கள்ள மௌனம் Mano Red
யாருமில்லாத
தனிமை என்பது
மனிதன் வாழ முடியாத
வேற்று கிரகம்..!!
ஆனால் அதுதான்
தனிமையை உட்கிரகிக்கும்
புது உலகம் ...!!
தனிமை
இருளாக இருந்தாலும்,
இதமான வெளிச்சத்தை
தனித்திருப்பவருக்கு தந்து
தவமிருக்கிற அனுபவத்தை
தாராளமாக சொல்லும் ..!!
தனிமை
தன்னைத் தானே
அதிகாரம் செய்யும்,
தள்ளி நின்ற
தவறுகளை எல்லாம்
தனக்காக வம்புக்கு இழுக்கும்..!!
தனிமை
அதிசிறந்த புத்திசாலி தான்..!
ஆனாலும்
அடி முட்டாளாக்க
அவ்வளவு சுதந்திரத்துடன்
ராஜ தந்திரமாக நடிக்கும்..!!
தனிமையை கொல்வதற்கு
எத்தனை இனிமை வந்தாலும்
அத்தனையையும்
கொன்று விட்டு
தனிமை தனியாகவே நிற்கும்..!!
தனிமை
யாரையும் தேடுவதில்லை,
இருந்தாலும்
தனிமையை நிரப்ப
யாராவது வருவார்களா என
தேடிக் கொண்டே இருக்கும்.!!
தனிமை
வாய்விட்டு சிரிக்காது,
கண்ணீர் விட்டு அழாது,
வெற்றிட சுவற்றை
வெறுத்து பார்க்க வைத்து
உம்மென்று இருக்கும்
கள்ள மௌனமாக...!!!