் எந்த அலுவலகத்தில் வேலை செய்கிறாள் என்பதைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே, அவன் அலுவலகத்தை அடைந்தான்.
அவன் பணி செய்யும் கட்டிடத்தில் சிறியதும் பெரியதுமாக பல அலுவலகங்கள் இருந்தன. அங்கு அவளை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் குழம்பினான். அந்தக் கட்டியத்தில் மதிய உணவு உண்பதற்கென்று தனியிடம் வேறு கிடையாது. ஒவ்வொரு அலுவலக வாசலில் நின்று தேடுவதென்பது இயலாத காரியம். ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு அலுவலக நேரம் என்பதால் அவன் வேலைகள் முடிந்து வெளிவரும் நேரம் இருட்டி இருக்கும். எப்படியாவது அவளை மீண்டும் சந்தித்து மனதில் உள்ளதை அவளிடம் கொட்டிவிடவேண்டும் என்ற துடிப்பு மட்டும் அவனுள் நிலைத்திருந்தது. அன்றைய தினம் அவனுக்கு வெற்றியைத் தரவில்லை. மறுநாள் மீண்டும் பேருந்து நிலையத்தில் அவளை சந்தித்தான். மனதில் உள்ளதை அவனுக்கு அவளிடம் சொல்வதற்கு ஒரு தயக்கம். இப்படி நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள், பேருந்து நிலையத்தில் பஸ் இல்லாததால் பலரும் காத்திருந்தனர். அவளும் பேருந்து எப்பொழுது வரும் என்று தெரியாமல் அங்கு காத்திருந்தாள். இது தான் தக்க தருணம் என்று நினைத்து அவள் அருகில் சென்று, என் பெயர் ராகவன். எனக்கு உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். சொல்லட்டுமா என்று கேட்டான். அவள் அவனை ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, மிகவும் நிதானமாக என்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள். எல்லோரும் சொல்வது போல் "ஐ லவ் யு" என்று தானே என்று கேட்பது போல் அவனைப் பார்த்து, இத்தனை பேர்கள் இங்கு இருக்கிறார்கள். என்னிடம் அப்படி என்ன சொல்ல நினைக்கிறீர்கள் ? தைரியம் இருந்தால் எல்லோரும் கேட்கும் படி உரக்க சொல்ல முடியுமா என்று கேட்டுவிட்டாள். இப்படி ஒரு பதிலை எதிபார்க்காத அவன், உமிழ்நீரை விழுங்கியவண்ணம், அது .. அது .. என்று சற்று இழுத்தபடி, நான் சொல்வதைக் கேட்பதற்கு விருப்பம் இல்லாவிட்டால், இதோ இந்தக் கடிதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அதில் விபரமாக எழுதி இருக்கிறேன் என்று சொல்லவும் அவள் கண்கள் மின்னின. அவள் கையில் இருந்த கைக்குட்டை கீழே விழுந்திருந்தது. அதை எடுக்கக் குனிந்த பொழுது அவள் காலில் அணிந்திருக்கும் செருப்பைத் தான் உருவப்போகிறாள் என்று நினைத்து சற்று நடுங்கிவிட்டான். கைக்குட்டையை எடுத்துவிட்டு, அதெல்லாம் வேண்டாம் .. என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுவிடுங்கள் என்றாள்.
சில நாட்களுக்கு முன் இதே பேருந்து நிலையத்தில் உங்களைக் கண்டேன். உங்களைப் பார்த்த அக்கணமே சொல்லநினைத்தது தான். ஆனால் முடியவில்லை. என்ன நினைப்பீர்களோ என்று தயங்கினேன். அது வேறு ஒன்றும் இல்லை. உங்களைப் பார்த்த பொழுது, விபத்தில் இறந்துபோன என் சகோதரியின் நினைவு வந்து விட்டது. அவளுக்குரிய அதே வட்ட முகம். சுருண்ட கேசம். துருதுருவென்ற கண்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் நிறங்களும் கூட அவள் விரும்பி அணியும் நிறங்களே. என்னை உங்கள் சகோதரனாக ஏற்றுக்கொண்டால் போதும் என்று சொல்லி கையில் இருந்த கவரைத் திறந்து, அதில் இருந்த ராக்கியை அவளிடம் கொடுத்து, சம்மதம் என்றால் என் கையில் கட் டிவிடுங்கள் என்று சொல்லிமுடிப்பதற்குள் அவன் உடல் முழுதும் வியர்த்து விட்டது. அவள் கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகளும்.