கருங்காடு
காற்றுக் கூச்சலில்
உதிர்ந்த
சிறகு பூத்த பூவை
கரியதொரு
காவலிலிட்டுப்
பரிகாசம் செய்யும்
இளமாலைப் பொழுதில்
இரண்டறக்கலந்து
அமிழ்ந்தது - பகலின்
லீலா வினோதம் ....
நரைத்த கூடுகளை
நடுநிசியில்
ஆளுயரப் பந்தலாக்கி
ஆடிவரும்
அகால மேகங்களின்
மூச்சடைத்துப்
பொழிகின்ற - பனிச்
சிரமங்களில்
பாதையோரம் விக்கித்து
நாக் குழறியது
ஆசையற்ற வித்து .......
தேவதை வண்ணத்தில்
நெளிகின்ற
இரவின் நாளங்களை
மின்மினித் துடிப்பில்
நிமிர்த்தி
நீள்வட்டப் படகிலேற்றி
நீந்திப்
பிழைக்கிறது
கங்கண உதயம் ......
மொட்டை நிலவுக்கு
புன்னகை வரைந்துவிட்டு
நெடுநாள்க் கனியைப்
புசித்த பசியானது
நீர்த்துப் போக
வருடங்களில்
திரண்ட நூற்கண்டுகளைச்
சிக்கலாக்கி - திரும்பும்
திசையில்
வலையாய் விரித்து
காத்திருக்கிறது - ஓர்
வறட்டு விரதம் ….
எண் சாண்
அளந்து சரிபார்க்கும்
பரிதாபமொன்றின்
பல்லைப் பிடித்து
சோதிக்கும்
வெளிர் ஓடையில்
சலசலப்பு ஊர்வலம் ;
கரை குடித்துப்
பழகிய நீருக்கு - இந்தக்
கருங்காட்டின்
சாயக் கழிவும் - துளி
மோட்சம் அடையட்டுமென
முடிந்திருந்தது - இந்த
விண்ணப்பம் ….......!