பெருநாள் தொழுகை - நாகூர் கவி

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு விழா ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு தேர்வு செய்துள்ளான். அதில் ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். அபூதாவூத், பைஹகீ, நஷயீ போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

கடமையான ஃபித்ரா....

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான் தர்மத்தைக்கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ரமலானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தை கொடுத்துவிடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : நஷயீ.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் (ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இத்தகு ஈதுல் ஃபித்ர் ஈகைப் பெருநாள் என பெயரானது.

பெருநாள் தொழுகையின் நேரங்கள்......

ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகின்றான்.

அறிவிப்பவர் : அனஸ்பின் மாலிக் (ரலி)
நூல் : இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்பு பெருநாள் தொழுகையை நபி தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாகும்).

அறிவிப்பாளர் : ஜுன்துப் (ரலி)
நூல் : அஹ்மது இப்னுஹசன்

தக்பீர்.........

ஈத் பெருநாட்களை அல்லாஹ்வை புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகுபடுத்துங்கள்.

அறிவிப்பவர் : அனஸ்பின் மாலிக் (ரலி)
ஆதாரம் : நயீம்

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர் சொன்னவர்களாகப் புறப்படுவார்கள் தொழும் இடம் (முஸல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : ஹாகிம், பைஹகீ, இப்னு அஸாகீர்

பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக்கொள்வார்கள்.

ஆதாரம் : புகாரி

திடலில் பெருநாள் தொழுகை.........

பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள்.

அபூஹுரைரா (ரலி), அபூதாவூது, இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜூப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதை பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம் ) திரும்புவார்கள்.

ஜாபீர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறினார்கள். நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜூப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் நபி (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கி பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்கு போதனை செய்தார்கள்.
பிலால் (ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள்.

அறிவிப்பவர் : ஜாபீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
ஆதாரம் : புகாரி

ஓதிய வசனங்கள்......

நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளிலும் ஜூம்ஆத் தொழுகைகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா (87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸில் காஷியா (88 வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும் ஜூம்மாவும் ஒரே நாளில் வரும்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள் : முஸ்லீம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

50 வது அத்தியாயத்தையும் 54 வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லீம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஆதாரம் : அஹமத், இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும், பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றனர் என இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம் : புகாரி


அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்....!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : நாகூர் கவி (28-Jul-14, 12:12 am)
பார்வை : 403

மேலே