முட்டாள் மனிதரின் மூட உலகம்

முட்டாள் மனிதரின் மூட உலகம் !!!

தனக்கென தனித்துவம் உள்ளவனை திமிரெடுத்தவன் என்றும் ,
சொல்லவதை எல்லாம் கேட்கும் தலையாட்டி பொம்மையை பண்பானவன் என்றும், கூறும் உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !

மனம் வழி இரையாக வேண்டிய உடலை ,
பணம் வழி இரையாக்கி பரிதவிக்கும் அபலை அவளை ,
பாவி என்று பரிஹசிக்கும் உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !

திருநங்கையர் என்று விளி சொல்லில் மட்டும் மரியாதை புகுத்தி ,
வேடிக்கை வாழ்வில் சக மானுடராய் கூட ஏற்காத உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !

உயிர்களிடம் அன்பு செய் என்பதுவே அவர் மத கொள்கையாம் .
கொள்கை கொன்று மதம் பரப்பும் உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !

நாளை நிச்சயமற்ற வாழ்வில் ,
கண்ணெதிர் வறுமை காணாமல் ,
நாலைந்து தலைமுறைகளுக்கு சேமிக்கும் உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !

அலங்கார விளக்குகளின் உள் இருப்போர் கேட்ட பணம் கொடுத்து ,
தெருவோர சிறு கடைகளில் பேரம் பேசும் உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !

உபதேசங்கள் உலகினுக்கே என்று ,
உள் உலகம் வேறுபட்டு வாழும் உலகம் ,
முட்டாள் மனிதரின் மூட உலகம் !
..
.....
விட்டால் நானும் செல்வேனே ,
கணக்கிலடங்கா பட்டியல் வழியே !
கடக்கும் பாதை தோறும்
பரிஹாசமே என்னுள் நிரம்ப ,
மேலும் என்ன ??
..
மாற்றம் வேண்டும் எனக்கும் ,
மாற்றம் கொணர முனைப்பில்லையே !

உண்மையும் இதுவோ ?!?
இம்முட்டாள் மனிதரின் மூட உலகில்..
ஐம் பொறிகளும் செவ்வனே வேலை செய்யும் முடவனும் நானோ ?!

எழுதியவர் : மகா !!! (1-Jul-14, 10:33 pm)
பார்வை : 90

மேலே