சிட்டி வந்த பட்டி
வீதிகள் எல்லாம்
நான்
வியப்புக்குறி கண்டபடி
இங்கே
விண்முட்டும் கண்ணாடி
கோட்டைகளின்
இரவு பிரதிபலிப்புகளில்
வானவில் வண்ணங்களை
கண்டு வாய்பிளக்கும்
சராசரி நான்...............!
நாகரீகம் என
கொளுத்தும் வெயிலில்
கழுத்தை இறுக்கி
கோர்ட் சூட் போட்டு
வியர்வை மறைக்க
திரவியம் போடும் கோமாளிகள் எல்லாம் சிரிக்கும் உடையை அணிந்தவன் நான்.............!
புதிதாய் முளைத்த
மூன்றாம் கையும்
வெள்ளை கருப்பு என
வித விதமாய் இருக்கும்
புது இரு காதும்
கொண்டு விசித்திரமாய்
திரியும் ஆறறவு விலங்குகளை
விளங்காதவன் நான்........!
உள்ளாடை எல்லாம்
வெளியே தெரியும்
உள்ளொன்றை வைத்து
வெளியே திரியும்
உலகமே இது என
மடிகணிணியில் விடியும்
ஒவ்வொரு திசைப்பார்க்கும்
புதுவித முடியும்
ஐம்பது வயதிலேயே
நடக்க துணையாய் தடியும்
அவசர அவசரமாய்
சுழலும் இவர்களின் நடையும்
கண்டு வியந்திடும்
காண்போர் எல்லாம்
பார்த்து சிரித்திடும்
சிட்டி வந்த பட்டி நான்............!