===+++தீப்புயலாய் புறப்படுடா+++===

ஈகைச் சுடரேற்று
எம்முறவே மனம்தேற்று
ஈழம் செய்யாமல்
அடங்காது உணர்வூற்று...

தேரில் பிணைத்தக்கால்
பாடைக்கால் ஆகிடுமோ
பாரில் மூத்தயினம்
பலமிழந்து போய்விடுமோ...

அறம்கற்று தந்தவனை
அரவமென்ன செய்திடுமோ
புலம்போற்ற வாழ்ந்தவனை
புத்தவெறி புதைத்திடுமோ...

பெருவளத்தான் கொடுத்தவீரம்
பேரிடிக்கும் அஞ்சிடாது
பேரின வாதத்திடம்
மண்டியிட்டு கெஞ்சிடாது...

ஒருசொல் பொய்த்ததனால்
உயிர்விட்ட உண்மையினம்
பொய்யர்களின் வஞ்சகத்தில்
உரிமைகளை துறந்திடாது...

புறப்புண் பட்டதனால்
உயிர்துறந்த சேரன்குலம்
கோழையென்ற பழிசுமந்து
கோணல்வழி சென்றிடாது...

கடைசிமூச்சு உள்ளவரை
களத்தில்நின்று மாண்டவீரன்
கடவுளுக்கு நிகரென்றே
கையெடுத்து தொழுதுடுவோம்...

லட்சாதி லட்சம் உயிர்
நரபலியில் இழந்துவிட்டு
காயாத கருவிழியில்
சென்நெருப்பு மிச்சமுண்டு...

செந்தமிழா ஒன்றிணைந்து
தீப்புயலாய் புறப்படுடா
நீதிவேண்டி ஓயாமல்
உலகத்தையே உளுக்கிடுடா...


-------நிலாசூரியன்.

(கரும்புலிகள் தினத்திற்காக)

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (6-Jul-14, 2:23 pm)
பார்வை : 92

மேலே