நாய் ==சிறுகதை ==மெய்யன் நடராஜ்

அவசரமான இளங்காலை அது. அவரவர் தங்கள் அன்றாடக் கடமைகளில் மும்முரமாய் இருந்தார்கள். மிகவும் பரபரப்பான அந்த தெருவில் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள். குவிந்து கிடக்கும் குப்பைக் கூளங்களை அள்ளி தெருவில் ஆங்காங்கே சேர்த்துக்கொண்டிருந்தார்கள் .அவர்களைச் சுற்றிலும் பல தெரு நாய்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தன .அலைந்து கொண்டிருந்த அந்த நாய்களின் கூட்டத்தில் ஒரு நாய் எங்கேயோ கிடந்த ரொட்டித் துண்டொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தது .அது தூக்கி வந்ததை கண்டுவிட்ட ஏனைய நாய்கள் அதை பறித்துக் கொளவதற்காக பாய்ந்து சென்றன. எதேச்சையாய் அந்த நாய்கள் வருவதைக் கண்ட அந்த நாய் ரொட்டியோடு ஓடித் தப்ப முயற்சிக்க, அதற்குள் ஓடிவந்த அந்த நாய்கள் கண்மூடி திறப்பதற்குள் அந்த நாயின் வாயில் இருந்த ரொட்டித்துண்டை சண்டையிட்டு பறித்துவிட்டன .அதுமட்டுமல்ல ரொட்டிக்காய் சில நாய்கள் தங்கள் பல்வரிசையையும் காட்டிவிட்டிருந்தன.
'ச்சே.. என்ன வாழ்க்கை இது வாய்க்கு எட்டினது வயித்துக்கு எட்டாமல் போய் விட்டதே " ஆதங்கப்பட்டுக்கொண்ட அந்த நாய் "எதற்காக் கடவுள் இந்த நாய் பிறப்பை கொடுத்தான் ? எனக்காக எனக்கும் என்னால் பிறர்க்கும் பிரயோஜனமில்லா இந்த வாழ்வு எதற்கு ?' தன்னைத் தானே கேட்டுக்கொண்டு பசி தாளாமல் கால் போன போக்கிலே போனது. போன இடமெல்லாம் பசிக்கு இரையாய் எதுவும் கிடைக்காமல் தெருவை மோப்பம் பிடித்துப் பார்த்தது .குப்பை வண்டி வந்து போய்விட்டதால் தெரு அப்போதைக்கு நாயின் வயிறைப்போலவே சுத்தமாக இருந்தது. முடிவில் ஒரு தேநீர் கடைப்பக்கம் சென்றபோது யாரோ தின்று வீசி எறிந்த பொதியொன்று கண்ணில் பட அதை கௌவிக்கொண்டு ஒரு பேரூந்து தரிப்பின் பின் புறமாக தூக்கிச் சென்றது. முதல் நாள் எவரோ வாங்கி வீசிய உணவுபோலும் துர்மணம் வீசியது. என்றாலும் பசி ருசி அறியாது மட்டுமல்ல துர்மணமும் அறியாது என்பதாய் அதை தின்று தீர்த்தது. தற்போதைக்கு வயிறு நிறைந்து விட்டதால் மேலும் அந்த ஏறு வெய்யிலில் அலைந்து திரியாமல் பேரூந்து தரிப்பின் நிழலின் இதமான சுகத்தால் சற்றே அவ்விடத்திலேய சுருண்டு படுத்தது அந்த நாய்.

சுருண்டு படுத்த அந்த நாயின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதியது. 'படைத்ததுதான் படைத்தான் ஒரு வளர்ப்பு நாயாய் வாழும் பாக்கியத்தோடாவது படித்திருக்கக் கூடாதா? சொகுசாக வாழ்ந்திருக்கலாம் ' என்று தோணியது .அடுத்த கணமே அந்த நினைப்பும் வேண்டாம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. காரணம் யாரோ ஒருவர் தன வளர்ப்பு நாயை கழுத்தில் பட்டியை போட்டு அது போகும் வழிக்கு போகவிடாமல் தன் வழிக்கு அதை இழுத்துச் சென்றதை பேரூந்து நிலைய சுவரின் விரிசலொன்றின் ஊடாக பார்த்து விட்டது. 'இப்படி அடிமையாய் அவர்களிடம் வாழ்வதைவிட சோறில்லா விட்டாலும் சுதந்திரமாய் வாழ்வது மேல். எஜமானரின் சொகுசு சிறையில் ஒரு சுதந்திரக் கைதிபோல் இருப்பதா வாழ்வு? அவர் வரும்போது கூலிக்கு மாரடிக்கும் சில மனிதர்களைப்போல் வாலாட்ட வேண்டும். உண்மையான விசுவாசத்தோடு என்று இல்லா விட்டாலும் போடும் எலும்புத் துண்டுக்காக வேணும் வாலாட்ட வேண்டும். இது போன்ற கொத்தடிமைகளால் எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் நாய் என்று மனிதர்களால் என் போன்ற ஏனைய நாய்களுக்கும் கெட்டப் பேர்.அதுமட்டுமல்ல எஜமானர்கள் வீட்டை இரவு பகல் காவல் காக்கும் சம்பளமில்லா வேலைக்காரர்கள் இவர்கள். இருந்தும் மலசலம் கழிக்கக் கூட அனுமதி பெற வேண்டிய கட்டாயம் வேறு " என்று தனக்குள் அலுத்துக்கொண்டது அந்த நாய்.
அந்நேரம் யாரோ இருவர் பேரூந்து நிலையத்திற்கு வந்தனர் .அவர்களுக்கான பேரூந்து வரும் வரைக்கும் ஏதோதோ பேசிக்கொண்டார்கள் இடையில் யாரை பற்றியோ பேச்சு எழ அதில் ஒருவன் 'அவனைப்போல ஒருத்தனை நான் பார்த்ததே இல்ல அவனெல்லாம் மனுஷனா .. நாய்.. நாயிலும் கேவலமானவன் ' திட்டினான். .அதை கேட்டதும் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோல் இருந்தது . 'இவர்கள் மத்தியில் எங்கள் இனம் இவ்வளவு கேவலமா? இந்தக் கேவலத்துக்கு யார் பொறுப்பு. இந்த கேவலப் பிறப்பை படைத்த இறைவனின் நோக்கம்தான் என்ன? அவமானமாக இருக்கிறதே.. ஓடுகின்ற எந்த ரயில் முன் பாய்ந்தாவது உயிரை மாய்த்துக் கொள்ளாலாம் போலிருக்கிறதே..' மனதுக்குள் துடித்தது. அதற்குள் அவர்களுக்கான பேரூந்து வந்து அவர்கள் போய்விட வேறு சிலர் அந்த பேரூந்து நிலையத்துக்கு வந்தார்கள். அவர்களுக்கான பேரூந்து வரும் வரைக்கும் அவர்களும் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள் இடையே யாரோ தற்கொலை செய்தவர் பற்றி பேச்சு எழுந்தது."தற்கொலை எல்லா பிரைச்சினைகளுக்கும் தகுந்த முடிவல்ல அது இன்னொரு பிரைச்சினையின் தொடக்கம். ஒருவர் தற்கொலை செய்து கொள்ள எண்ணும்போது அவரின் மரணத்துக்குப் பின் அவர்தம் குடும்பத்தார் எதிர் கொள்ளப்போகும் பிரச்சனைகளை சற்று சிந்திப்பாரானால் தற்கொலை செய்யும் எண்ணமே எழாது தற்கொலை செய்பவர்கள் கோழைகள் .கோழைகள் எடுக்கும் முடிவை இன்னொரு கோழையால் மட்டுமே எடுக்க முடியும்." இதை கேட்டதும் அந்த நாய்க்கு சற்று முன் தோன்றிய தற்கொலை எண்ணம் எவ்வவு கீழ்த்தரமானது என்று தோன்றியது.
'அப்படியானால் சமூகத்தில் இப்படி ஈனப் பிறவிகளாய் வாழும் என்போன்றவர்கள் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எதற்காக வாழவேண்டும்? ஒருவேளை உணவுக்காய் தினசரி செத்து செத்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் என்ன?' மீண்டும் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட போது அவர்களுக்கான பேரூந்தும் வர அவர்களும் போய்சேர பேரூந்து நிலையம் பயணிகள் இல்லாமல் அமைதியாய் சிலநேரம் கிடந்தது. அந்த அமைதியின் மேடையில் தங்கள் ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றும் முகமாக அடுத்து சில பயணிகள் குவியத் தொடங்கியபோது மறுபடியும் பேரூந்து நிலையம் கலை கட்டத் தொடங்கியது
கொஞ்ச நேரத்தில் பல பேரூந்துகள் வந்து போனதால் பேரூந்தை தவற விடகூடாதென்னும் பரபரப்பில் கூட்டம் அலைமோதியது. அவர்களின் அவசர வாழ்வை மிக அமைதியாக கவனித்த வண்ணம் படுத்திருந்த அந்த நாய் பேரூந்து இல்லாத ஒரு சிறிய இடைவேளையில் பேரூந்துக்காக வந்த ஒரு குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி கொடுத்தது. "ஒன்ன வளர்த்ததற்கு ஒரு நாயை வளர்த்திருந்தாலாவது வாலாட்டும். " 'ஏம்மா அப்படி சொல்லுறே..நான் ஒனக்கு என்ன கோரி வச்சேன் ..." ''ம்ஹும் அது ஒண்ணுதான் குறை காசை கொடுத்து கடி நாயை வாங்கின மாதிரி ஒருத்தியை கூட்டிக்கிட்டு வந்திருக்கியே அது போதாதா..'' ''ஏம்மா அவ இப்போ என்ன செய்திட்டான்னு இப்படிக் குதிக்கிறே...?" '' நாய் வைக்கோல் போரை தின்னாது தின்னுற மாட்டுக்கும் அதை கொடுக்காது என்கிற மாதிரி அவ செய்யிறத நீ பார்க்காமலா இருக்கே .." "அவ குணம்தான் உனக்கு நல்லா தெரியுமே அது நாய் வால் அதெல்லாம் நிமிர்த்த முடியாதும்மா." " இப்படி சொன்னா எப்படி நீ ஆம்பிள தானே நீ தட்டி கேட்காட்டி அவள யார் கேட்கிறது ..அதெல்லாம் உன்னை சொல்லி குற்றமில்ல நாயை தூக்கி நாடு வீட்டிலே வைச்சது என்னோட குற்றம் " அலுத்துக் கொண்டாள் அந்தத் தாய் . கூடவே அவனும். எதோ குடும்பப் பிரச்சினை போலும் அதற்காக நாய் நாய் என்று எத்தனை உதாரணங்கள் உவமானங்கள் .இந்த உவமான உவமேயங்கள் எல்லாம் என் இனத்தின் அவமானங்கள் இல்லையா. மனது புகைந்தது அந்த நாய்க்கு. அந்த வேளை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல அடுத்து ஒரு முரட்டுக் கூட்டம் அங்கே பிரசன்னாமாகியது.
"அவனையெல்லாம் சும்மா விடக்கூடாது நாயைக் கொல்ற மாதிரி நாடு ரோட்ல வச்சி சுட்டுத் தள்ளனும்"
உறுமினான் ஒருவன்." சுட்டுட்டா எல்லாம் முடிஞ்சிடுமா முதல்ல நமக்குள்ளே ஒற்றுமை வேணும் ஒரு தெருவிலே ஒரு நாய் குறைச்சா போதும் எல்லாத் தெருவிலே உள்ள நாயும் குரல் கொடுக்கும் அந்த நாய்களுக்கு இருக்கும் ஐக்கியம் கூட நம்மிடம் இல்லை. நம்மில் ஒருத்தனை அடுத்தவன் வெட்டிட்டா அத வேடிக்கை பார்க்கிறதோட போயிடுறோம் யாராவது எதிர்த்து ஒரு குரல் கொடுக்கிறோமா சொல்லுங்க .இப்போ ஆத்திரப்பட்டு என்ன ஆகப் போகுது?" ஆவேசத்தில் உண்மையை கக்கினான் அடுத்தவன் ." சரி விடுடா நாய் குரைச்சா பொழுது விடியப் போவுது எங்கே போயிடப் போறான் நன்றிக் கெட்ட நாய். போறன் விடு நாய் நடுக் கடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்ணி குடிக்கணும் திரும்பி வருவான் பார்த்துக்கோ " ஆதங்கத்தோடு பேசினான் மேலும் ஒருவன் எதோ பாதாள உலக பரிவர்த்தனம் போலும் அங்கும்கூட உவமானமாய் நாய் .எண்ணிப்பார்த்த அந்த நாய் .'ஒரு நாளைக்கு எம் இனத்தைப் பற்றி இந்த மனிதர்கள் எவ்வளவு கேவலமாகப் பேசுகிறார்கள் இவர்கள் மட்டும் என்ன அந்த கேவலங்களுக்கு அப்பாற்பட்டவர்களா ' தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்த பேருந்து வர கொஞ்ச பேர் அதி ஏறிப் பயணித்து விட அடுத்த பேரூந்துக்காய் ஒரு சிலர் மட்டும் பேரூந்தை எதிநோக்கிய வண்ணம் இருந்தார்கள்.
அந்த வேளை அவசர அவசரமாக இருவர் அங்கு வந்து சேர்ந்தார்கள்.அதில் ஒருவன் 'ச்சே ஒரே நாய் பொழைப்பா இருக்கு .போன காரியம் ஒன்னும் சரி வரல்ல பாரு." " அதுக்கு நீ என்ன செய்வ நாய்க்கு நல்லது தெரியாதுன்னு சொல்வாங்க அதுமாதிரி அவனுக்கு நம்ம பொருளோட அருமை தெரியல்" "அது இல்லடா.. இப்போ பார் நாய் சந்தைக்குப் போன மாதிரி எதுவும் வாங்காம சும்மா நேரத்தை வீணடிச்சுட்டோம் பாரு". ''உண்மைதான். என்ன செய்யிறது பஸ்ஸ பிடிச்சு அடுத்த இடத்தைப் பார்ப்போம்" அவசரத்தில் இருந்த அந்த வியாபாரிகளின் வாயிலும் கால் பந்தாய் உருட்டி விளையாட நாய். அங்கு படுத்தநேரம் சரியில்லை போலும் அதுதான் தன் இனத்தைப் பற்றி பலதும் கேட்டுக் கேட்டு படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது அந்த நாய் .இன்னும் கொஞ்ச நேரம் இப்படிக் கேட்டுக்கொண்டிருந்தால் அதற்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இருந்தாலும் அவ்விடத்தை விட்டு நகன்று சென்று வேறிடத்தில் படுத்து சாதிக்க ஒன்றும் இல்லை என்பதால் இன்னும் என்னதான் சொல்லுவார்கள் பார்ப்போம் என்று எண்ணியவாறு சற்று எழுந்து ஒரு வட்டம் சுழன்று மீண்டும் அதே இடத்தில் படுத்துக் கொண்டது.
பலரும் வருவதும் போவதுமாக இருந்த அந்த பேரூந்து நிலையத்தில் அடுத்ததாய் ஒரு மூன்று பேர். நான்காவதாய் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஐந்தாவது நிமிடத்தில் அவனும் வந்துசேர ஆறுதலாய் ஏதோ செய்யத்தொடங்கினார்கள் .முகத்தை வேறு பக்கம் திருப்பி படுத்துக் கொண்டிருந்ததால் அவர்களின் செய்கையினை காண முடியவில்லை .பேசுவது மட்டும் விளங்கியது .'' நீ அவன்கிட்டே சொன்னியா... ?'' ''சொன்னேன் இப்போ நேரம் இல்லை என்கிறான்'' ''நாய்க்கு பெரிசா வேலை ஒன்னும் இருக்காது ஆனா மெதுவா நடக்காது ' என்கிற மாதிரிதான் அவன்'' இருவர் பேசி முடிக்க மூன்றாமவன் ''இப்போ என்னடா செய்யிறது ?' கேட்டான் .''அதுதான் நானும் யோசிக்கிறேன். நாய் வேஷம் போட்டாச்சி இனி குறைச்சிதானே ஆகணும்' , 'சரி அந்த போத்தல் மூடிய கழட்டு இங்கேயே முடிச்சிட்டுப் போவோம் ''என்றவாறு நால்வரும் நாய் படுத்திருந்த பேரூந்து நிலையத்தின் பின் பக்கமாய் மறைவாய் வந்தார்கள் நாயை கண்டும் காணாதவர்களாக நால்வரும் ஒரு நாலே நிமிடத்தில் போத்தல் மதுவை பகிர்ந்து அருந்தியது போதாதென்றும் நால்வரும் ஆளுக்கொரு திக்கில் சிறுநீர் கழித்து இவர்கள் போன்றவர்கள் தினசரி கழித்த சிறுநீரின் நாற்றம் சகிக்காமல் எச்சிலையும் காரி உமிழ்ந்துவிட்டுப் போனார்கள்.
பகல் என்பதால் இது. இதுவே இரவு நேரம் என்றால் பலபேர் ஆடவர்களுடன் பெண்களும் சேர்ந்து புரியும் துர்நடத்தைகள் மனிதனின் கேவலத்தை அந்த நாய் பலமுறை வேடிக்கைப் பார்த்துள்ளது. பொதுமக்கள் பாவனைக்கு என்று அமைக்கப்பட்ட பேரூந்து நிலையங்களின் பின்னால் அவ்வந்த சமூகத்தின் அநாகரீகம் குடியேறி குடுப்பம் நடத்துவது மிக மிக சர்வசாதாரணமாய் போய்விட்ட நாட்டில் கலாச்சார சீரழிவு தொடர்கதையாய் இருக்க தன்னை மாற்றிக் கொள்ளதெரியா மனிதன் வார்த்தைக்கு வார்த்தை எதற்கெடுத்தாலும் என் நாய் இனத்தை உதாரணம் காட்டுவது எந்த வகையில் நியாயம் என்னும் அந்த நாயின் நியாயமான் கேள்வி அதன் மனதை குடைந்தது .அந்தக் குடைச்சலுக்கு ஆறுதலாக அடுத்து வந்த ஒருவரின் பேச்சு அமைந்தது. அவன் தன் கையில் வைத்திருந்த அன்றைய நாளிதழில் எதையோ சுவாரஸ்யமாய் படித்து விட்டு அதை மற்றவனுக்கு வாசித்துக் காட்டினான்
"ஒரு நாய் தன் வாலை வெட்டிக் கொண்டது .
தன்னையாரோ
நன்றிக் கெட்ட நாய்
என்று சொல்லிவிட்டார்களாம்.
நன்றிக்குத்தானே வாலை ஆட்டுகிறேன்
அதுவும் இல்லை என்றால்
எனக்கு வாலெதற்கு?
நானும் மனிதர்களை போலவே
இருந்துவிட்டுப் போகிறேன்றேன் என்றதாம். "
;நல்ல கவிதை இல்ல''என்று அவன் பூரித்த அந்த கணத்தில் சற்று அந்த நாயும் பூரித்துதான் போனது."நம்மை வைத்து அவர்களின் முகத்திரையை கிழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒ .. ஒருவேளை கடவுள் நம்மை படைத்தது மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொருகட்டத்திலும் உதாரணமாய் நாம் இருக்கவேண்டும் என்றுதானோ? அதுதானே கடவுள் எதையும் காரணமின்றி படைக்கமாட்டாரே..இப்போதல்லவா புரிகிறது ஆறறிவு படைத்த மனிதனுக்கு ஐந்தறிவு மிருகமான எங்கள் நாய் இனம் முன்னுதாரனத்தின் முன்னோடி என்று. சே இப்படி ஒரு மகத்துவமான படைப்பாய் இருந்துகொண்டு மடைத்தனமாக மனிதர்களை போல துன்பத்திற்கு பயந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்தேனே .அது எவ்வளவு பெரிய தவறு.நான் எதற்கு சாக வேண்டும் மரம் வைத்தவன் தண்ணி ஊற்றாமல போவான் என்று இந்த மனிதர்கள் சொல்வது உண்மையானால் கடவுள் எனக்கும் படியளக்காமலா போவிடுவான் .இனி என்ன துன்பமோ துயரமோ வந்தாலும் அதை சகித்து நான் வாழ்ந்தேயாக வேண்டும் " முடிவான அந்த முடிவுடன் படுத்திருந்த அந்த நாய் உற்சாகத்தோடு எழுந்து சோம்பல் முறித்து உடம்பை ஒரு உதறு உதறி குலுக்கிக் கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்தது.

அது வந்த நேரம் ஒரு வெள்ளை வாகனம் சற்று ஓரமாய் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது .அதைப் பார்த்ததும் சமீபகாலமாய் மனிதர்களின் பேச்சில் வெள்ளை வான் கடத்தல் பற்றிய ஞாபகம் வந்தது அதற்கு. இது இன்று யாரையோ குறி வைத்துள்ளது என்று எண்ணிக்கொண்டது அந்த வண்டியின் அருகில் யாரும் இல்லாத காரணத்தால் பழக்கதோஷம் காரணமாய் தனது பின்னங்காலை தூக்கி சிறு நீர் கழிக்கத் தொடங்கியது .அந்நேரம் மடாரெண்டு வண்டியின் பின்பக்கக் கதவு திறக்கப் பட்டு இறங்கிய முகமூடி அணிந்த இருவர்.தங்கள் கையில் இருந்த கயிறை நாயின் கழுத்தில் வீசி பிடித்து வண்டிக்குள் தள்ளி தாங்களும் வண்டிக்குள் ஏறிக்கொண்டார்கள். அப்போது அந்த நாய்க்கு அங்கு நடப்பது சொல்லாமலே புரிந்தது. தெருநாய்களை அழிக்க இருவர் கைகோர்த்த அபாயத்தில் சிக்கிய நிலையில் மீட்க யாரும் இல்லா சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நன்றாகவே புரியத் தொடங்கியது .அங்கு இனி திமிறி இனி ஆகப் போவது ஒன்றும் இல்லை .மரணம் நிச்சயிக்கப் பட்ட அந்த தருணத்தில் ஒருமுறை வண்டியை நோட்டமிட கிடைத்ததில் தன் இனத்தைக் கொல்ல விஷ ஊசி மயக்க மருந்து தடி என்று இன்னும் ஏதேதோ. ''தன்னைபோலே பிற உயிரும் வாழ்வதற்கு வழி சொல்லத் தெரியா மனிதன் அழிப்பதற்கு காட்டும் ஆர்வத்தை ஆக்கத்திற்கு காட்டினால் எத்தனை நன்று.'' எண்ணி முடிப்பதற்கு முன்னே மயக்க மருந்தை அந்த நாயின் முகத்தில் தெளிக்க அது மயக்க நிலைக்கு போய்க்கொண்டிருந்தது .ஒரு இனத்தை அழித்து தன் இனத்தின் கைகளை ஓங்கச் செய்யும் சர்வாதிகாரம் ஆயுத பலத்தால் ஆயுள் பலம் கொண்டதாகும்போது தாழ்த்தப்பட்ட இனங்களுக்கு இந்த உலகில் விமோசனமே இல்லையா .உலகில் எது நடந்தாலும் எம் இனத்தை வைத்து மோப்பம் பிடித்து துப்பு துலக்கும் மனிதம் துப்பு துலக்கும் என் இனத்தையே துப்பரவு செய்யும் அநியாயத்திற்கு இந்த மண்ணில் நீதி இல்லையா? மரணத்தின் மடியில் ஈழத்தமிழனின் ஏக்கமாய் வெளிவராமல் போன நாயின் உள்மனதின் கேள்விகள் மெல்ல மெல்ல மரத்துப் போக அதன் மேனியில் குத்தப்பட்டது ஒரு விஷ ஊசி. (முற்றும் )

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Jul-14, 5:46 pm)
பார்வை : 590

மேலே