வெற்றியில் எனக்கு விருப்பமில்லை
விடாநம்பிக்கை கொண்டவர்கள் வெற்றியைத் தேடுவதில் ஆச்சர்யமில்லை. வெற்றி அவர்களுக்கு சாதனையின் இலக்கு. இலக்கு நோக்கி நகருவதில் தவறேதுமில்லை. ஆனால் தன்னம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் எனக்கு வெற்றியில் விருப்பமில்லை. ஒரு குறிக்கோளை இலக்காகக் கொண்டு வெற்றியைத் தேடி நகருவதில் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால் விருப்பமில்லை. ஆம், கிடைக்கும் வெற்றி என்னை ஊக்கப்படுத்தினால் மகிழலாம். ஒருவேளை தேடியது கிடைத்ததால் நான் மீண்டும் உழைக்க மறுத்தால் அந்த வெற்றி என்னைச் சோம்பேறியாக்குமே!
நான் தோல்வியடைகிறபோதும் மகிழத் துடிப்பேன்! ஆம் அந்த தோல்வி எனது அடுத்த முயற்சிக்கு போராடச் சொல்லிக்கொடுக்கும். எனது தோல்விகள் எனது உழைப்பை மேலும் அதிகப்படுத்தும். எனது தேடலை அதிகப்படுத்தும். எனது நம்பிக்கையை அதிகரிக்கும். எனது பார்வையை சீராக்கி நேராக்கும். எதிர்வரும் இன்னல்களை இடித்துப் பொடியாக்கும். பாழ்பட்ட நிலம் உளைச்சலையேத் தரும்! பண்பட்ட நிலமே விளைச்சலைத் தரும்!
எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். இளமையில் ஏழ்மையில் இருந்த அவனுக்கு அப்போது இருந்த இலக்கு ஒரு சொந்த வீடும் மகிழ்வூந்தும் (கார்). மிகக்கடினமாக உழைத்த அவனுக்கு அவையிரண்டும் 25 வயதிற்குள் கிடைத்துவிட்டது. மேலும் வேறு இலக்கு இல்லாததால் அப்போதே அவன் வாழ்வில் வெறுமை சூழ்ந்துக் கொண்டது. அவன் மீண்டும் வேறொரு இலக்கு நோக்கி நகரத் தொடங்கும்போதுதான் மீண்டும் மலர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. ஆக, அவனுக்கு கிடைத்த முதல் வெற்றி அவன் வாழ்க்கையை வெறுமையாக்கியது. இந்த வெற்றியால் அவனுக்கு கிடைத்த மகிழ்ச்சியை விட அதை அடைய அவன் போராடும்போது கிடைத்த மகிழ்ச்சியே மேலானது.
வெற்றிகள் எல்லைகள் போன்றது. அது பாதையின் முடிவு. அதற்குப்பின் எதுவுமில்லை. வென்றபின் செல்லப் பாதையில்லை. ஆனால் தோல்விகள் செல்லும் பாதையைப் போன்றது. வழி இருக்கும், வலியும் இருக்கும். தோல்விகளின் தேடல் வெற்றி இலக்கைக் கொண்டிருக்கட்டும். வெற்றி என்பது வானம்போல் இருக்க வேண்டும். வானம் கண்ணில் படும், ஆனால் எல்லை கிடையாது. எனது தோல்விகள் வானத்தை இலக்காக நோக்கி அழைத்துச் செல்வதாய் அமையட்டும். நான் என்று வானத்தின் எல்லையை அடைகிறேனோ அன்றே எனது முதல் வெற்றி பதிவாகட்டும். அன்று சொல்கிறேன் எனது அடுத்த இலக்கு என்னவென்று?