கைபேசி எண்களுடன் இணையுங்கள்

அன்பு நண்பர்களே! தினமும் கைபேசி உபயோகிப்பவர்தனே நீங்கள்? அப்படியெனில் தயவு செய்து உங்கள் கைபேசி எண்களை நான் சொல்லும்படி மாற்றி அமையுங்கள்!
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் எண்களைப் பதியும்போது ,அவர்கள் உங்களுக்கு என்ன உறவோ அவற்றையும் சேர்த்துப் பதியவும்.நெருங்கிய நண்பர்களின் எண்கள் எனில் ,நண்பன்,தோழி போன்ற வார்த்தைகளை இணைத்துப் பதியவும்.இது பல ஆபத்தான தருணங்களில் உங்களுக்கு உதவும்.
இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றுதானே எண்ணுகிறீர்கள்? கடந்தவாரம் என் அலுவல் காரணமாக என் மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது எனக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரும் எதிரே வந்த இன்னொருவரும் ஒருவருக்கொருவர் வேகமாக முட்டிக் கீழே விழுந்தனர்.நான் வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக சென்று அவர்களைத் தூக்க முயன்றேன்.ஆனால் இருவருக்குமே முகம்,கைகள் கால்கள் என அனைத்து இடங்களிலும் அடிபட்டு ரத்தம் வடிந்தது.இருவருமே மயக்கமடைந்து சாலையின் நடுவில் படுத்திருந்தனர்.நான் உடனே 108-க்குத் தொடர்பு கொள்ள அவர்களும் உடனே வந்து விட்டனர்.அவர்களை மருத்துவ மனைக்கு அனுப்ப நான் முயன்றேன்.அப்போது வண்டியில் வந்தவர்கள் ,அடிபட்டவர்களின் உறவினர்கள் யாராவது உடன் வர வேண்டும் என்று கூற நான் அவர்களின் கைபேசிகளை எடுத்து அவர்களது மனைவி,அப்பா அம்மா என்று ஏதாவது எண்கள் உள்ளனவா என்று தேடிப்பார்த்தேன்.ஆனால் ,இருவரது கைபெசிகளிலுமே வெறும் எண்களும் பெயர்களும் மட்டுமே இருந்தது.
நான் ஒவ்வொரு எண்ணாக அழைத்துப் பார்த்ததில் ஒருவரது மனைவியையும்,இன்னொருவரது அம்மாவையும் தொடர்பு கொள்ள முடிந்தது.அரைமணி நேரத்தாமதத்தில் இருவரும் வந்து சேர்ந்தனர்.பின் அவர்களை வண்டியில் ஏற்றி அனுப்பினேன்.அவர்களின் எண்களைத் தொடர்புகொள்ள நான் மிகவும் சிரமப் பட்டேன்.
அவர்கள் சென்ற பின் எனக்குள் ஏதோ உறுத்தல் தோன்றவே என் கைபேசியை அலசி ஆராய்ந்தேன்.
நானும் கூட மனைவி பெயர் உட்பட அனைத்து எண்களையும் வெறும் பெயரையும் எண்களையும் மட்டுமே பதிந்திருந்தேன்.உடனே அவற்றை,மனைவி,மகன்,அப்பா,அம்மா,நண்பன் தோழி போன்ற அடைமொழிகளுடன் மாற்றினேன்.ஏனெனில்,விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் அல்லவா?நான் மாற்றி விட்டேன்.நீங்கள்..?

எழுதியவர் : கோவை ஆனந்த் (25-Jul-14, 6:52 am)
பார்வை : 149

மேலே