கிருமி கிருமி கிருமி பகுதி- 2

அன்பு நண்பர்களே,
நுண்ணிதின் நுண்மையான நுண்ணுயிர்களை பற்றி கண்டோம். சுமார் 87 லட்சம் வகையான நுண்ணுயிரி வகைகள் உள்ளன. பொதுவாக நுண்ணுயிர் என்றால் எதோ சிறு கிருமி என்றும், அது சிறிய விஷயமென்றும் பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் நுண்ணுயிரிகள் வலிமையானவை, தங்களின் புறச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வது. நுண்ணுயிரிகளை பாக்டீரியா (bacteria), பூஞ்சைகள் (fungi),பாசிகள் (algae), ஒரு செல் மிருகம் (protozoa), வைரஸ்கள் என்று ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். நீங்கள் உங்கள் இல்லத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக ரொட்டியோ, அல்லது தேங்காயோ வைத்திருந்தால், அதன் மீது நூலிழை போன்று கருப்பாக, பச்சையாக சில வளரும் பொருட்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் தான் பூஞ்சைகள். நாம் உண்ணும் காளான்கள் கூட இந்த பூஞ்சை இனத்தை சேர்ந்தவைகளே!!! நீங்கள் சில பழைய கோவில்களுக்கு செல்லும்போது அங்குள்ள குளங்களில் பச்சையாக படர்ந்திருக்கும் உயிரிகளை பார்த்திருப்பீர்கள் அல்லவா... அவைகள் தான் பாசிகள் (algae). இவை பார்பதற்கு பச்சையாக ஒரு செடி போன்று இருந்தாலும், இவைகளும் செல் அளவில் மிகப்பெரும் வேறுபாடு உடையவை. பாக்டீரியாக்களை நீங்கள் பலமுறை ருசித்திருப்பீர்கள் (பயப்படாதீங்க). தயிர், வெண்ணெய் போன்றவைகளை உண்டிருப்பீர்கள் அல்லவா??!! அவைகளெல்லாம் லாக்டோபசிலஸ் (lactobacillus) என்னும் நுண்கிருமியின் மாயமே. நீங்கள் அவற்றினைக் கண்ணாரக் காணவேண்டும் என்றால், ஒரு நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் உங்களால் இவற்றினை பார்க்க முடியும். வைரஸ்கள் இன்னும் சிறு வகையான உயிராகும். இவற்றினை உயிரென்று சொல்லுவதை விட உயிரற்ற உயிரி என்று சொல்லலாம் (ரொம்ப குழப்பமா இருக்கோ??!!) ஏனெனில் இந்த வைரஸ்கள் தனித்தியங்கும் தன்மை அற்றவை. இவைகள் இயங்க இன்னொரு செல் அல்லது உயிரி தேவை என்பதால் ஒரு செல் சார்ந்து வாழ்கின்ற ஒட்டுண்ணி என்று சொல்லபடுகிறது. இந்த வைரஸ்களை நாம் சாதாரண நுண்ணோக்கி கொண்டு பார்க்க முடியாது, அதற்கென எலெக்ட்ரான் நுண்ணோக்கி கொண்டே அதனை நம்மால் காண முடியும். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 1918ஆம் வருடம் முதல் உலக மகாயுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட, அதே வருடம் இன்ப்லுஎன்சா வைரஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாம். யுத்தத்தில் இறந்தவர்கள் சுமார் ஒரு கோடி பேர் என்றால், இந்த வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியாகும். இந்த கிருமிகள் அண்டார்டிக்கா என்னும் தென்துருவ பனிபடர்ந்த காடுகளிலிருந்து, வெந்நீர் ஊற்றுகளில் கூட உள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு ஊசியின் முனையில் கூட லட்ச கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜெனில் பாதி நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படுபவை. உணவுப்பொருட்கள் தயாரிப்பிலும் (குறிப்பாக பீர், வைன், சீஸ் ) இந்த நுண்கிருமிகள் பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், நாம் உட்கொள்ளும் நுண்கிருமிக்கொல்லி கூட நுண்கிருமிகளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மேலும் வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜென் வாயுவினை மண்ணுக்குள்ளே நிறுத்தி, செடிகளுக்கு தேவையான நைட்ரஜென் மூலக்கூறாக மாற்றுவதும் நுண்கிருமிகள் தாம். நுண்கிருமிகள் இல்லையெனில் ஒரு செடியால் வளர முடியாது. தற்போது வரும் உயிரி உரவகைகள் எல்லாம் நுண்ணுயிரிகளின் தொகுப்பே. பல வகையான புவி ஆற்றல் சுழற்சியிலும், உணவு சுழற்சியிலும் நுண் கிருமிகள் ஆற்றும் பங்கு அளப்பரியது. நுண்கிருமிகள் மட்டும் இல்லையெனில் இந்த புவியில் இறந்து போகும் உயிர்களின் உடல்கள் அணைத்தும் மட்காமல் அப்படியே இருந்து, நாம் வாழ்வதற்கு இடமில்லாமல் போகும். இவ்வளவு ஏன்!! நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆகுவதற்கு கூட நுண்ணுயிரிகளின் தேவை அவசியமானது. சிலவகையான பூஞ்சைகள் தாவரங்களின் வேருக்குள் தொகுப்பாக இருக்கும். பொதுவாக மண்ணில் உள்ள கனிமங்களை (inorganic molecules) தாவரங்கள் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வகையான கனிமங்களை கரிமத்துடன் (organic molecules) வேதியல் மாற்றம் செய்தால் தான், தாவரங்கள் இந்த கனிமங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். தாவர வேர்களில் இருக்கும் இப்பூஞ்சைகள் கனிமங்களை வேதியல் மாற்றதிற்கு உட்படுத்தி தாவரங்களுக்கு உதவுகின்றன. இவ்வகையான பூஞ்சைகள் இல்லையெனில் பூமியில் உணவு சுழற்சியில் மிகப்பெரும் பங்கம் ஏற்படும். இதைப்போலவே ஒவ்வொரு நுன்னுயிரியும் ஆற்றும் பங்கு அளப்பரியதாகும். மனிதனுக்கு மட்டுமல்ல, இன்ன பிற உயிர்களின் தேவைகளுக்கும் வாழ்கைக்கும் நுண்ணுயிரிகளின் உதவி இன்றியமையாதவை. சரி நண்பர்களே!!! இன்றைக்கு இது போதும். மீண்டும் சந்திப்போம்!!! நன்றி!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (30-Jun-14, 1:13 pm)
பார்வை : 302

சிறந்த கட்டுரைகள்

மேலே