அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

” ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? ”

” குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் வைப்பாரம், உங்களுக்கு என்னைத் தர மாட்டாராம்! ”

“ஏன் நான் உன்ன வெச்சு காப்பாத்த மாட்டேனாமா, இல்ல கல்யாணம் செஞ்சுட்டு கழட்டி விட்டுடுவேனாமா? ”

” இந்த லொள்ளுதானே வேண்டாங்கறது, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சீங்களா? ”

” எங்கம்மாகிட்டே பேசினேன் , அவங்க அண்ணணை அதான் உங்கப்பனை எதிர்த்து ஒண்ணும் செய்ய மாட்டாங்களாம். ஆனா முடிவா சொல்லிட்டேன் நீதான் எம்பொண்டாட்டின்னு! ”

” நெசம்மாவா மாமா? ”

” ஏய் , இந்த லொள்ளுதானே வேண்டாங்கறது! ”

” நானும் எங்கப்பாகிட்ட தீர்க்கமா சொல்லிட்டேன், அப்பவும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாரு ”

” பேசாம ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கலாமா? ”

” வேணாம் மாமா. ரெண்டு பேருமே இங்கே பெங்களூர்ல வேலை செஞ்சுகிட்டு கைநிறைய சம்பளம் வாங்கறோம், நம்மால தனியா வாழ்ந்து காட்டமுடியும்னு நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு! ”

” சரி, அப்ப இப்படிச் செய்யலாமா? ”

” எப்படி ? ”

” நம்ம வீட்டைத் தவிர மத்தவங்கல்லாம் நம்மை சப்போர்ட் பண்றாங்க. பேசாம நாமளே

கல்யாண மண்டபத்தை பிடிச்சு பத்திரிக்கையையும் அடிச்சிடலாம். உனக்கும் எனக்கும் ஒரே சொந்த பந்தம்தான். என்னோட சித்தப்பா மூலம் எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்திடுவோம். உங்கப்பாவை எதிர்த்துக்கிட்டு மண்டபத்துக்கு வர உன்னால முடியுமா? ”

” கவலையேபடாதே மாமா. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஊருக்கு போய் வேலையப்பாரு.

கல்யாணத்துக்கு முதல் நாள் நான் சின்னம்மா வீட்டுக்கு வந்துடறேன். யார் எதிர்த்தாலும் சரி கல்யாணத்தன்னிக்கு காலைல என் கழுத்தில நீ தாலி கட்டறே!… ”

” ம்ம்… அப்படி சொல்லுடி என் செல்லம்! ”



இரவு பொள்ளாச்சியிலிருந்த அம்மாவை போனில் அழைத்தாள் கீதா.

” அப்பா முடிவா என்னதான் சொல்றாரும்மா ? ”

” அவரு இதுக்கு சம்மதிக்கவே மாட்டாராம் ”

” அம்மா நானும் ரவி மாமாவும் … … … … இப்படி கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு செஞ்சிருக்கோம். உனக்கு சம்மதமா? ”

” இவ்வளவு தைரியமாடிஉனக்கு? உங்கப்பாவுக்கு தெரிஞ்சா மனசு ஒடஞ்சு போயிடுவாரு! ”

” போகட்டும்மா! உங்க சம்மதத்துக்காக இவ்வளவு வருஷமா நானும் காத்திருந்து காத்திருந்து நொந்து போயிட்டேன். இன்னிக்கு ரவியோட சித்தப்பா ஈரோட்டில மண்டபம் பார்த்து முடிச்சிட்டு பத்திரிக்கையும் அடிக்கச் சொல்லிட்டாரு!

பத்திரிக்கையை பார்த்துட்டு முடிவு செய்யுங்க. நீங்க கல்யாணத்துக்கு
சம்மதிக்கலைன்னாலும் ஊர்ல உலகத்துல உங்களப் பத்தி பேசமா இருக்கணும்னா கல்யாண மண்டபத்துக்கு வந்து வரவேற்புலயாவது நில்லுங்க! அப்பதாம்மா உங்களுக்கு மரியாதையா
இருக்கும். ”

” என்னடி இப்படி பேசற, நானா மட்டேங்கறேன், உங்கப்பாதான் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாரு”

” அது எனக்குத் தெரியாதா? இது தான் என்னோட முடிவு. நான் அப்புறமா கூப்பிடறேன்,வச்சுடறேம்மா.”

அடுத்து ரவியை அழைத்த கீதா அவனிடம்…

” மாமா படிச்சிக்கிட்டிருக்கியா? ”

” இல்ல இப்பதான் எங்கப்பாகிட்ட பேசி முடிச்சேன் ”

” என்ன சொன்னார்? ”

” நாம எடுத்த முடிவை சொன்னேன். பேசாம கேட்டவர் ” நீ இந்தளவுக்கு முடிவு பண்ணிட்ட இனி நான் சொல்லவும் செய்யறதுக்கும் என்ன இருக்கு? ஊர் உலகம் என்னைப் பேசாம இருக்க மண்டபத்துக்கு வந்து எல்லோரையும் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்கறேன்” என்றார். எங்கம்மா தான் தாம்தூம்னு குதிச்சுது!

” அப்ப அவங்க ஒரு வழியா வர்றாங்கன்னு சொல்றே, எங்கம்மாதான் அப்பா கிட்ட எப்படி சொல்றதுன்னு முழிக்கிறாங்க. பத்திரிக்கை பிரிண்ட் ஆகி வந்துடுச்சா? ”

” நாளை மாலை கிடைச்சதும் எங்க சித்தப்பா உங்க அம்மாகிட்ட தர்றேன்னு சொல்லிட்டாரு ”

” சரி நாளான்னிக்கு எங்க வீட்ல ஒரு பூகம்பம் இருக்கு! நடப்பது நடக்கட்டும். நான் தூங்கப் போறேன். குட் நைட் மாமா! ”

மறு நாள் இரவு கீதாவின் வீட்டில்…

” ஏங்க டேபிள்ல இருக்கற பத்திரிக்கைய படிச்சீங்களா ? ”

“ம்… படிச்சேன் படிச்சேன். உம்புள்ளைக்கு அதிகமா படிச்சிட்டமேங்கற திமிரு. கஷ்டப்பட்டு
படிக்க வைச்ச என் பேச்ச கேக்காம அவளா முடிவெடுக்கறா! ”

” ஏங்க அவ மேல கோபப்படுறீங்க! அவ என்ன ஊர் பேர் தெரியாதவனையா விரும்புறா ? உங்க தங்கச்சி பையனைத்தானே? ”

” ஆமாண்டீ எந்தங்கச்சி பையந்தா! ஆனா அவுங்கப்பன் ஒரு குடிகாரனாச்சே! ”

” ஆனா ரவிக்கு எந்த கெட்ட பழக்கமுமில்லேங்கறதினாலதானே கீதா அவனை விரும்புறா?”

” எனக்கு பிடிக்கல. நம்ம புள்ள தப்பான முடிவெடுத்துட்டா !”

” அவ சரியாத்தான் முடிவெடுத்திருக்கா ! ”

” என்ன நான் சொல்லச் சொல்ல எதுத்தா பேசற? ”

” இப்படிச் சொல்லி என் வாய மூடாதீங்க .நல்லா யோசிச்சு பாருங்க 25 வயசுப்பெண்ணு மூணு வருசமா உங்க கிட்ட போராடுறா அவனைத்தான் கட்டிக்குவேன்னு. இருவருக்கும் நல்ல வேலை நல்ல சம்பளம் ன்னு இருக்காங்க. உங்களுக்கு உங்க வரட்டு கவுரம் தான் முக்கியமா போச்சா? நம்ம பொண்ணு என்ன அவங்கூட ஓடியா போயிட்டா? ஊரறிய பத்திரிக்கை அடிச்சு நம்ம சொந்தக்காரங்க எல்லாரையும் அழைச்சிருக்கா! எல்லோரும் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கறதால நீங்க செய்ய வேண்டிய வேலைய அவுங்க செய்யறாங்க. அவளுடைய முடிவில் தெளிவாத்தான் இருக்கா. நீங்க தான் குழம்பிப் போயிருக்கீங்க! நான் இந்த கல்யாணத்துக்கு போறேங்க நீங்க வருவதும் வராததும் உங்க இஷ்டம்.”



இரவு 11 மணி…

” யாருக்குங்க போன் பண்ணறீங்க? ”

” பத்து நிமிசமா போன் போடறேன்,பிசியாவே இருக்கு! ”
” இந்நேரத்துல போய் யாரைத் தொந்தரவு பண்றீங்க?”

” ம்.. எம் பொண்ண ”

” எ..என்னங்க சொல்றீங்க? ”

” ஆமா நானே தான் சொல்றேன். அவனைத்தான் கல்யாணம் கட்டுவேன்னு மூணு வருசமா இவ சொல்றான்னா அவன் மேல இவ எந்த அளவிற்கு நம்பிக்கை வைச்சிருக்கணும்னு யோசிச்சேன். அவ நம்பிக்கை இனி வீண் போகக்கூடாதுன்னுதான் நானே முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு சொல்லப்போறேன்! ”

” உண்மையாவாங்க? நான் கனவு கினவு காணலியே! உங்களை நெனச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு! ச்சே! இந்த சந்தோஷ செய்திய சொல்ற நேரத்துல அவ போன் பிசியாவே இருக்கே! ”

” அப்படிப் போடு அருவாளைன்னானாம். அடியே இவளோட தம்பிக்கு உன் உறவுக்காரங்கள்ள யாராவது பொண்ணு கொடுக்கிறேன்னு வந்து அந்தப் பொண்ணை எனக்கு பிடிக்காமப் போனா; ‘ எங்க உறவுக்காரங்கன்னாலே உங்களுக்கு எளக்காரம்தா’-ன்னு நீ சொல்லக்கூடாதுங்கறதுக்காகத்தான் எனக்கு இஷ்டமில்லாத மாதிரி இவ்வளவு நாளும் நடிச்சுக்கிட்டிருந்தேன்.இப்ப நீ ரொம்ப வற்புறுத்தறதினாலேயே கீதாவை என் தங்கச்சிப் பையனுக்கு கட்டி வைக்க சம்மதிக்கற மாதிரி என் பொண்ணோட ஆசையை நிறைவேத்திட்டேன் ” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே…

“விடுடி அவ சந்தோசமா பேசிகிட்டு இருப்பா நாளைக்கு காலைல சொல்லுவோம்… நான் உன்ன பொண்ணு பார்த்துட்டு போய் நடந்தே உங்க ஊருக்கு வந்து எத்தனை நாள் ஓடையிலே பேசியிருப்பேன்..
நீ போய்த் தூங்கு” என்றார்.

எழுதியவர் : கணேஷ் கா (18-Jul-14, 11:44 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 166

மேலே