சிந்தனைச் சிறகுகள்

எனக்குள்ளே
பல சிந்தனைகள்
குறுக்கும் நெடுக்குமாக
ஓடிக்கொண்டே இருக்கின்றன...
ஏதோ ஒன்றைப் பிடித்து
நான் என் பயணத்தை
அதன் வழியில் தொடர்கின்றேன்...
அதைவிட வேகமாக
இன்னொன்று
அந்த வழியே செல்ல...
நான் சட்டென்று
அதன் ஈர்ப்பினால் ஈர்க்கப்பட்டு
இழுத்துச் செல்லப்படுகின்றேன்...
பின் எங்கோ
ஒரு சிறு கணப்பொழுதில்
விடுதலை செய்யப்பட்டவனாய் விழுகின்றேன்...!
ஒரு சுதந்திரப் பறவையாய்
விழும் வழியிலேயே
சிறகுகள் விரித்து
காற்றோடு முட்டி எழுந்து
அங்கு புலப்படும்
அழகிய ஒரு சிந்தனைக்குள்
மெதுவாய் ஊடுருவி
மெய்மறந்து பறக்கின்றேன்...!
ஒருசில நாழிகையில்
வானவில்லினைப் போல்
அது கரைந்து காணாமல் போகின்றது
சிறகுகள் மாயாமாக
மறைந்துவிடப்போவதை உணர்ந்து
நான் வேகமாகத் தரை இறங்குகின்றேன்...!
அங்கே
ஓர் அழகிய நதிக்கரையினில்
அமர்ந்தவாறே
பாதங்களை அதன் தெளிந்த நீரினில்
குளிர்வித்துக்கொண்டு
எந்த சிந்தனைக்குப் பின்
இப்பொழுது ஓடுவது என்று
யோசித்துக் கொண்டிருக்கின்றேன்...!
அதற்குள்
எங்கிருந்தோ ஓர் அழைப்பு வர
மற்ற எல்லா சிந்தனைகளும்
ஒரு கணப்பொழுதினில்
மறைந்து மாயமாகிவிடுகின்றன...!
அது அழைத்த வழியே
நான் சில நாழிகை
விருப்பு வெறுப்பு ஏதுமின்றி
வாழ்க்கையின் பிடிமானம்
விட்டுவிடாதிருக்க
ஓயாமல்
ஓடிக்கொண்டிருக்கின்றேன்...!
ஓய்வு என்னைத்
தேடி வரும் நேரம்
கலைந்துபோன
சிந்தனைகளுள் சில
அரிதாரம் பூசிக்கொண்டு
என் கனவுகளை
அலங்கரிக்கத் துவங்குகின்றன...!
ஏக்கங்கள் எல்லாம்
அங்கே எதார்தம்போல்
அரங்கேற்றம்
செய்துகொண்டிருக்கின்றன..
கொஞ்சம் நான் ரசிக்கின்றேன்
கொஞ்சம் நான் கிறங்கிப் போகின்றேன்
எந்த சம்பந்தமும் இல்லாமல்
என்னை ஏதோ ஒன்று
பயமுறுத்தி எழுப்பிவிடுகின்றது...!
நிகழ்காலத்தின் திரை...
விழிகளின் அருகினில்
மெதுவாய்த் திறக்க
திரும்பவும் அந்த சிந்தனைகள்
குறுக்கும் நெடுக்குமாக
என்னுள் ஓடத்துவங்குகின்றன...!