தற்கொலைக் குறிப்பு
காதல் அழைப்பொன்று கண்சிமிட்டலில்
வந்தது
புன்னகை பதிலொன்றை உதட்டிலிருந்து
தந்தேன்
சிவந்த உதட்டில் பச்சைக்
கொடி
நீவந்த சுவட்டில் இச்சை
இடி
சுமந்த வயிற்றுத் தொப்பூள்
கொடி
சொன்னது 'கயிற்றில் தொங்காதே
யடி'
வயதுக்குள் பருவம் நுழைந்து
சொன்னது
ஆணுக்குள் சர்வம் நுழைந்து
பார்க்குமாறு
ஆசையின் அணிவகுப்பு மீசையை
மதித்தது
சேயின் அவமதிப்பில் அன்னையுள்ளம்
கொதித்தது
வாயினிக்கத் தீனிருக்கு நட்சத்திர
விடுதியில்
நானிருக்கப் பயமெதற்கு நச்சரித்து
வாவென்றான்
வாய்க்குச் சோறுபோடும் வாய்ப்பாய்
நினைத்திருக்க
வாய்க்கு அரிசிபோடும் வாய்ப்பை
தந்துவிட்டான்
கவன வார்த்தை காதில்
கதைத்து
அவனின் வித்தை வயிற்றில்
விதைத்தான்
கைப்பிடிக்க வேண்டியவன் கால்பிடித்துக்
கேட்டேன்
நாறடிக்க நாடியவன் நேரடியாய்
மறுத்தான்
அன்னையெனக்கு சொன்னது அன்னைக்குக்
கேட்கவில்லை
இன்னைக்கு நான்வந்து திண்ணையில்
தீக்குளித்தேன்
காதல்பொறி நெஞ்சத்தில் பருவத்தைப்
பற்றவைக்கும்
கன்னிப்பொறி மஞ்சத்தில் உருவத்தைப்
பற்றவைக்கும்