பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்
![](https://eluthu.com/images/loading.gif)
[கவிதை வாசிப்புப் போட்டிக்காக எழுதப்பெற்ற கவிதை! அழகான தலைப்பைத் தந்த அகன் ஐயாவிற்கு நன்றிகள் :) ]
பூக்கள்,
‘பூ’மகளின் ஆபரணம்!
பூக்கள்,
‘பூ’மகளின் பொங்குநகை!
பூக்கள்,
தாளலயம் தப்பாமல்
ரீங்கரித்துவருகின்ற வண்டுகட்கு,
தீந்தேன் தருகின்ற
மேன்மைகொள் அன்னை!
பூக்கள்,
மாசிலா மண(ன)மும் மதுரமும் படைத்ததனால் – அவை
மாசிலா இறைவனின்
மகுடத்தை அலங்கரிக்கும்!
பூக்களேயிங்கே
பூவையர் மெ(மே)ன்மையை
அளவிடுங்கோலாம்...அறிவோமே?!
பூக்கள்,
உயிர்த்துதிரும் கணமிங்கே
மிகக்குறைவே யெனினும்,
பூமிக்கது பாரமில்லை! – ஏன்
தனக்கேயுங் கூட!
பூக்கள் கொண்டது,
பொசுக்கென முடியும் வாழ்நாளெனினும்
வாழுங்கணத்தில் - அது
வாழ்தலின் தத்துவம் பகர்கிறதே?!
பூக்கள் உயிர்த்த பொழுதில்,
பூக்கின்ற விழிகட்கெல்லாம்
விருந்து படைக்குநல்
காரியஞ் செய்யும்!
பூக்கள் விரிக்கும் இதழில்
மணக்கும் இனிய சுகந்தம்,
நாசிகட்கெல்லாம்
நல்விருந்தென ஆகும்!
பூக்கள் மருந்தாம், பல்பிணிகட்கு!
பூக்கள் உலகாம்,
புள்ளுகட்கும் வண்டுகட்கும்!
பூக்கள்,
தானுதிர்ந்து வீழ்ந்தபின்னும்
தனையீன்ற தாய்ச்செடிக்கு உரமாகுமிங்கே!!
தோழா.......!
வாவா....!
பூக்களோடுநாம் கைகுலுக்குவோம்....!
பூக்கள் பகரும் வாழ்வினை வாழ்தலின் ரகசியம்,
பூக்களோடுநாம் கைகுலுக்குவதால்,
நம்மனமெனும் பைக்குள் வீழ்ந்து - அதுநம்
மனிதருள் வசப்படட்டும்!!
****************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்