ஆசையாலே தவறிழைத்து நொந்துகொள்கிறோம்
வறண்ட வானில்
இருண்ட கூந்தலாய்
வெண்மை மேனியாய்
வானில் படர்ந்து
மேகமாக பிறந்தவன்
பசுமை முகம்
புவிக் கண்டு
முகம் மலர்ந்தவன்
ஆசை கொண்டு
அங்கும் இங்குமாய்
அலைந்து திரிந்தவன்
வானில் தனிமை விரும்பா
மண்ணின் மனம் கவர
மாறி மாறி துள்ளிகுதித்து
மாரியாக மண்ணில் வரத் துடிப்பவன்
மோகம் வந்து காமவெறிப் பிடிக்க
ஆர்ப்பரித்து இடியோசையோடு
மின்னலாக மண்ணில் வந்து விழுபவன்
ஆனந்த கூத்தாட்டம் ஆசையாலே
பசுமை மேனியை தழுவத் துடிக்கிறான்
காடு மலையினில் வந்து குதிக்கிறான்
மலையிலிருந்து அருவியாகி
மண்ணைத் தழுவுகிறான்
ஆசை வேகம் அதிகமாகி
ஓட்டமெடுத்து எங்கும் பரவி
புவிமகளின் மேனிநிரம்பி கிடக்கிறான்
நடைபழக நதியில் வருகிறான்
பொறுமையின்றி பொருமித்தவிக்கிறான்
இருகரையில் பசுமை நிரம்பக் கண்டு
அதை ருசிக்க வழிதவற நினைக்கிறான்
இடையிடையே பார்வையினால்
இடைவெளியை தேடுகிறான்
இடைவெளியை கண்டவுடன்
இணைபிரிந்து காட்டாற்று வெள்ளமாக
உருவெடுத்து ஆர்ப்பரிக்கிறான்
கண்ணில் பட்ட யாவற்றையும்
களவுகாவு கொள்கிறான்
ஆனந்தத்தின் வேகத்தினால்
அழுகுரல் அவன் காதில் விழுவதில்லை
தாய்மார்பில் புதைந்த குழந்தையையும்
ஆசை மோகம் காமம் விடவில்லை
காம ஆட்டம் முடிவினிலே
கடலில் சேர்கிறான்
உப்பு தண்ணி பட்டவுடன்
உள்ளம் தெளிகிறான்
மேனியரிப்பில் புழுவாய் நெளிகிறான்
மண்ணில் வந்ததெண்ணி அழுது தவிக்கிறான்
அலை கடலின் ஓசையாக அவன் அழுகுரல்
வெண்மை மேனி கருத்து
தன் இழுத்துவந்த பிணவாடை கண்டு
மூக்கை மூடி மூச்சு முட்டிட
இறையை வேண்டினான்
ஆதவனே நீ மாதவனே
எனை ஆட்கொண்டுவிடு
உப்புக்காற்றும் வாடைக்காற்றும்
என் மனதை குலைக்குது
வேண்டாம் இந்த கொடுமையென
வேண்டிக்கொள்கிறான்
நாளின் முடிவினில்
நன்மை உணர்ந்தபின்
ஆவியாகி வானில் சேர்கிறான்
ஆனால் ஆசை மட்டும்
மாறி மாறி மண்ணில்
மாரியாய் மீண்டும் வந்து சேர்கிறான்