அடையாளம் தேடி

பலவற்றை சந்தித்து
சிலவற்றை சிந்திக்கிறேன்
இயக்கம் இன்று இறுக்கம்
தயக்கம் இருக்கும்
நெகிழாத்தன்மை அண்மை
துலாபாரமும் தூக்கா பாரம்
தூரம் போகவா
பாரம் ஏற்றவா
யோசனைக்குள் போர்
வாசலில் ஆயுதம்
எனக்குள் கலவரம்

வழியில் குழி
விழியில் சூழ்ச்சி
இதழ்களுக்குள் பேச்சு
மதில் தாண்டாமல் போச்சு
கேளாத செவிகள்
கேட்கும் சொற்கள்
இயங்கும் எழுத்துக்கள்
மயங்காத எழுத்துகோல்
என்ன தான் நடக்கிறது
எண்ணமும் எங்கே நடக்கிறது?

அமைதியான இரவு
மயான நினைவு
விடியும் பொழுது
விதவையாய் வருது
சில்லறைகள் செலவாகி
கல்லறைகள் கனிந்தது
அழுது பசியாற
அன்னை எதற்கு?
அழுது பார்க்க பொழுது ஏது?

தவறிப் பார்க்க
தருணம் தேடவா
வயிற்றுக்குள்ளே கருவறையா
எனக்குள்ளே பிரசவமா
சவங்களுக்கு சன்மானமா
கண்ணகியை காணவில்லையா
உச்ச நீதியில் உள்ளதா
மிச்ச மீதி நீதி
பச்சாத்தாபத்துக்கே
எக்கச்சக்க தாகம்
வானம் வழங்குவதா தானம்
மானம் புழங்குதா காணோம்?

எதுகை மோனை
எதுவும் பேசுமா
உதவும் உள்ளம்
உவமையில் மட்டுமா
புதுமை என்றால்
புரியாத வசனமா
காசுக்கு மட்டும் தான் களைப்பா
காதலும் இன்று பிழைப்பா?
சாதலும் உழைப்பா?

காட்சிகளில் அழகா
அழகுக்குள் காட்சியா
வெண்கலச் சிலையில் தலைவன்
வெறும் தரையில் மனிதன்
சாட்சி காரன் காலில் விழவா
சாட்டை எடுத்து எழவா?

சத்தமிடுவது சாமர்த்தியமா
வட்டமிடுவது சாணக்கியமா
சட்டமிடுவது ஆதிக்கமா
பாதிப்பு போதிக்குமா
சாதிக்கு சமாதி சாத்தியமா
அறிவால் வறட்சியா
அரிவாள் புரட்சியா
ஈழம் முடியுமா
கூழ் தான் கனியுமா ?
தேள் முத்தமிடுமா?
வாள் இரத்தம் வெறுக்குமா?

பி.கு : - இந்த கவிதைக்கு என்ன தலைப்பு வைப்பது என்று எனக்கு தெளிவு வரவில்லை . முடிந்தால் ஒன்று சொல்லுங்களேன் மகுடமாய் மாட்டிவிடுகிறேன்.

எழுதியவர் : Raymond (11-Jul-14, 5:06 am)
Tanglish : adaiyaalam thedi
பார்வை : 156

மேலே