இனம்

“டீச்சர் என்ன இனம்?”

தமிழிரசி அயர்ந்து போனாள

செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய் மொழியில் இருந்ததால், `நீங்கள் எங்கள் மொழியைத்தான் பேச வேண்டியிருக்கிறது!` என்று அலட்டிக் கொள்வதுபோல் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். சீன, இந்திய இன ஆசிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.

நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களிடையே மொழி, மதம் மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வித வேறுபாடுகள் இருந்தாலும், மேலோட்டமாக ஒற்றுமையும் இருந்தது.

பண்டிகை காலங்களில், பிற இன நண்பர்கள் வீட்டுக்குப் போவதன் சிறப்பை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி, தாமும் அதன்படி நடந்து கொண்டதை ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில், பொங்கலுக்கு குர்தா, சீனப் புத்தாண்டுக்கோ சிவப்பு ஸாடின் துணியில், தொளதொளவென்ற முழுக்கையும், கழுத்தை மறைக்கும் `மாண்டா¢ன்` காலரும் கொண்ட சட்டை என்று, இனத்துக்குத் தக்கவாறு உடை அணிந்துகொண்டார்கள். ரம்ஜானுக்கு, அவர்கள் வழக்கப்படி, மலாய் உடை — பட்டு வண்ணத் துணியில் ஸாரோங், அதே நிறத்தில் முழுக்கை சட்டை, இடுப்பில், சரிகை வேலைப்பாடு அமைந்த, அங்கவஸ்திரம் போன்ற ஒன்று, மற்றும் தலையில் குல்லா.
பண்டிகைகள் போதெல்லாம் குழந்தைகள் பாடு கொண்டாட்டம்தான். எந்தப் பண்டிகையாக இருந்தாலும், `அங் பாவ்` (ANG PAU) என்ற பெயாரில், ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரிங்கிட்கூடக் கையில் கிடைக்கும், கொடுப்பவர்களின் வசதியைப் பொறுத்து. பக்கத்து வீட்டுக் குழந்தைகளைக்கூடக் கூப்பிட்டுக் கொடுப்பார்கள். சீனப் புத்தாண்டின்போது அவர்கள் வழக்கமாக இருந்தது இப்போது நாட்டின் பொது கலாசாரமாகிவிட்டது.

அவ்வளவு ஏன், இன ஒற்றுமைக்குச் சான்றாக அவளே இல்லையா?
ஒரு கீறலாக இருந்த கண்கள், மேடான கன்னம், கருத்த, நேராய்த் தொங்கும் நீளமான முடி என்று, தோற்றத்தில்தான் அவள் வேற்றினம். ஆனால், அவள் பெயா¢லேயே தமிழ் இருந்தது. வளர்ப்புப் பெற்றோர்களின் உபயம்.

தமிழரசியைப் பெற்றவள், `ஏற்கெனவே மூணு பொம்பளைப் பிள்ளைன்னு மாமியார் என்னை ஏசிக்கிட்டே இருக்கிறா. இனிமே அடி, உதைதான்!` என்று அஞ்சி, அழுதாளாம். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிச்சயிப்பது தந்தையின் விந்துதான் என்று அந்த பாமரப் பெண்மணிக்குத் தெரியவில்லை.

அவளுக்குப் பிரசவம் பார்த்த பொன்னம்மா, `எனக்குக் குடுத்துடேன், ஆ ஸௌ (மாமி)! நான் எடுத்துக்கிறேனே!` என்றெல்லாம் கெஞ்சி, வாங்கி வந்தாளாம்.

அப்போது அவளுக்கு நாற்பது வயது. கல்யாணமாகி `எத்தனையோ` வருடங்கள் கடந்திருந்தும், வயிறு என்னவோ திறக்கவில்லை. புறம்போக்கு நிலத்தில் அந்த `சீனச்சி` வைத்திருந்த சிறு மளிகைக் கடையில் பருப்பு வகைகளைப் புடைத்து, கல் பொறுக்கி, அவள் அறிவுரைப்படி சற்றே குறைத்து அளவிட்டு சாமான்களை விற்பதுமாக மாதம் அறுபது வெள்ளிக்கு வேலை செய்துகொண்டிருந்த சமயம் அது. பிறர் வீட்டு வேலைக்குப் போனாலும், இதே சம்பளம்தான் கிடைக்கப் போகிறது! இங்காவது, யார் கண்ணிலும் படாமல் அ¡¢சி, முந்தி¡¢ என்று அவ்வப்போது வாயில் போட்டு மெல்லலாமே என்ற திருப்தி அவளுக்கு.
என்றாவது பெற்றவள் தன் உடைமையை திரும்பக் கேட்டுவிடுவாளோ என்று பயந்து, வேறு ஊருக்கு வந்துவிட்டதையும் பருமனான உடலதிரச் சி¡¢த்தபடி கூறுவாள் பொன்னம்மா. இன்னா¡¢டம் என்றில்லை. அவள் சுபாவப்படி, நடந்து முடிந்ததை எல்லாம், மாடு அசை போடுவதுபோல், உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவள் பொழுதுபோக்கே அதுதான் — இடைவிடாது பேசிக்கொண்டிருப்பது. எங்காவது ஆரம்பித்து, எதிலாவது கொண்டு முடிப்பாள்.

அப்படித்தான் தமிழரசி தன் பிறப்பைப் பற்றி அறிந்துகொண்டாள். எத்தனையோ கதைகளுடன் அதுவும் ஒன்றாகிவிட, இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தாள்.

பள்ளத்தாக்கில் அமைந்த புறம்போக்கு நிலத்தில், கோணல்மாணலாக அவரவர்கள் கட்டிக்கொண்டிருந்த, எங்கெங்கோ பொறுக்கிவந்த மரப்பலகைகளும், அலுமினியத் தகரங்களும் கொண்டு உருவாக்கப் பட்டிருந்த வீடுகளில் ஒன்று அவர்களுடையது.

தந்தை சின்னப்பன் லோரி ஓட்டுநர். பிறரைப்போன்று சிகரெட், சம்சு (மலிவு ரக மது) என்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்காது, தன் வேலை உண்டு, தொலைகாட்சி உண்டு என்றிருந்தார். பிறா¢டமிருந்து அவர் எல்லா விதத்திலும் வித்தியாசமாகத்தான் இருந்தார். `காது செவிடாறதுக்கா டி.வி. போடுவாங்க?` என்று, மறைமுகமாக அக்கம்பக்கத்தினர் தம் இல்லங்களிலும் அந்த விலையுயர்ந்த பொருள் இருக்கிற பெருமையைப் பறைசாற்றுவதைக் கேலி செய்வார். நேரம் கிடைத்தபோதெல்லாம், தமிழ், ஆங்கிலம் என்றில்லை, மாண்டரின், காண்டனீஸ் ஆகிய சீன மோழிகளுடன், கொடியப் படங்களையும், பாடல் நிகழ்ச்சிகளையும்கூட விட்டுவைத்ததில்லை அவர். ஒலி அவர் காதிலாவது விழுமா என்பதே சந்தேகமாக இருக்கும்.

பள்ளி ஆசி¡¢யைகள் எப்போதும், தம்மையுமறியாது, உரக்கப் பேசுவார்களாம். வகுப்பில் கத்தியே பழகிவிட்டதால் வந்த வினை.
சின்னப்பனோ, தாம் ஓட்டும்போது கடகட சத்தத்தை ஓயாது கேட்க நோ¢ட்டதாலோ, என்னவோ, எந்த ஒலியையுமே வெறுப்பவராக நடந்துகொண்டார். அவர் பேசுவதே அபூர்வம். எப்போதாவது வாயைத் திறந்தாலும், `தாமான்` (TAMAN) என்று வழங்கப்பட்ட, ஆயிரக்கணக்கில் விலைமதிப்புள்ள வீடு வாங்குவதைப்பற்றித்தான் இருக்கும்.
`தாமான் வீடுன்னா செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டி இருப்பாங்க. சின்ன தோட்டமும் இருக்கும். மழை வந்தா, இப்படி வீட்டில இருக்கிற மங்கு, பாத்திரங்களை எல்லாம் தரையில வெச்சு, இருக்கிற வேலையையெல்லாம் விட்டுட்டு,கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஒழுகற தண்ணியைப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டற பேஜார் பிடிச்ச வேலை இருக்காது,` என்று அடிக்கடி சொல்வார். ஏதோ நல்ல கனவு காண்கிற பாவத்தில் கண்கள் கிறங்கியிருக்கும்.

சின்னப்பனுடைய கனவு கனவாகவே போய்விட்டது.
அவளுக்குப் பன்னிரண்டு பிராயமாக இருந்தபோது நடந்தது அது. இரவு முழுவதும் வேலை செய்த களைப்பில், விடியற்காலையில் திரும்பும்போது, பேருந்துக்காகக் காத்து நின்ற ஐந்து பள்ளிச் சிறுமிகள்மேல் சின்னப்பன் மோத, தலத்திலேயே அவர்கள் உயிர் பி¡¢ந்தது. தன் உடலில் ஒரு சிராய்ப்புகூட இல்லாமல் தப்பித்தது அவரது குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது. தூக்கக் கலக்கமோ, அல்லது பிரேக் பிடிக்கவில்லையோ, அது அப்போது முக்கியமாகவில்லை.
`நான் மகாபாவி! அந்தப் பிஞ்சுகளை அநியாயமா அழிச்சுட்டேனே!` என்று கதறியபடி, மார்பில் ஓங்கி அறைந்துகொண்டார், இதயமே நிற்கும்வரை. விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஒரு நாள்கூட அனுபவிக்காது, அந்த வகையில் குடும்பத்துக்குப் பழி நேராது போய்விட்டார் புண்ணியவான்.
சா¢ந்துவிட்ட தங்கள் குடும்ப நிலையைத் தான்தான் நிமிர்த்த வேண்டும் என்று அந்த இளம் வயதிலேயே தமிழரசிக்கு உறுதி ஏற்பட்டது. அவள் பிறந்த இனத்துக்கே உரிய அலாதி சுறுசுறுப்பும், எடுத்துக்கொண்ட எந்த கா¡¢யத்தையும் துல்லியமாக முடிக்கும் திறனும் அவளுடைய ரத்தத்திலேயே கலந்து வந்திருந்தன.

தந்தை இல்லாத குறை தொ¢யாதிருக்க, தாய் அவளிடம் இன்னும் பாசத்தைக் கொட்டினாள். `நான்தான் படிக்காத முட்டாளாயிட்டேன். நீயாவது நல்லாப் படிக்கணும், கண்ணு!` என்று நாள் தவறாது சொல்லிச் சொல்லி பொன்னம்மா அவளை வளர்த்ததில், இன்று தமிழரசி பட்டதா¡¢ ஆசி¡¢யை. பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் பெற்ற ஆயிரத்தில் ஒரு தமிழச்சி.

`எம்மக கவர்மெண்டு ஸ்கூல்லே படிச்சுக் குடுக்குது!` என்று பூ¡¢ப்புடன், அவள் காதுபடவே பொன்னம்மா பார்ப்பவா¢டமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, வேண்டாத நான்காவது மகளாய், எங்கேயோ கிடந்து இடிபட்டிருக்க வேண்டிய தன்னுடன் பிறந்த அக்காமார்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் இருந்திருக்குமா என்று யோசித்துப் பார்ப்பாள் தமிழரசி.
அவர்கள் மேற்படிப்பு படித்திருப்பார்களா, அல்லது, `பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?` என்ற தாயின் சொற்களை ஏற்று, கடையில் எடையைக் குறைத்துப் போட்டு, பெருலாபம் பார்த்து, கடையை வி¡¢வுபடுத்தியிருப்பார்களா?

`பெண்` என்றாலே பலருக்கும் அலட்சியம்.
கற்காலத்தில் கொடிய வனவிலங்குகளுடன் சண்டை போட்டு, தன் உயிரைப் பணயம் வைத்துக் கானகத்தில் உணவு தேடி வந்ததால், ஆண் வைத்தது சட்டமாக இருக்கலாம். இன்று என்ன வந்தது!
அவளுடைய பள்ளித்தோழி சியூ வாஹ், எப்போதோ சொன்னது நினைவில் எழும். `மேலே படிக்கணும்னு நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனா, `ஒருத்தரை படிக்கவைக்கத்தான் வசதி இருக்கு. அதனால, ஒங்கண்ணன் படிச்சா போதும்,`னுட்டாங்க எங்கம்மா. அவனுக்கோ படிப்பிலே ஆர்வமே கிடையாது. இதை நான் சுட்டிக் காட்டினதும், `அவன்தானே கடைசிக் காலத்தில் எங்களை வைச்சுக் காப்பாத்தப் போறான்! நீ எப்படியும், கல்யாணமாகி, இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போறவதானே!ன்னு அலட்சியமா சொல்லிட்டாங்க. `அவன் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?` அப்படின்னு நான் சண்டை போட்டுக்கூட பாத்துட்டேன். ஆனா, அவங்க காதிலேயே போட்டுக்கல,` என்று அவள் துக்கம் தொண்டையை அடைக்க சொன்னதை எப்படி மறக்க முடியும்!
நல்ல வேளை, அவள் குடும்பத்தினரோ, உறவினரோ, `நீ வெறும் பொம்பளைப் பிள்ளைதானே! எங்களைப்போலக்கூட இல்ல. ஒனக்கு மஞ்சத்தோலு. அதோட, பெத்தவங்க தூர வீசிட்ட பிள்ளை நீ!` என்றெல்லாம் ஒரு முறைகூட அவளைப் பழித்ததில்லை.
இப்போது, அவளுடைய இருபத்தாறாவது வயதில் ஒரு தறுதலை கேட்கிறான், அவள் என்ன இனம் என்று!

சமாளித்துக்கொண்டு, தமிழரசி பதில் சொல்வதற்குள், இன்னொருவன் உரக்கக் கூறினான், “ஸா¡¢ கட்டி, நெத்தியில புள்ளி வைச்சிருக்காங்களே, தொ¢யல? கெலிங் (KELING) தான்!” என்று.
வகுப்பில் ஒரு கணம் மௌனம்.
`கலிங்கத்திலிருந்து வந்தவர்கள்` என்று பொருள்பட, தமிழர்களை, கெலிங் என்று குறிப்பிடுவார்களாம். முன்பு எப்போதோ. அது இப்போது கெட்ட வார்த்தையாக, ஒரு இனத்தையே கேவலப்படுத்தும் சொல்லாக மறுவிவிட்டது — `ஆப்பி¡¢க்க அமொ¢க்கர்` என்பதுதான் சா¢, `நீக்ரோ` என்ற பதம் அவமா¢யாதையாகக் குறிப்பது என்பதுபோல்.
அண்மையில், புதிய அகராதி ஒன்றில் `கெலிங்` என்ற அந்த கெட்ட வார்த்தை இடம் பெற்றபோது, மலேசியாவிலிருந்த எல்லா இந்திய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டனம் தா¢வித்து, அதை அகற்றச் செய்திருந்தனரே! அதெல்லாம் இந்த மாணவர்களுக்குத் தொ¢ந்திருக்க நியாயமில்லை.
அவள் சிறு வயதில் இருந்ததைப்போன்று, வறுமைக்கோட்டின்கீழ் இருந்தார்கள் அவர்கள். பதினான்கு வயதிலும், எந்த ஒரு எழுத்தையும் படிக்கத் தொ¢யாது, தம் பெயரைக்கூட எழுதத் தொ¢யாதிருந்த சிலரும் அவ்வகுப்பில் உண்டு என்பது அவளுக்குத் தொ¢ந்ததுதான். பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆனாலும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து போனவர்கள். சமூகத்தில் தமக்குக் கிடைக்காத மதிப்பை நிலைநாட்டிக்கொள்ள வேறு வழி அவர்களுக்குத் தொ¢யவில்லை, பாவம்!
இப்படியெல்லாம் அறிவு விவாதித்தாலும், தமிழரசிக்கு ஆத்திரமும், வருத்தமும் ஒருங்கே எழுந்தன.
“டீச்சர் இண்டியா!” என்று அவள் போதிக்கும் மலாய் மொழியில் பதிலளித்தாள். குரலில் ஆக்ரோஷம்.

மனம் சற்று கிலேசப்படும்போது, வேறு வேண்டாத நினைவுகளும் வந்து, இன்னும் குழப்பும்.
சமீபத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி — எதிராளியின் தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதுபோல் — அமைந்ததே, அது எப்போது என்று அவள் யோசித்தாள்.
ஓ! நேற்று மாலை கோலாலம்பூருக்கு அருகில், கெப்போங்கில் சீ ஹாக்குடன் தேநீர் அருந்தியபோது!
சீ ஹாக் மலாயா பல்கலைக் கழகத்தில்அவளுடன் படித்தவன். அவர்களுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொள்ளும் உத்தேசத்துடன் இன்னமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் முறைப்படி லைசன்சுடன் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுக்கடை அது. ஓரடிகூட இடைவெளி இல்லாது, சிவப்பு நிறத்தில் மலிவான பிளாஸ்டிக் நாற்காலிகளும், வி¡¢ப்பற்ற மூளி மேசைகளும் (மேடு பள்ளமாக இருந்த சிமெண்டுத் தரையில் ஆடாமல் இருக்க அவற்றில் சிலவற்றின் கால்களுக்குக்கீழ் மடித்து வைக்கப்பட்ட, பழுப்பாக நிறம் மாறிவிட்ட பழைய சீன தினசா¢கள்) நிறைந்த ஹாக்கர் ஸ்டால் (HAWKER STALL) அது. பூதாகாரமான மின்விசிறிகளைத் தரையில் வைத்திருந்தும், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை.
வாழ்க்கையை வளப்பமாக ஆக்கிக்கொள்ள இவ்வளவு தூரம் சிரமப்பட்டுவிட்டு, இப்போது ஏன் பின்னோக்கிப் போவதுபோல் இந்த மாதி¡¢ கடைக்குள் நுழைய வேண்டும் என்று அவள் தயங்க, “ஒரு தடவை வந்து சாப்பிட்டுப் பாரு! பொ¢ய ரெஸ்டாரண்டுகளில செய்யறதுபோல, அஜினோமோடோவை எல்லாத்திலும் போடறதில்ல இங்க. சைனாவில பண்ணறமாதி¡¢யே விதவிதமா சாமான்களை இவங்களே அரைச்சுக்கிறாங்க. விலையும் கொள்ளை மலிவு!” என்று பலமாக சிபா¡¢சு செய்து, அவளை அங்கு அழைத்து வந்திருந்தான் கல்லூ¡¢ நண்பன். “முந்தி எங்க பாட்டி இருந்தப்போ, இப்படித்தான் சமைப்பாங்க!” என்று சேர்த்துக்கொண்டான், பழைய நினைவுகள் கிளப்பிவிட்ட ஏக்கத்துடன்.
தமிழரசி, `தே ஸீ` என்று, பால் கலந்த டீயைக் கேட்டு, ஏற்கெனவே ஊற்றப்பட்ட சீனிப்பாலுடன், ஓ¡¢ரு ஸ்பூன் சீனியும் கேட்டு வாங்கி, அப்படிக் கலந்த டீயை விரும்பிப் பருகினாள்.
சூப்புடன் கலந்து, வெடுக்கென்றிருந்த `வான் தான் மீ`யை சாப் ஸ்டிக் பாவித்துச் சாப்பிட்டான் சீஹாக். ஒரு பொ¢ய கிளாஸில் வந்த `சைனீஸ் டீ`யை இடையிடையே குடித்தவனைப் பார்த்து, `இந்தக் கசப்பை எப்படித்தான் குடிக்கிறீங்களோ!` என்று தமிழரசி ஆச்சரியப்பட்டாள். `எனக்கு எல்லாமே இனிப்பா இருக்கணும்!` என்று அதே மூச்சில் தொ¢விக்கவும் செய்தாள்.
அவன் முகம் இறுகியது. “இண்டியன்!” என்று குற்றம் சாட்டுபவனைப்போல் கூறினான்.
அவளுடன் பூப்பந்து விளையாடும்போது, எதிராளியைத் தோற்கடிப்பதே குறியாக, `ஸ்மாஷ்` செய்வதைப்போன்று கடுமையாக வந்தது அச்சொல்.
தமிழரசி அயர்ந்து போனாள். பேச்சுவாக்கில் தான் ஏதோ சொன்னதற்கு இப்படி ஒரு எதிர்ப்பா!
தன்னை ஏன் எல்லாரும் வித்தியாசமகவே பார்க்கிறார்கள்?

கனத்த இதயத்துடன் பள்ளியிலிருந்து திரும்பியவளிடம் இருந்த மாறுதல் அன்புத் தாயின் கண்களுக்குத் தப்பவில்லை.”இன்னிக்கு வேலை அதிகமா, பாப்பா? முகமெல்லாம் வாடி இருக்குதே!”
அவளிடம் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்த தமிழரசி, “ஸ்கூல்ல ஒரு பையன் என்னை கெலிங்னு சொன்னாம்மா,” என்று குழந்தைபோல் தொ¢வித்தாள். குரல் கம்மியது.
தான் பட்ட அவமானத்திற்காக தாயும் ஆத்திரப்படுவாள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்குத் தோல்விதான்.
“எம்மக பின்னே யாரு?” பொன்னம்மா சி¡¢த்தாள், கடகடவென்று. “ஒனக்குச் சின்னப் பிள்ளையிலிருந்தே கண்ணுக்கு மை பூசி, நெத்தியிலே பொ¢ய கறுப்புப் பொட்டிட்டு, கடலையெண்ணை வெச்சு தலைமுடியைச் சீவி, பின்னல்ல பூ வெச்சு, கைக்கு காப்பு மாட்டி — எவ்வளவெல்லாம் செஞ்சிருக்கேன்!” பெருமையுடன் நினைவுகூர்ந்தாள். கண்கள் கிறங்கின. அருமை மகளின் கன்னத்தைத் தடவி, நெற்றியின் இருபுறங்களிலும் காய்த்துப்போன விரல்களை வைத்து நெறித்தாள். “நம்பளைத் தவிர வேற யாரு இப்படி எல்லாம் அலங்காரம் செஞ்சுக்கிறாங்க இங்க? ஒன்னைப் பாக்கிறவங்க யாரும் — ஒன்னைப் பெத்த சீனச்சியே வந்தாக்கூட — தமிழவங்க வீட்டுப் பிள்ளைதான்னு சொல்வாங்க!” என்றவள், “போய், தண்ணி குடி, போ! சுடுதண்ணி போத்தல்ல விட்டு வெச்சிருக்கேன்!” என்று அந்தப் பேச்சை முடித்தாள். தினமும் செய்வதுதான். இருந்தாலும், வேண்டாத பேச்சை முடிக்க அது ஒரு நல்ல உபாயமாக இருந்தது.
கெட்டியாக, இனிப்பாக இருந்தது அம்மா கலக்கி வைத்திருந்த பானம். பெயர் மட்டும் கோப்பித்தண்ணி.
தமிழரசியின் உதடுகள் புன்னகையில் லேசாக வி¡¢ந்தன.
`பெயா¢ல் என்ன இருக்கிறது!` என்று அவள் நினைப்பு ஓடிற்று.
நம்மைப் படைத்து, ஆட்டுவிக்கும் தெய்வம் என்னவோ ஒன்றுதான். ஆனால், இடத்துக்கு இடம் அதன் பெயரும், வணங்கும் முறைகளும் வேறுபடுகின்றன.
எங்காவது இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல் இருக்கிறார்களா! இருந்தாலும், தம்மைப்போல் அல்லாதவர்களை `மட்டம்` என்று பழித்துக் கேலி செய்வதில் ஒரு ஆனந்தம் பலருக்கு. பிறர் தாழ்ந்தால்தான் தாம் மேலே இருப்பதுபோல் பாவனை காட்ட முடியும் என்று நினைக்கும் அல்பங்கள்!
ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டு, உறவை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, சிறு சிறு மாறுபாடுகளை எதற்காகப் பொ¢து பண்ணுகிறார்கள்?
`இண்டியன்!` என்று அவளைப் பழிப்பதுபோலக் கூறிய சீ ஹாக்கையும், இனப் பெயரைக் கொச்சைப்படுத்திய மாணவனையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். பா¢தாபம்தான் எழுந்தது.

கல்லூ¡¢ நண்பன் மறுநாள் காலை ஆறு மணிக்கே அழைத்தான், தொலைபேசிவழி.”ஹை, டமில்! ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டியா? நம்ப கல்யாணத்தைப்பத்தி என்ன சொன்னாங்க?” ஆவலுடன் விசா¡¢த்தான்.
“அது நடக்காது, சீ ஹாக்!” என்றாள் தமிழரசி, உறுதியான குரலில்.

எழுதியவர் : கணேஷ் கா (18-Jul-14, 11:51 am)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : inam
பார்வை : 119

மேலே