நோயின்மை வேண்டு பவர் - ஆசாரக் கோவை 57

பாழ்மனையுந் தேவ குலனுஞ் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர். 57 ஆசாரக் கோவை

பொருளுரை:

நோய் இல்லாது இருப்பதை விரும்புபவர்கள் பாழான வீட்டினுள்ளும்,
கோயில்களுக்குள்ளும், சுடு காட்டிலும், ஊரில்லாத இடத்தில் வளர்ந்திருக்கும்
ஒற்றை முற்றிய மரத்திற்கடியிலும் தாமே ஒருவராக போகார்.
பகற்பொழுதில் தூங்க மாட்டார்.

கருத்துரை:

பாழ் வீடு, சுடுகாடு, கோயில்கள், தனித்த பாழ் மரம்
இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில்
தூங்காமலுமிருப்பதும் நோயில்லாதிருப்பதற்கு ஏதுவாகும்.

முதுமரம் - ஆலமரமுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-14, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 142

மேலே