உயிருள்ள ஆலமரம்
காலை ஆறு மணி கையில் தேநீர் கோப்பையுடன் செய்தித்தாளை படித்தபடி இருந்தார் சாமிநாதன். சாமிநாதன் சாருக்கு வயசு 66 ஆகுது தடியோட நடந்தாலும் அந்த காலத்து மனுசங்களுக்கே உண்டான கம்பீரமும் , தைரியமும் உடையவர். ஐந்து வருடத்துக்கு முன் தன் மனைவியை இழந்தபின் தன்னோடு வந்துவிடும்படி கூறிய மகனின் அழைப்பை நிராகரித்துவிட்டு தான் சாகும்வரை யாருக்கும் பாரமாய் இருக்கபோவதில்லை என்று கூறி தனிமரமாய் வாழ்ந்துவருகிறார்.
தனக்கென்று இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் இறந்துகொண்டு இருக்கும் விவசாயத்திற்கு கொஞ்சம் உயிர் கொடுத்துக்கொண்டு கிராம வாழ்க்கையில் ஐக்கியமானவர். ஊர்ல சாமிநாதன் சார்ர தெரியாத ஆள் கிடையாது. விவசாய பேரணி, விவசாயிகள் கூட்டம், மரபணு மாற்ற விதை எதிர்ப்பு அப்படின்னு கேள்விபட்டா முதல் ஆளா போய் கலந்துக்குவாரு, சாமிநாதன் சார் தன் வாழ்க்கையில் ரொம்பவும் நேசிக்கற ரெண்டு விஷயம் ஒன்னு விவசாயம் ரெண்டாவது தன்னோட நிலத்துல இருக்கற ஆலமரம். அவரு சொல்லும்போது எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கும் விவசாயம் சரி ஒரு ஆலமரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவமா அப்படின்னு அவருகிட்டவே கேட்டவங்க நெறையாபேர். அவர்களிடம் அவர்கூறியது " என் தாத்தன் , அப்பன் எல்லாரும் விவசாயம் பண்ணும்போது வெயில களைப்பாகிட்ட அந்த மரத்தடியில தான் கொஞ்சநேரம் இளைப்பாருவாங்க உடனே புது தெம்போட மீண்டும் நிலத்துல இறங்குவாங்க, சின்ன வயசுலிருந்தே அதையும் என் குடும்பத்துல ஒருத்தரா பார்த்தே பழகிட்டேன் " என்று கூறுவார்.
செய்தித்தாளை படித்து முடித்த சாமிநாதன் எழுந்து தன் வயலை நோக்கி நடந்தார். வயல் வெளியின் ஓரத்தில் கம்பீரமாய் நின்றிருந்த ஆலமரத்தை சற்றே பாசமாய் பார்த்துவிட்டு அறுவடை செய்வதற்காக வந்திருந்த கூலியாட்களிடம் போய் பேச்சு கொடுத்தார். மதியநேரம் பாதி அறுவடை முடிந்திருந்தது. கூலியாட்கள் அந்த ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே அந்த ஆலமரத்தின் உயரத்தை பற்றி பேசி ஆச்சரியப்பட்டனர். சாமிநாதன் சார்க்கு பெருமையாக இருந்தது " இது என் தாத்தா காலத்துலயிருந்தே இருக்கு, இதோட வயசு நூறுக்கு மேல இருக்கும் நம்ம ஜில்லாவுலையே இவ்வளவு பெரிய ஆலமரத்த பாக்கமுடியாது", என்று கூற கூலியாட்கள் அதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள்.
அப்போதுதான் அந்த வழியே வந்த மின் ஊழியன் ஒருவன் "சார் மரம் ரொம்ப வளர்ந்துடுச்சு பத்தடி தூரத்துலயே கரண்ட் கம்பம் இருக்கு கொஞ்சம் வெட்டிடுங்க இல்லனா அப்புறம் நாங்க வெட்டறமாதிரி ஆயிடும் " என்று சொல்ல , சாமிநாதன் சார் கோவம் கலந்த குரலில் " பத்தடி தொலைவுல இருக்கற உன் கம்பத்த என் மரம் என்னையா பண்ணுச்சு ? இன்னைக்கு கொஞ்சம் வெட்டுன்னு சொல்லுவ நாளைக்கு முழுசாவே வெட்டுன்னு வந்த நிற்பிங்க? ஒரு கிளைய கூட வெட்ட முடியாது " என்று கூற மின் ஊழியன் ஏதும் பேசாமல் இடத்தை காலி செய்தான். கூலியாட்கள் "என்ன ஐயா எல்லா விசயத்துக்கும் பொறுமையா பேசர நீங்களே இப்படி கோவமாயிடீங்க" என்று கேட்க "என்னவோ தெரியல மரத்த வெட்ட சொல்லி சொன்னதும் என்னையும் மறந்து கத்திட்டேன்" என்று சொல்லியபடியே அந்த ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தபடியே நின்றார்.
அன்று மாலை சாமிநாதன் சார் வீட்டிற்கு திரும்பும்போது வீட்டில் அவரது மகன் கதிர் அவர் வருகைக்காக காத்திருந்தான். மகனை பார்த்ததும் முகமலர்ச்சியோடு " வாடா கதிரு எப்ப வந்த? வீட்ல பொண்டாட்டி , புள்ளைங்க எல்லாரும் நல்ல இருக்காங்களா ?" என்று கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்தார். " எல்லாரும் நல்ல இருக்காங்கப்பா! உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?" என்று கேட்க "எனக்கு என்னாப்பா நான் நல்லாதான் இருக்கேன்" என்று கூறினார்.
"ஆமா தகவல் எதுவும் சொல்லாம வரமாட்டியே என்ன திடீர்னு வந்திருக்க?" என்று சாமிநாதன் கேட்க , கதிர் தயங்கியபடியே "அப்பா!.... அது வந்து ...வேறொன்னும் இல்லப்பா நானும் என் நண்பனும் சேந்து புதுசா ஒரு சாப்ட் வேர் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் அதுவிசயமாதான் வந்தேன்!" என்று சொன்னான்.
"பரவாயில்லையே நல்ல விஷயம்தான் ஆனா பணம் அதிகமா தேவைப்படுமே ஏற்பாடு பண்ணிட்டியா?" என்று கேட்டார் சாமிநாதன். "நம்மகிட்டதான் நிலம் இருக்கேப்பா இன்னும் நீங்க ஏன் விவசாயம் பாக்கணும் நிலத்த வித்துட்டு உங்களையும் கூட்டிகிட்டு போய்டலாம்னு தான் வந்தேன்" என்று சொல்ல, சாமிநாதன் சார் கோபமாய் "இத்தனை வருசமா நமக்கு படியளந்த நிலத்த விக்கனும்னு உனக்கு எப்படி மனசு வந்துச்சு? உன் அம்மா இறந்து போனப்பவே சொல்லிருக்கேன் ஏன் உசுரு போறவரைக்கும் என் நிலத்த விக்கமாட்டேன், யாருக்கும் பாரமா இருக்கமாட்டேன்னு அதையும் மீறி விக்கனும்னு வந்திருக்க?" என்று கத்தினார்.
கதிர் அதை அலட்டி கொள்ளதவனாய் "இந்த விவசாயத்த கட்டிகிட்டே இன்னும் எத்தனை நாள் அழபோறீங்க? நிலத்த விற்க நான் முடிவு பண்ணிட்டேன்பா எனக்கு கம்பெனி ஆரம்பிங்க பணம் வேணும் " என்று சொல்ல , " நீ அலட்சியமா சொல்ற விவசாயம்தான் உன்னையும் என்னையும் வாழ வச்சுகிட்டிருக்குது. அந்த நிலத்துல நம்ம ஆலமரம் இருக்கு அப்படிங்கிறத மறந்துட்டியா ?" என்று கேட்டார்.
"அய்யோ அப்பா! அந்த ஆலமரத்துல அப்படி என்ன தான் இருக்கு? உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு இன்னும் ஒரு சின்ன ஆலமரத்த பெருசா பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்டான் கதிர். அலட்சிமாய் கேட்ட அவனை பார்த்து "உலகம் எங்க போனா என்ன? அது இருக்கற வரைக்கும் மனுஷன் சுவாசிக்க வேணாமா? அந்த மரம் உனக்கு சின்ன விசயமா தெரியலாம் ஆனா அந்த மரத்த என் உயிருக்கு சமமா தான் நினைக்கிறேன். சின்ன வயசுல எனக்கு அந்த மரம் என் அம்மாவா தெரிஞ்சது , வளரும்போது ஒரு சகோதரனா தெரிஞ்சது, இப்போ அதுவும் ஒரு பிள்ளையா தெரியுது. அந்த நிலைத்த விக்கனும்னு நினைக்காதடா கதிரு" என்று கண் கலங்கினார் சாமிநாதன்.
"என்ன மன்னிச்சுடுங்கப்பா அட்வான்ஸ் வாங்கிட்டு , விக்கறதுக்கு வேண்டிய ஏற்பாட்ட பண்ணிட்டேன் நாளைக்கு நீங்க கையெழுத்து போட்ட போதும்" என்று கூறிவிட்டு சாமிநாதன் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியேறினான். சாமிநாதன் சார் என்ன செய்வதென்று புரியாமல் சிலையாய் நின்றார்.
மறுநாள் பத்திரம் கையெழுத்தானது, நிலம் கைமாறியது, பணத்துடன் கதிர் அப்பாவிடம் விடைபெற்றான். இரண்டு நாட்களுக்கு பிறகு மரத்தை பற்றிய சித்தனையே ஓடியதால் சாமிநாதன் மரத்தை பார்த்துவர நிலப்பக்கம் போனார். இரண்டு நாட்களில் விவசாய நிலம் வீட்டு மனைகளாய் மாறியிருந்தது, நிலத்தின் முன் "அம்மன் நகர் " என்ற வாசகம் தாங்கிய பலகை வரவேற்றது.
உயர்ந்து நின்ற ஆலமரத்தை சந்தோசமாய் சாமிநாதன் பார்த்தபடியே தன்னை மறந்து நின்றிருக்க வேலையாளின் குரல் அவரது சிந்தனையை கலைத்தது. "அய்யா மரத்த வெட்ட சொல்லி அனுப்பியிருக்காங்க நீங்க விலகி நின்ன நாங்க வேலைய ஆரம்பிச்சுடுவோம்" என்று சொல்ல "தம்பி தயவு செய்து மரத்த வெட்டதிங்கப்பா இது நூறு வருசமா இருக்கற மரம், இத்தன வருஷ மழைக்கு ஒரு கிளைகூட சாஞ்சது கிடையாது! இந்த மரத்த ஏன்ப்பா வெட்டறீங்க?" என்று சாமிநாதன் கேட்க, "சார் முதலாளி மனைகிட்ட இருக்காரு அவருகிட்ட பேசிகோங்க" என்று சொல்லி மரத்தில் கோடாலியை பாய்ச்சினான்.
"தம்பி கொஞ்ச நேரம் காத்திருங்க உங்க முதலாளிகிட்ட நான் பேசுறேன்" என்று கூறியபடியே முதலாளியை நோக்கி ஓடினார் சாமிநாதன். "சார் நிலத்த கொடுத்துடீங்க இல்ல அப்புறம் எங்க வேலைய ஏன் சார் கெடுக்குறீங்க? முதல்ல இடத்த காலிபண்ணுங்க" என்று சட்டென்று
பதில் சொல்லிவிட்டு வேலையாட்களை "டேய்! நீங்க வேலைய பாருங்கடா பொழுது சாயறதுக்குள்ள வெட்டி முடிக்கணும் புரியுதா ?" என்று வேலையாட்களை விரட்டியபடியே காரில் கிளம்பினான் முதலாளி.
வேலையாட்கள் ஆளுக்கொரு கிளையாய் வெட்ட ஆரம்பித்தார்கள், கோடாலியின் ஒவ்வொரு வெட்டும் தன்மீது விழுவது போன்று சாமிநாதன் உணர்ந்தார். கிளைகள் ஒவ்வொன்றாய் வெட்டுப்பட்டு கீழே விழுந்தது. தன் கண் முன்னாள் தான் நேசித்த மரம் வெட்டபடுவதை நினைத்து சாமிநாதன் மனம் உடைந்து அதே இடத்தில் உறைந்து நின்றார். மரம் முழுவதுமாய் கீழே சாய்ந்து விழுவதை பார்த்துகொண்டே சாமிநாதன் சார் உடலும் நிலத்தில் சரிந்து விழுந்தது.
நூறு வருடத்திற்கும் மேலாக கம்பீரமாய் நின்ற மரத்தை கோடாலி சாய்த்தது, 66 வருடங்களாய் கம்பீரமாய் வாழ்ந்த சாமிநாதனை அவரது உணர்வுகளை புரிந்துகொள்ளாத உறவுகள் அவரை சாய்த்தது. அவரது உடலை பார்த்து கண்ணீர்விட்ட மகன் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் வேகமாய்
ஓடினான்.
அவன் நிலத்திற்கு போய் பார்த்தபோது அங்கே ஆலமரம் சிறு சிறு துண்டுகளாய் வண்டியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. "வேகமா வண்டியில ஏத்துங்கடா" என்று கத்திக்கொண்டிருந்தார் முதலாளி. அவரிடம் சென்று "தயவு செய்து அந்த மரத்த என்கிட்டவே கொடுத்துடுங்க சார்" என்று கேட்டான் கதிர். "மரத்த முழுசா வெட்டி முடிச்சுட்டோம் இப்ப அத எதுக்காக கேட்குறீங்க?" என்று கேட்டார் முதலாளி. "என் அப்பா வாழும்போது எனக்கு புரியல இந்த மரத்த அவரு எவ்வளவு நேசிச்சாருன்னு அத அவரு செத்து புரியவச்சுட்டாரு ! அவர் உடல இந்த மரத்துலயே தகனம் செஞ்ச அவரு ஆத்மா கொஞ்சமாவது நிம்மதி அடையும்னு நினைக்கிறேன்" என்று கூறியபடியே மரத்தை வாங்கிப்போனான் கதிர்.
முற்றும்.