படித்ததில் பிடித்தது

எச்சரிக்கை : இது நான் படித்ததில் பிடித்தது ..

ஒருவர் தோளில் தன் மகனை தூக்கிக்கொண்டு பேருந்தில் சென்றார்.
அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை படர்ந்திருந்தது.

"டிக்கெட்" என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. "யோவ் எங்கயா போகணும் .. பதில் சொல்லு" என்று சொல்ல, நடுங்கிக் கொண்டிருந்த அவர் கைகள் பயணச்சீட்டு எடுக்க முற்பட்டது.

நடுங்கும் கைகளில் இருந்த பணத்தை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு "காலங்காத்தால வந்துட்டாணுக என் கழுத்தறுக்க" என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் நடத்துனர்.

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்கொண்டிருந்தார்.

அவரோடு வந்திருந்த மற்றொரு நபர் அவர்களை இறுக்கப் பற்றிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு துயர சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.ஏன் இப்படி சோகம் சூழ்ந்த படி இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.

நான் இறங்கிய அதே பேருந்து நிறுத்தத்தில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத்துடங்கினர் இருவரம். சிறிதுதூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு கிடைத்தது மனம் நிம்மதி அல்ல. ஆழ்ந்த துயரமும், அதிர்ச்சியும் தான்.

மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு.
சிலநெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழ போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டுகதறி அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார். என்ன காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதி சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்த காலத்தில் இறந்து போன தன் மகனை பச்சை ஓலை பாடை கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.

உயிருக்கு உயிரான தன் மகனை தோளில் சுமந்துகொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு. நடத்துனருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன், மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்.

எழுதியவர் : (12-Jul-14, 5:02 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 102

மேலே