ஆண்டவனிடம் ஓர் அறிமுகம்
என் வாழ்வில்
நொடிகளை அடுக்கி கவியாக்குவேன்
சிலவற்றை செதுக்கி பலியாக்குவேன்
எதுவொன்றும் உமக்கு ஈடாகாது
விடு என்றும் மனம் அடங்காது
தடம் தந்தவரே
என் இடம் வந்தவரே
உடன் இருப்பவரே
தாங்கியே நடந்தவரே
சோராத செவிகளோடு
வியக்காத விழிகளோடு
மறக்காத நினைவுகளோடு
அயராத கரங்களோடு
அன்றாடம் இருப்பவரே
விழுந்தேன் என்பதை அறிந்தேன்
முடிந்தேன் என்பதே கேட்டேன்
முடிவுக்குள் மூழ்கினேன்
விடிவுக்கு விரோதியானேன்
கொடியில் இருந்தும்
கொள்ளைப் பொருளானேன்
விலைபேசாமல் விநியோகமானேன்
பகலுக்கு பயந்தேன்
பலருக்கு பதுங்கினேன்
பதிலுக்கு பதறினேன்
பாசத்திற்கு பலதூரம் போனேன்
அருகில் நின்றும்
அத்தனை பேருக்கும்
எத்துனை தொலைவானேன்
நித்தம் எனை கொலை செய்ய
சத்தம் இல்லாமல் ஒத்திகை செய்தேன்
அறிவியல் அனுமதிக்கா ஆண்டவனே
என் அனுபவங்கள் ஆர்க்கிறது உம்மை
என் தூரிகைகள் வேர்த்திருக்கும்
மலர்கள் என் மரணத்திற்க்காய்
பார்த்திருக்கும்
மரங்கள் மரணப் படுக்கைக்காய்
கரங்கள் நீட்டியிருக்கும்
கதவுகளை இடித்து
கட்டாயமாய் நீர் வரவில்லை எனில் ..!
சத்தமாய் பேசினேன்
சந்தர்பத்தால் ஏசினேன்
என்னால் முடியவில்லை
இது என் தோல்வி
இதில் உமக்கு என்ன வேள்வி [ ஈகை] ?
கேள்வி கேட்டேன்
என்னை கேலி செய்வார்கள்
உம் வேலி[காவல்/மதில்] அடைந்தால்?
மென்மையாய் பேசினீர்
உண்மையாய் வீசினீர்
தாயின் உதவி ஏற்றாய்
தந்தையின் தயவில் வளர்ந்தாய்
ஆசானின் அடிகளை அண்டினாய்
அரசனின் அருளை வேண்டினாய்
அன்றாடம் சாப்பிட
அறிமுகம் இல்லாதோரை அரவணைத்தாய்
குன்றுகளின் கொடையால்
குடிக்கிறாய்
கன்றுகளின் தியாகத்தால்
இன்றும் இருக்கிறாய்
நின்று கொண்டிருப்பதும்
நிலத்தின் உதவியால்
இன்னும் பல ....
இதில் தனியே எங்கு நீ தோன்றினாய்?
துணையே இல்லாமல்
உன்னை எப்படி கண்டுபிடித்தாய்?
வென்று விடுவாய் என்று
நின்று பார்த்தேன்
உன்னை கொன்று விட
பார்ப்பதை எப்படி
நான் பார்த்துக் கொண்டிருப்பேன்
பதைத்துப் போனேன்
நீ புதைந்திருந்தால்
பல கதைகள் கருவிலேயே
கலைந்திருக்கும்
நீ கதைக்கப்படவே உன்னை கதையாக்கினேன்
விளையாதவைகளை விளக்கிவிடு
விளக்காய் மட்டும் வருகிறேன்
உன் கண்கள் விளக்கிய
வழிகளை மட்டும் காட்டுகிறேன்
வலிகளை மறந்துவிடு
வலித்தால் தான் ஜொலிப்பாய்
நீ தான் நடக்க வேண்டும்
சரிந்தால்
சரி செய்து விடுகிறேன் உன்னை
விழுந்தால்
எழுப்பி விடுகிறேன் உன்னை
நிலத்தை காட்டுகிறேன்
நலத்தை உன் பலத்தால் பார்
நண்பனாய் ஏற்றுக்கொள்
நல்லவைகளை கற்றுக்கொள்
ஒப்புக்கொண்டால் சொல்
எனக்கு ஒன்றும் வேண்டாம்
நீ வெல்
ஆண்டவனே
உன்னை இல்லை என்போருக்கும்
அவசியமாய் நீ இருக்கிறாய்
உன் எல்லை வந்தோருக்காய்
எந்த எல்லையும் தாண்டுகிறாய்
ஆராய்ச்சிகளுக்குள் நீர் அடங்குவதில்லை
ஆணவ அறிவுகளுக்குள் நீர்
ஆவணப்படுவதில்லை
அடியேனுக்கு உந்தன் அறிமுகம்
என் அறிவுக்கு புது முகம் ...