++++ வானம்பாடி - ஒரு பார்வை ++++
![](https://eluthu.com/images/loading.gif)
வானம்பாடி - ஒரு பார்வை! - பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி
1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மொழியின் சிறப்புக்களை வெளிக்காட்டியது மட்டுமின்றி, உலகின் புராதன மொழிகளில் ஒன்றான தமிழில் புதியவகை இலக்கியங்களையும் படைத்துக் காட்ட முயன்றது. திராவிட இயக்கமும் இதனோடு இணைந்து மொழி மற்றும் இனம் சார்ந்த பண்பாட்டை வலியுறுத்தி தனித்துவம் பெறத்தொடங்கியது; மக்களிடம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. இதன்விளைவாகவே 1967-ல் திராவிட இயக்கமான தி.மு.க தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதே வேளையில் மேற்குவங்கத்திலும் நம் பக்கத்து மாநிலமான கேரளத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றன. இதே காலத்தில் சோவியத் இலக்கியத்தின்மீது தமிழறிஞர்களுக்கும் தமிழிலக்கியத்தின்மீது சோவியத் அறிஞர்களுக்கும் ஈர்ப்பு அதிகரித்தது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள்கூட தனித்துவம் மிக்க திராவிடப் பண்பாட்டு ஆய்வுக்களம் நோக்கித் திரும்பியிருந்தன. தமிழ் உரைநடையும் கவிதையும் புதிய பரிணாமம் பெற இவை உதவின.
மேற்கத்திய கவிதையாளர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட புதுமை விரும்பிகள், மரபுப் பிடிக்குள் இருந்த தமிழ்க் கவிதை மீள்வதற்குப் போராட்டத்தை நிகழ்ந்தினர். இதழ்களின் வழி சிலர் தனித்தனியாயும் சிலர் இணைந்தும் போராட்டம் நடத்திய பின்னர் ஒன்றிணைய ஆரம்பித்தனர். பின்னர் உணர்வு வேகத்தில் இயக்கமாகவும் உருவெடுக்கத் தொடங்கினர். அவ்வியக்கத்தில் தனித்துவம் பெற்றதாக "வானம்பாடி' இயக்கம் உருவெடுத்தது.
1970-களின் இறுதியில் செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் "வானம் பாடி' முதல் இதழ் வெளியிடப்பட்டது. அவ்விதழ் "கூடுகள் திறக்கின்றன' என்கிற முழக்கத்தோடு வெளியாகி இருந்தது. புவியரசு, இளமுருகு, ஞானி கி. பழனிச்சாமி, சுந்தரம், அக்கினி புத்திரன், முல்லை ஆதவன் ஆகியோர் தான் "வானம்பாடி'யின் மையக் கருவாக விளங்கினர். இவர்கள் அனைவருமே 22 முதல் 30 வயதிற்கு உட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளையில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த சிற்பி, மேத்தா, பாலா, மீரா மற்றும் கங்கை கொண்டான், சி.ஆர். ரவீந்திரன் ஆகியோரும் "வானம்பாடி'யோடு உறவு கொள்ள ஆரம்பித்தனர். தமிழன்பன், சேலம் தமிழ்நாடன், தமிழவன் போன்றோரும் இத்தகைய ஒன்றிற்காக ஏங்கியது போன்றிருந்து அவற்றில் இணைந்தனர். இதனால் கம்யூனிசம், மார்க்சியம் என்னும் பெயரால் தமிழ்க்கவிதை அந்நியப் படாமல், இந்திய எல்லைகளுக்குள்ளும் புதிய விசாலமான தளத்திலும் பயணம் செய்தது. ஆனாலும் மார்க்சிய நோக்கிலானதே இலக்கியம் என்னும் நோக்கு சுந்தரம், ஞானி போன்றோரிடம் காணப்பட்டது.
"வானம்பாடி' முதல் இதழ் வெளியீட்டின்போது அக்கினி புத்திரனும், புவியரசும் சேர்ந்து அறிவித்த கூட்டறிக்கையை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
"இந்தக் கோவை நகர்
இன்னுமொரு பெத்ரோகிராட்
சோசலிச யாகங்கள்
இங்கேதான் தொடங்கும்
யுகப்புரட்சி முதல்வெடிகள்
இங்கேதான் வாய்திறக்கும்.'
"வானம்பாடி'களின் இத்தகைய தீவிரத்தன்மையும் புரட்சிப் போக்கும் தமிழின் மரபு சார்ந்த கவிஞர்கள், தமிழறிஞர்களின் எதிர்ப்புக்கு உள்ளாயிற்று. "வானம்பாடி'கள் நக்சல்பாரிகள் என்றும்; "வானம்பாடி' இதழ் நக்சல்பாரிகளின் இதழ் என்றும் சந்தேகிக்கப்பட்டது. மேலும் "வானம்பாடி' முதல் இதழின் வெளியீட்டின்போதே விழாத் தலைவராக இருந்த தமிழறிஞர் ம.ரா.போ. குருசாமி புவியரசுவைச் சுட்டிக்காட்டி, "நீங்கள் எல்லாம் யாரென்று எமக்குத் தெரியும்' என்று இரைந்திருக்கிறார். இதனைத் தமிழ்நாடன் தன்னுடைய "ஒரு வானம்பாடியின் இலக்கிய வானம்' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார். இதனால் "வானம்பாடி'கள் அரசின் தனிக் கவனத்திற்கு உள்ளாகினர். இத்தகைய சூழலிலும் தமிழகம் தாண்டி இலங்கையிலும் "வானம்பாடி' கவிதைகள் தனியிடம் பெற்றன.
"வானம்பாடி வந்தாலும் வந்தது
புதுக்கவிதை விலை மதிப்புப்
பெருகிவிட்டது.'
என்று தன் மதிப்பினை வெளியிட்டார் சி. கனகசபாபதி. மேலும் இலங்கையில் வெளியாகும் டொமினிக் ஜீவாவின் "மல்லிகை' இதழ் வானம்பாடிகளின் கவிதையை வெளியிட்டது. யாழ்ப்பாணம் முருகையன் மற்றும் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையினர் வானம்பாடிகளின் கவிதைகளின்மீது மிகுந்த ஆர்வமுடையவர்களாய் இருந்தனர். "கசடதபற', "தாமரை', "தீபம்', "நடை', "அஃக்' உள்ளிட்ட பிற தமிழ் இலக்கிய இதழ்களும் வானம்பாடிகளின் கவிதைகளை வரவேற்றுப் பிரசுரித்தன.
வானம்பாடிகளின் கவிதைமொழி என்பது தனித்தமிழ் என்பதாய் இல்லாமல் ஆங்கிலம், வடமொழி மற்றும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் எனக் கலந்து எழுதப்பட்டது. அதற்கு சமூக நோக்குடைய பொருளை மையமாக வைத்து யாப்புக்கு இசையாது கட்டற்ற தன்மையில் எழுத முயன்ற சூழலே காரணமாகும். மேலும் அம்மொழி நடையையே தம்முடைய தனித்த நடையாய்ப் பயன்படுத்தி எழுதிய வானம்பாடிகள் பலர் முழக்கத் (கோஷத்) தன்மையைப் பயன்படுத்தினர். ஆனால் இவர்கள் பின்பற்றியதாகக் கூறப்படும் மாயாகோவ்ஸ்கி, பாப்லோ நெரூடா, ஹோசிமின் போன்றோரின் கவிதைகள் அத்தகைய முழக்கத் தன்மையற்றன என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
கவிதை என்பது படிப்போனைக் கவர்ந்து விழிப்புடையோனாக மாற்ற வேண்டுமே தவிர, கவிஞன் கலகக்காரனாகவோ, ஆர்ப்பாட்டம் நிகழ்த்துவோனாகவோ, பொத்தாம்பொதுவான கருத்தினை அள்ளித் தெளிப்பானாகவோ இருக்கக்கூடாது. ஆனால் வானம்பாடிகளுக்குள் இத்தகைய உணர்வு கொண்டோர் பலர் இருந்தனர். இதனால் அவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படவும் செய்தன. சேலம் தமிழ்நாடனின் கலகம் செய்யும் வகையில் அமைந்த,
"ராஜாவே எழு
ஆணையிடு
தோழர்கள் கூடட்டும்
தோக்குகள் பாடட்டும்
ராஜாவே
எழு'
என்னும் கவிதை இதற்கு உதாரணமாகும்.
வானம்பாடிகள் மட்டும் ஒற்றுமையாய் இருந்திருந்தால் அவர்கள் ஒரு மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருப்பார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு பல்துறை அறிவுசார்ந்த அறிஞர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர். நிதானமற்று தீவிரத் தன்மை கொண்ட வேகத்தோடு தங்கள் உணர்வுகளை உடனுக்குடன் கவிதைகளில் வெளிப்படுத்தினர். இது அவர்களுக்குள்ளாகப் பிளவினை ஏற்படுத்தியது. புவியரசு வானம்பாடி இதழுக்காய் எழுதிய,
"குழலைக் கொடுங்கள் ஊதுகிறேன்
அனலைப் புனலாய் மாற்றுகிறேன்'
என்னும் கவிதையை ஞானி நிராகரிக்கப் பார்த்தார்.
அதற்கு "புனலையும் அனலாக மாற்றுபவன்தான் புரட்சிக் கவி' என்று காரணமும் கூறினார். மேத்தாவும் வானம் பாடிக்காய்,
"கிழக்கு வானம்
வெளுத்துச் சிவக்குமா?
சிவந்து வெளுக்குமா?'
என்று கவிதை எழுத, உடனே தமிழ்நாடன் மிகுந்த கோபம் கொண்டு,
"வானமே,
கிழக்கு வானமே!
கொஞ்சம் சிவப்பாய் மாறேன் எனக்
கெஞ்சித் தவித்து
ஒப்பாரி பாடாது
எம் கவிதை'
என்று கவிதை வெளியிட்டார். "கண்ணீர்ப் பூக்கள்' கவிதைத் தொகுப்பு வெளியீட்டின்போது மேத்தாவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் கங்கைகொண்டான். இவர்,
"இந்த பூமி உருண்டையைப்
புரட்டிவிடக் கூடிய
நெம்புகோல் கவிதையை
நம்மில் யார் பாடப் போகிறோம்'
என்ற மேத்தாவின் கவிதையைக் கண்டு,
"சகதி ஜகத்தை
நேராகச் செய்யும்
நெம்புகோல் கவிதையை
நான் வடிக்கிறேன்'
என்று சூளுரைத் தன்மையில் பதிலுரைத்தார். இவர்கள் இருவர்க்கு உள்ளேயும் ஏற்பட்ட விரிசல் வானம்பாடி களுக்குள் இருந்த ஒற்றுமையின்மையை வெளிக்காட்டியது. இதேசமயத்தில் வானம்பாடிகளின் கவிதை களை வெளியிட்டுக் கொண்டிருந்த இதழ்கள் சிலவும் அவர்கள் கவிதைகளின்மீது அதிருப்தி அடைந்தன.
"அஃக்' இதழின் ஆசிரியர் பரந்தாமன். இவர் வானம்பாடி கவிஞர்களோடு மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். திடீரென 1972- ஆகஸ்ட் மாத இதழில் அரூப் சிவராமின் ஒரு கவிதையை மேலட்டையிலேயே பிரதானப்படுத்தி வெளியிட்டார். "ஒரு வானம்பாடி கும்பலுக்கு' என்னும் தலைப்பிலான அக்கவிதை,
"சடலத்துப் பசிதான் சாசுவதமென்றால்
நடைபாதை தோறும் சிசுக்கள் கறியாகும்.
வயிற்றுக்கு
உங்கள் பாட்டாளி கவிதை உணவல்ல
சோறு முளைக்கப் பயிரிடு போ.
வாழ்வோ காலமோ
உங்கள் பிரத்யேக
சோளக் கொல்லையல்ல.
கிழிசற் சொற் கோவைக்குள்
மார்க்சிய வைக்கோலாய்
திணித்து நின்று மிரட்டாதீர்'
என்றபடி வெளியாகி இருந்தது. இது வானம்பாடிகளுக் குள்ளாக இருந்த முரண், கவிதைக் கோட்பாடுகள் போன்றன சிக்கலுக்கு உள்ளானதைக் காட்டி நின்றது. இதுமட்டுமின்றி வானம்பாடிகள் சிலரின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகினர். வானம்பாடி தோற்றத்தின் மையக் கருவாக இருந்தவர்களில் ஒருவரான கோவை புதுக்கவிதை வட்டத்தைச் சேர்ந்த முல்லை ஆதவன் அச்சுறுத்தலைத் தாங்க இயலாமல்,
"அடுத்த கவிதை
இப்போது வேண்டாம்
துடிக்கும் கவிதை
எப்போதும் வேண்டாம்'
என்று எழுதி வானம்பாடி என்னும் அடையாளத்திலிருந்து ஒதுங்கி இருக்க முயன்றார். இவை வானம்பாடிகளைச் சிந்திக்கத் தூண்டியது. இத்தகைய சூழல்களை மாற்ற 3-12-1972-ல் வானம்பாடிகளின் அமைப்பு கூட்டம் கூட்டப் பெற்றது. அக்கூட்டத்தில் புரட்சியை மையமாகக் கொண்ட முழக்கத் தொனியிலிருந்து மாறி, தத்துவ நோக்கிலான கவிதைபாட முடிவு செய்யப்பட்டது. ஆறு இதழ்களைக் கடந்திருந்த வானம்பாடி,
ப் மானுடம் படுதல்
ப் மானுடம் பாடுதல்
ப் மானுடனாய்ப் பாடுதல்
ப் மானுடரைப் பாட வைத்தல்
ப் மானுடரோடு பாடுதல்
என்று புதிய கொள்கைகளை வரையறை செய்தது.
ஆனால் மீண்டும் ஒரு சிக்கல் தோன்றியது. யாரையெல்லாம் வானம்பாடிகள் என்று அடையாளப்படுத்துவது என்பது தான் அது. இறுதியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். யாரெல்லாம் வானம்பாடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்களோ- எவரெல்லாம் வானம்பாடி கொள்கைகளுக்கு உட்பட்டு கவிதை எழுதுகிறார்களோ அவர்கள் எல்லாம் வானம்பாடிகள் எனத் தீர்மானம் செய்தனர்.
வானம்பாடி பத்து இதழ்களைத் தாண்டிய பிறகு கவிதைத் தொகுதிகள் வெளியிடும் முயற்சியினை மேற்கொண்டனர். முதல் தொகுப்பு டிசம்பர் 1973-ல் "வெளிச்சங்கள்' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன. அவர்களில் அக்கினி புத்திரன், அரசப்பன், அறிவன், ஆதி, இளமுருகு, இன்குலாப், கங்கை கொண்டான், கதிரேசன், ஞானி, சக்திக்கனல், சித்தன் என்னும் வேங்கடசாமி, சிற்பி, பா. செயப்பிரகாசம், சுந்தரம், தமிழ்நாடன், தமிழவன், தமிழன்பன், தேனரசன், பிரபஞ்சன், புவியரசு, மேத்தா, ரவீந்திரன், பா.வேலுச்சாமி, ஜீவ ஒளி ஆகியோர் "வானம்பாடி'களாவர். செந்தமிழ்மாறன் என்பவரும் பிறரும் வானம்பாடி குழுவினைச் சாராதவர்கள். ஆனாலும் வானம்பாடிகள்போல் எழுதுபவர்களும் வானம்பாடிகள் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்கள் கவிதைகள் சேர்க்கப்பட்டிருந்தன.
அதில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய கவிதைகள் என்ற வகையில் ஞானியின் "திறவுகோல்', சிற்பியின் "நாங்கள்' என்னும் தலைப்பிலான கவிதைகளும்; தமிழ்நாடனின் "ஜீன்' (ஏங்ய்ங்) என்னும் தலைப்பிலான,
"வானம்பாடியே
சிறகை விரி!
பற! பாடு!
உனது பாடலால்
பூமியின் செவிகள்
புல்லரிக்கட்டும்!'
என்று துவங்கும் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இன்குலாப்பின் "பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம்' என்னும் கவிதையும் இடம்பெற்றி ருந்தது. இக்கவிதை இன்குலாப்பின் கவனத்திற்குக் கொண்டு வராமலேயே நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.
மேலும் குறிப்பிட வேண்டிய செய்தி- வானம்பாடிகளாக அறியப்பட்ட கலாப்பிரியா, கல்யாண்ஜி, பரணன், பரிணாமன் ஆகியோரின் கவிதைகள் "வெளிச்சத்தில்' இடம்பெறாமல் போயின. வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு "சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது. இதற்குப் பிறகு வானம்பாடிகள் தனித்தனியாகத் தங்களது கவிதைத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கினர். அதில் முக்கியமானவை:
தமிழ்நாடன் - மண்ணின் மாண்பு (1973).
கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள் (1974).
புவியரசு - இதுதான் (1975).
மேத்தா - கண்ணீர்ப் பூக்கள் (1975).
சிற்பி - சர்ப்பயாகம் (1975).
சக்திக் கனல் - கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும் (1976).
இத்தொகுப்புகள் மட்டுமின்றி இன்குலாபின் "வெள்ளை இருட்டு' (1973), தமிழன்பனின் "தோணி வருகிறது' (1973), தேனரசனின் "வெள்ளை ரோஜா' (1978), சிதம்பரநாதனின் "அரண்மனைத் திராட்சைகள்' (1978) ஆகியனவும் குறிப்பிடத் தக்கவையாக விளங்குகின்றன.
வானம்பாடிகளாக அறியப்பட்ட இன்குலாப், பா. செயப்பிரகாசம் போன்றோர் தாங்கள் வானம்பாடிகளாக அறியப்படுவதனைத் தவிர்க்க விரும்பினர். இதனை இன்குலாப், கவிஞர் ஆரூர் புதியவனிடம் தனிப்பட்ட முறை யில் கூறியுள்ளார். இதற்குக் காரணம், 1962-ல் சீனா இந்தியா வின்மீது போர் தொடுத்தது. அதனை மார்க்சிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மார்க்சிய லெனினிஸ்டுகளும் ஆதரித்தனர். மேலும் சீனப் பக்கத்து நியாயத்தை இந்திய மக்களிடம் கொண்டு செல்ல முனைந்தனர். இதற்கு கலை இலக்கியத் தினை அவர்கள் கருவியாகப் பயன்படுத்தினர். இவர்களின் தாக்கம் உடையவர்களாகக் காணப்பட்ட வானம்பாடிகள் குழுவும் அவர்களோடு ஒத்த கருத்துடைய அமைப்பாகவே கருதப்பட்டது. ஆகவேதான் தொடக்க காலத்திலேயே அவர்கள் நக்சல்பாரிகளாகவும் வன்முறையாளர்களாகவும் தேச நலனுக்கு எதிரானவர்களாகவும் கருதப்பட்டனர். இக்கருத்து மேலும் 1975- ஜூன் இந்திராகாந்தியின் அவசர நிலைப் (எமர்ஜென்சி) பிரகடனத்தின்போது வலுப்பெற்றது.
அவசரநிலையை வானம்பாடிகள் மதுரயுகம் வந்துவிட்டதெனக் கொண்டாடினர். கவிதைகள் பாடினர். மேத்தா 1975- டிசம்பர் "கண்ணதாசன்' இதழில்,
"தேம்பியழுதவர் தெருக்களில்
சுதந்திர தீபம் சிற்பிக்குத் தெரிந்தது
சமதர்ம சூலத்தால்
பிரச்சனைப் பேயின்
மார்பைப் பிளக்கப் புறப்பட்டார் மீரா
இந்தியா என்பது இந்திரா அல்ல
இந்திரா என்பதும் இந்தியா அல்ல
இந்தியா என்பது அறுபது கோடி
ஏழை மனங்களில் எழுதிய கனவு'
என்று கருதியவராக இருந்தபோதிலும்,
"இந்திராவைவிடவும் இந்தியா முக்கியம்
இந்தியாவுக்கோ இப்போது
இந்திரா முக்கியம்'
என்று அவசரநிலைப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கி லும் இந்திராவைப் பாராட்டும் வகையிலும் எழுதினார். மேலும் "இந்தியா இந்திரா 75' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டனர். தொடர்ந்து இந்திராகாந்தியின் அறுபதாம் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும் இந்திராவின் கருத்துகளைக் கவிதைகளாகத் தாங்கிய
"அறுபது மலர்கள்' என்னும் நூலையும் இந்திராவின்
அனுமதியோடு வெளியிட்டனர். இதனைக் கண்ட
பா. செயப்பிரகாசம் அவர்கள், "எல்லாம் ஆகிய சர்வாதிகாரி இந்திராவைக் கவிஞரும் ஆக்கி விட்டார்கள் வானம்பாடி கள்' என்று விமர்சித்தார்.
வானம்பாடி இயக்கத்தின் சரித்திரம் சிறிய கால எல்லைக்குள்ளானது என்றபோதிலும், அதனுடைய பாதிப்பு தொடரவே செய்தது. இவர்களின் கவிதைகள் திரைப்படத் துறையினரையும் ஈர்த்தன. அவர்களின் பாடல்கள் திரைப்படத்தில் இடம்பெற வேண்டுமென பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி பாடல் எழுதியவர்களுள் வானம் பாடிகளின் இறுதிக் காலகட்டத்தைச் சேர்ந்த கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒருவராவார். மரபுக் கவிதைகளால் யாக்கப்பட்ட "வைகறை மேகங்க'ளுக்குப் பிறகு 1978-களில் வெளிவந்த "திருத்தி எழுதிய தீர்ப்புகள்', "இன்னொரு தேசியகீதம்' போன்ற புதுக்கவிதைத் தொகுப்புகள் அவரை வானம்பாடியாக அடையாளம் காட்டின. இன்னொரு தேசிய கீதம் தொகுப்பில் காணப்படும்,
"அவன்
ஒரு பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது'
என்னும் கவிதை அதற்கு உதாரணமாகும்.
பத்தாண்டு கால எழுத்து யுத்தம் நடத்திய வானம்பாடி இயக்கம், முதலில் பூர்ஷ்வா வடிவமாகக் கருதப்பட்ட புதுக் கவிதையை உழைக்கும் மக்களின் உரத்த குரலாக ஒலித்தது. முழக்க வடிவிலான கவிதைகள் மூலம் முற்போக்கு வாதிகளையும் கம்யூனிச இயக்கத்தையும் மக்கள் முன் நிறுத்தியது. தமிழ்ப் புதுக்கவிதையை வளர்ப்பதில் முன்னின்று தமிழை வளப்படுத்தியது. மேலும் சாதாரண உழைக்கும் மக்களும் கவிதை எழுத முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது.
வானம்பாடி ஒரு பறவை. பாடிக்கொண்டே வானத்தில் சுற்றிச் சுழன்று வண்ணங்கள் காட்டி அற்புதம் நிகழ்த்தும். செங்குத்தாக எழும்பும். வானத்தில் எவ்வளவு உச்சத்தை அடைந்தாலும் தன்னுடைய இனிமையான குரலை எல்லார் காதுகளிலும் ஒலிக்கும்படிச் செய்யும். அது கேட்போரைப் பிணித்துப் பாடத்தூண்டும். இன்றைக்கு வானம்பாடியின் சிறகுகள் உதிர்ந்து போயிருந்தாலும் புதுக்கவிதையை எல்லா மக்களிடமும் சேர்த்தது வானம்பாடிதான்.
(கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகள் கட்டுரையாசிரியரின் சொந்தக் கருத்துகள்.)