மறுகன்னம்
பொதுவாக
ஒரு
கற்பனையைத் தேடி
காதலைக்
கனவாக்கிவிட்டு
ஓடிவரும்
நிஜத்தின் வேதனையில்
அடர்கிறது
இருளின் பெரும்பாடு …
வெள்ளை பூத்த
தேசத்தில் மிச்சப்பட்ட
வறட்டுக் கதவின்
கனம் கரைந்த
தொண்டைக்குள்
உடைபட்டுத் தழுதழுக்கும்
காற்றுக் குமிழின் மீது
நீண்டதொரு
பார்வையும் பரிவுமாக
விரிகிறது - ஒரு
களவாடிய சந்தர்ப்பம் …
அஞ்சா
ஓவியத்தின்
கூர் நோக்கமாய் ,
மாயையில்
சுடுகொள்ளி பட்டு
விறைக்கின்ற
செங்குருதியோட்டம்
திடுக்கிடுவதாய்
மாற்று வரம்
ஏந்திய உல்லாசம்
மீண்டும்
தரையிறங்கியதன்
எதிர்திசை
அஞ்சவேயில்லை ….......
கிறுக்குவதில்
போதி தத்துவம்
சுடர்விடும் அறிகுறி
மரமாகவும்
அதன் கிளைகள்
வெற்று இடைவெளிகளாகவும்
இருக்குமென்பதில்
புத்தன்
சாமானியனானான் - நான்
சன்யாசியானேன்....
திசை குறித்த
சந்தேகத்தில் நின்ற
பாதையை
ஓரங்கட்டிவிட்டுப் போகின்ற
திருப்புமுனையானது
உதைபடுகிறது
நாளைக்கும் வருகின்ற
அனுபவத்தின்
உபத்திரவத்தினால் …....
நிராகரிப்பின்
சாதனையில் எக்களிக்கும்
ஒரு
கவளச் சடங்கில்
பலியானது
சதையும் நரம்புமாகத்
துடிக்கும்
தன்மானத்தின்
கழுத்து...........