இருப்பில் சிறப்பீர் – இறப்பில் நிலைப்பீர்
பிரிவும் பிணியும்
முதுமையும் மரணமும்
தாங்கொணாத் துயரைத்
தருவது ஏன்?
பிறப்பது மறையும்
இணைவது பிரியும்
இன்பமும் துன்பமும்
இணைந்ததே வாழ்க்கை.
இயற்கை நியதி
இவையெனத் தெரிவீர்.
எவருக்கும் பொது
இவையென்றறிவீர்..
இறையின் உருவாய்
அவதரித்தோரும்
இயைந்தேயடங்கினர்
இவ்விதிக்குள்ளே.
அவருந் தப்பா
வினைவிளை விதியில்
எவரும் விலக்கம்
பெற்றிடப் போமோ?
வெற்றியென்கிறோம்
தோல்வியென்கிறோம்.
கொடுத்த விலை
கூடுதலாயின்
இரண்டிலுங் கிட்டும்
இறுதியில் வலியே!
துன்பமென்கிறோம்
இன்பமென்கிறோம்.
இன்பமும் ஒருகணம்
இறுதியைக் காண
இரண்டிலும் மிச்சம்
துக்கம் தானே!
பிறந்த கணமுதல்
கழிந்த காலத்தில்
இறப்பை நோக்கியே
எல்லோர் பயணமும்.
பிறக்கும் போதே
இறப்புச் சீட்டு
எல்லோர் கையிலும்
ஏந்தியே வந்தோம்.
இறுதிப் பயணம்
எல்லோர்க்கும் நிச்சயம்.
பயணத் தேதி
மட்டும் ரகசியம்.
வாங்கி வந்த
உடம்பும் கடனே.
சேர்த்ததெதுவும்
வாராதுடனே.
திரும்பவியலா
ஒருவழிப் பயணம்.
புரிந்து வாழ
தெளிவு பிறக்கும்.
இருக்கும் காலம்
இனிதே கழிய
பெரியோர் உபாயம்
பிறழறக் கொள்வீர்.
தேவைகளெதுவென
தெளிவாய் அறிவீர்.
அளவாய் ஆசை
கொள்வீர் – எதிலும்
தன்னிலைப் படுத்தல்
தவிர்ப்பீர் – எவரையும்
மிதித்து முன்னேற
விழையீர்.
கண்ணுங் கருத்துமாய்
கடமைகள் செய்வீர்.
வெற்றி தோல்வியை
இயல்பாய் ஏற்பீர்.
குறுகிய சிந்தனை
தவிர்ப்பீர் – என்றும்
குறுக்குவழி போக
எண்ணீர்.
பகிர்வதில் இன்பம்
கொள்வீர் – என்றும்
பறித்திட ஆசை
கொள்ளீர்.
மதித்து வாழ
விழைவீர் – உயிர்கள்
யாவும் சமமெனக்
கொள்வீர்.
கடமை செய்து
களிப்பீர் – இருக்கும்
காலம் வரைக்கும்
செறிப்பீர்.
இருக்கும் வரையில்
சிறப்பீர் - மனதில்
இறந்த பின்னும்
நிலைப்பீர்.

