தமிழ்த்தாய் திருப்பள்ளியெழுச்சி

வெள்ளி முளைத்தது கீழ்த்திசை வானில்
...வெளியினி லெங்கும் பரவுது பொற்சுடர்
புள்ளின வோசை புவியிரு ளோட்டப்
...புதுமலர் வீசும் நறுமணங் கூட்டியோர்
தெள்ளிசை பாடுந் திறங்கண்டு மேனுன்
...திருக்கண் திறவா துறங்குகி றாயுனை
எள்ளி நகைத்திடு வாருல கோரே
...யெழிற்றமிழே பள்ளி யெழுந்தரு ளாயே!

வடக்கே தணிகை வரையது மேற்கென
...வற்றிச் சுருங்கியே யிற்றைப் புவியில்
கிடக்கும் நிலையுனக் கெய்திய தேனோ
...கிழத்தி யுனையாம் மறந்தது தானோ
அடக்க மிலாதவ ருள்ளத் துதித்திங்
...அலையும் பிறமொழி யாசைக ளாளே
தொடக்கம் மறந்து துவளுமென் தாயே
...தொழுதிடுவேன் பள்ளி யெழுந்தருளாயே

கடியவ ளன்னையென் றுன்னையுன் பிள்ளைகள்
...காண்பதற் கஞ்சி கசந்தோடு கின்றார்
மடிமையி னாலவர் மன்னிய நின்புகழ்
...மட்டறி யாது மனந்துவள் கின்றார்
கொடிய திதுவென்று கொதித்திடு வார்சிலர்
...கூடியவ ரோடு கூக்குர லிட்டு
நெடிய துனதருமை பாடுதென் வாயே
...நெடுந்தகையே பள்ளி யெழுந்தரு ளாயே

உறங்கிடுந் தாயின் முகங்கலைத் தாடிடும்
...உன்மதப் பிள்ளையின் சின்னலைப்போல
பிறங்கிய செந்தமிழ்த் தாயுனை வெற்றெனப்
...பிண்டமாய்க் கூறல் பிழையென் றறியார்
கறங்கிடும் பூமியில் கந்தையை யுன்மேல்
...கவியெனச் சுற்றி் களிகொள் வதனால்
வறங்கொள் நிலமாய் வடிவழிந் தாயே
...வளம்பெறவே பள்ளி யெழுந்தரு ளாயே

சென்றன மீளா துலகினி லாகையால்
...செந்தமி ழேயினி யாவது செய்குவோம்
மென்றளிர் மேனியில் மேவிய நல்லணி
...மெய்யுறை யாவது போற்கவி சிற்சில
நன்றெனச் செய்துனக் கேயணி வித்திட
...நல்லருள் நல்குவ துன்கட னம்மயிக்
கன்றினுக் கேயமு தூட்டிட நீயே
...கண்மலர்ந்தே பள்ளி யெழுந்தரு ளாயே!

எழுதியவர் : பாரதிப் பித்தன் (4-Jul-14, 10:22 am)
பார்வை : 506

மேலே