பைத்தியங்கள் பதில் சொல்லட்டும் - கவிஞர் குமரிப்பையன்
இருளில் சிறுமழலை
முனகலோசை...
இருட்டையும் கிழித்து
இருசெவியில்...
இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...
இருக்குமென
இதயம் சொன்னாலும்...
இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...
எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...
என்னவென்று
நான்சொல்ல...?
உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...
உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....
உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...
பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...
இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...
இலவசமாய் அவசரஊர்தி
மறுப்பின்றி இதோ
பொசுக்கென்று வந்ததம்மா...
இசையாய் சங்கூத
உயிரோடும் உயிரற்றும்...
இரு உடல்கள் சுமந்த
இயந்திர வண்டி...
இதோ செல்கிறது
இந்த இரவே சாட்சியம்மா...
பிறப்பிறப்பறியா
பெண்ணிவள் யாரென்று...?
பிறழ்சேர்க்கா நாமும் அறிந்து கொள்வோம்..!
பகலிலே பசியோடு
அலைகின்ற அபலையை...
பைத்திய பட்டமீன்று
பட்டினியை விரட்டாது...
கையால் கல்லடித்து
விரட்டிய ஓர்கூட்டம்...
அணிந்திருக்கும் கீறல்விழு
ஆடைக்கிடையில்...
அரைகுறையாய்
அலைபாயும் அங்கமதை...
அப்படியே கண்டு நின்ற
கழுகாய் ஓர்கூட்டம்...
உடற்பசியை இறக்கி வைக்க
ஊத்தமிகு உடல் தேடி...
அலையும் கயவர்
ஓர்கூட்டம்...
உறங்கும் இவள்
தெருக்கடை திண்ணையில்...
உறங்கிய இவளையும்
விட்டுவைக்கவில்லை...
உவமை சொல்ல
இழிவார்த்தை இல்லா...
உடல்கொண்ட இந்த
காம மிருககூட்டம்...
இலவசமாய்
இவர்களுக்கு கிடைப்பது...
கழிவறை
கழிவானாலும் விடாமல்...
இமைமூடா பசி தீர்க்க
இரவிலும் காத்திருக்கும்
இழிசாதி கூட்டமன்றோ...?
இவளை எப்படி விட்டுவைக்கும்..?
இன்று இதோ
இமைமூடி போனாளே...
இந்த இதயமில்லா
அரக்கர்களின்
இரக்கமற்ற வன்செயலால்...
பகலில் பைத்தியமென்று
கல்லெறிந்தான்...
பாவையென்று இரவில்
கட்டி புரட்டினான்...
படுபாவி பயலுக்கு
இவள் பைத்தியகாரி...
பருவ பெண்ணாய்
இவள் போதைக்காரி...
பாவையை பைத்தியமாய்
விழி மாற்றியதா...?
பாடையேறும் கயவனின்
சதை மாற்றியதா...?
மனிதமில்லா
கயவர்களே சொல்லுங்கள்...?
மனபிரம்மையான
அவள் பைத்தியமா..?
இல்லை.. .
விழிபார்வை இரண்டாக்கும்
இதயமில்லா நீங்கள் பைத்தியமா...?
இப்போது பதில் சொல்லுங்கள்....?
நீங்கள்தானே பைத்தியங்கள்...!
நீங்கள்தான் பைத்தியங்கள்..!
ஆம்...!
வைத்தியமே இல்லாத
இந்த வையகத்தின்
காம பைத்தியங்கள் நீங்கள்தான்....!
(குமரியாரின் படைப்பினில்
நான் நேசித்த படைப்பு இது.....
உங்கள் பார்வைக்காக மீண்டும்......)