போராட்டம்

மகன்:
போர்..! போர்..!
கட்டிப்போட்ட கைகளோடும்
கலங்கிய இதயத்தோடும்
காத்திருந்த நாள் வந்துவிட்டது...!
விடைகொடு தாயே
வீரதிலகமிட்டு விடைகொடு…!
வீதியில் வீட்டிற்கு ஒருவன்
கொதித்தெழுந்துவிட்டான்…!
இனி மௌனம் காத்தது போதும்
கூனிக் குறுகி பின்னுக்கு
தள்ளப்பட்ட அவலம் போதும்…!
மதவெறிகொண்டு மார்புதுளைத்தனர்
நம் இனத்தை அன்று…!
எத்தனை அப்பாக்களும்
அண்ணன்களும் பலியானார்கள்,
களமிறங்கிய என் தந்தையையும்
தாரவார்த்துவிட்டாய் அன்று,
பதில் கிடைத்ததா உனக்கு..!
கலங்காதே தாயே – விடைகொடு
உன் இழப்புக்கும் உன் கண்ணீருக்கும்
விடைகண்டு வருகிறேன் இன்று..!
வண்ணக்கனுவுகளை கலைத்து
வறுமையை நிலயாக்கியவர்களை
ஒரு கை பார்த்துவருகிறேன்..!
பழிதீர்க்க என் கைகள் ஏந்திய
வாள் இன்று உறைபுகாது…!
வாழ்த்தி விடைகொடு தாயே..!

தாய்:
போய்வா மகனே போய்வா…!
கட்டுக்கடங்கி இருந்தது போதும்
கனவை நினைவாக்க போய்வா…!
வீட்டுக்கொரு படித்தவன்
இல்லையென்றாலும் பரவாயில்லை
வீரன் இருக்கிறான் போய்வா…!
அப்பாவையும் அண்ணனையும்
இழந்துவிட்டோம்
இனி உன்னையும் இழக்க
தயாரிகிவிட்டேன் போய்வா…!
என் இழப்பையும் கண்ணீரையும்
கண்ட நீ – என் உழைப்பையும்
வளர்ப்பையும் காணவில்லை
கவலையில்லாமல் போய்வா..!
விடைகாணும் நேரமடா இது
உன் எதிர்காலம் நமக்கு
தேவையில்லை போய்வா…!
உயிருக்கு உயிரே பழியடா
எந்த உயிரையும் கண்டு
மனமிரங்காதே
பயப்படாமல் போய்வா…!
உன்னுடன் விளையாடிய
வேற்றினத்து பிள்ளைகள் இருக்கும்
உன்னுடன் பள்ளிசென்ற
வேற்றினத்து நண்பன் இருப்பான்
பரிவு வேண்டாம் மகனே
நமக்கு நம் இனம்தானே முக்கியம்
கலங்காமல் போய்வா…!
உயிரை அழிக்க உரிமை
இல்லை உனக்கு என்று
மதபோதகம் அறிவூட்டினாலும்,
பாதகம் இல்லை மகனே
புத்தகத்தை சிம்மாசனத்தில்
அமர்த்திவிட்டு பஞ்சமின்றி
உயிர்களை அழித்துவா…!
ஏந்திய வீரவாளுக்கு
எத்தனை மனைவிகள் விதவையானாலும்
எத்தனை தாய்மார்கள் பிள்ளையிழந்தாலும்
எத்தனை பிள்ளைகள் குடும்பம் இழந்தாலும்
யாருக்கென்ன கவலை இங்கே
போய்வா மகனே போய்
பழிதீர்த்து விட்டுவா…!
எனக்கான கடைசி வேண்டுகோள்
என்னையும் உன்னோடு அழைத்துசெல்
உன் வீரத்தை கண்டு மெய்சிலிர்ப்பேன்
நான் சுமந்த உனக்கு ஆபத்தென்றால்
முன்சென்று உனக்காக உயிர்துறப்பேன்
நாளை விடியலிலாவது உனக்கு புரியட்டும்
மீண்டும் ஒரு இழப்பை பார்க்க
இந்த அவல தாய்க்கு தைரியமில்லை என்று…!


குறிப்பு: இந்த படைப்பு எந்த ஒரு மதத்தையும் மனிதரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை, புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

எழுதியவர் : சிவா (21-Jul-14, 1:16 am)
Tanglish : porattam
பார்வை : 196

மேலே