நீயென்பதே நான்

பழுத்த சருகுகளாய்
உதிரும் - இந்த
இடைவெளியின்
பிணைப்புச் சேவைகளில்
மிதந்து வரும்
சங்கேதக் குறியீட்டில்
தீர்ந்து போவது ,
உன்
பிள்ளைப் பெருமூச்சில்
படர்ந்து ஆருமென்
மடியாகட்டும்.......

இதழோரப்
பூக்குவளைகளால்
தவழ்ந்து - இமையாமல்
அலைமோதும்
கருமணிக்குள் சுற்றியாடு ,
உன்
பால்மண
உணர்வுகளின் - செந்நிறக்
கீற்றுக் கீறல்களின்
தடவாளங்களைப்
பொதியும்
விழிக்கோளங்களாகிறேன்...

உட்குழிந்த
அரைக்கோளப் பிறையின்
பிசிறல்களோடு
கொறிக்கும் வலிகளால்
உறவாடு ,
உன்
வானம் பார்த்து
அழுமென் கண்ணீரைக்
கடவுளாக்கி
கல்லாக்குகிறேன் ….....

நரம்புகள்
சிணுங்கித் துயருறும்
தேடல்களின்
சினத்தை மறுக்காமல்
அனுப்பிவிடு ,

உயிர்
சொட்டும் ஓசையே !
உன்
யாவுமென்பது
நானாகிப் போவதன்
பூரண சுவர்க்கம்
உன்னில் பிறப்பிக்கும்
ஆறுதலின்
தலைகோதும் பெண்மையாய்
வாழ்வதே …...

விரல் பிடித்துக்கொள்
கனவின் தூரம்
காலடிச் சத்தமாய்க்
காட்டுகிறேன்
உறைந்து போய்விடு
உன்
வழியெங்கும்
தூங்காதென் தோள்கள் …..

தேவ
பிம்பத்தின் நினைவே !
வாரிக்கொள்ளக் கூச்சலிடும்
போர்க்களம்
விரித்துக்
காத்திருக்கிறாய் ,
உன்
துளிப் பிடிவாதத்தைக்
கனிந்துகொள்ளும்
ரசனைக்கு
நொடியுருவமாய்
மலர்கிறேன் ….......

வசந்தம்
தொற்றிய பாலையென்பது
சுட்டெரிக்கும்
கற்பனையாய்த் தீர
உன்
மனதோரம் மண்டிய
மரணப் புதர்களில்
மொய்க்கும்
ஆற்றொணாப் பிரிவுகள்
அவிழ ,

இதயம் வீங்கிய
சக்கரவாகமாய்
நித்திரைச் சாம்பலில்
புரண்டெழுந்து
பூலோகம் தரித்துச்
சுழல்கிறேன் !!!

எழுதியவர் : புலமி (7-Jul-14, 1:55 am)
பார்வை : 1333

மேலே